தெலுங்கானா மாநிலத்தின் அய்தராபாத் கோஷமஹால் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராஜா சிங். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சைக் கக்குவதில் பெயர் பெற்றவர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்.
இந்நிலையில், ராஜா சிங் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி காணொலிக் காட்சிப் பதிவு ஒன்றில் பேசுகையில், “நாம் இருவர், நமக்கு இருவர்’’ சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், ஒவ்வொரு இந்துவும் தனது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருப்பது அவசியமாகும்; துப்பாக்கிகள் இல்லாவிட்டால், இந்து சமூகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்; சொத்துகளோ அல்லது சகோதரிகள் மற்றும் மகள்களோ பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்; அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மூன்றுமடங்காக அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன; இத்தகைய மக்கள்தொகை மாற்றம், பாகிஸ்தானில் நடப்பதைப் போன்ற கொலைகள், மதமாற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இந்துக்களை ஆளாக்கும்; உத்தரப்பிரதேசத்தின் துப்பாக்கிக் கலாச்சாரம் எனக்குப் பிடித்துள்ளது.; அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது – அதேபோல்,இந்தியாவில் உள்ள ஒவ்வோர் இந்து வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கி இருக்க வேண்டும்; நாடு முழுவதும்உள்ள இந்துக்களின் ஆதரவுடனேயே மோடி பதவியேற்றார் – அவரது தலைமையின் கீழ் அனைத்தும் சாத்தியமாகும்” என முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறியை தூண்டும் வகையில் பேசினார்.
பேசி இருப்பவர் பிஜேபியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர். இவர் ஏதோ தானாக வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளார் என்று ஒதுக்கி விடமுடியாது.
ஆர்.எஸ்.எஸ். என்ற தாய் நிறுவனம் போட்ட வெறி பிடித்த கன்றுக்குட்டிகள் தான் பி.ஜே.பி., வி.எச்.பி., ஏ.பி.வி.பி. இந்து முன்னணி என்று 32 கிளை அமைப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றின் நோக்கம் ஒன்றே! இந்தியா ஒரே நாடு, சமஸ்கிருதமே ஆட்சி மொழி, ஹிந்து ராஷ்டிரம் என்ற இந்து ராஜ்ஜியத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று கூறப்படும் எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட ‘ஞான கங்கை’ (Bunch of Thoughts) என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘சில நேரங்களில் – நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் – அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்தான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழி வந்த பா.ஜ.க.வினர் – இந்தியா இந்து நாடு என்று கூறும் இந்தக் கூட்டம் மதவெறியோடு பேசுவது மட்டுமல்ல; செயற்பாட்டிலும் காட்டி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்தில் என்ன நடந்தது? முஸ்லீம்கள் விறகுக் கட்டை போல பேக்கரியில் எரிக்கப்படவில்லையா? நிறை மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல், குடலைக் கிழித்து சிசுவை அடித்துக் கொல்லவில்லையா?
450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான சங்கிகள் கூடி, பிஜேபி மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்படி அடித்து நொறுக்கவில்லையா?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? இத்தியாதி இத்தியாதி… இந்துமத வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் இந்துக்கள் ஒவ்வொருவரும் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
இந்துக்களுக்காக வக்காலத்து வாங்குவதுபோல் பேசும் பிஜேபியினர் அந்தப் போர்வையில் பார்ப்பன மேலாண்மையை உறுதிபடுத்தத்தான் என்பதை மறந்து விடக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் இந்துக்கள் தான் என்று நினைத்தால் – ஏற்றுக் கொண்டால் இடஒதுக்கீட்டை எதிர்ப்பார்களா?
குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல் ஆட்சியும், அதிகாரமும் பா.ஜ.க. கையில் உள்ளது. இதனை வீழ்த்துவதைத் தவிர மற்றவர்களின் நிம்மதிக்கும், வாழ்வுக்கும் இடமே இல்லை; உயிர் வாழ்வுக்கும் உத்தரவாதம் இல்லை; இல்லவே இல்லை!
