புதுடில்லி, நவ. 23- ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ‘தேசிய அனல் மின் கழகம்’ (என்டிபிசி), கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடத்திய ‘உதவி அதிகாரி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்)’ பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
என்டிபிசி நிறுவனத்தில் காலியாக இருந்த 15 உதவி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். 2 மணி நேரம் நடைபெற்ற இத்தேர்வில், மொத்தம் 120 கொள்குறி வகை (MCQ) வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்களும், தவறான விடைக்கு 0.25 எதிர்மறை (Negative) மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
தேர்வு முடிந்து இறுதிச் சுற்று நேர்காணலுக்கான முடிவுகளைத் தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ. 21) என்டிபிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஆட்சேர்ப்புக்கான தேர்வு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் செலுத்திய தேர்வர்களுக்கு மட்டும் அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும். கட்டணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இருப்பினும், மறுதேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த எந்தத் தகவலும் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.
வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டதால், பயணம் மற்றும் தங்குமிடத்திற்காகப் பெருமளவு பணம் செலவழித்துச் சென்று தேர்வெழுதியதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். நேர்காணலுக்காகக் காத்திருந்த வேளையில், திடீரெனத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளதாகத் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நடப்பாண்டில் நீட் – யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,675 மாணவர்களுக்கு சியூஇடி (CUET) தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. இந்த வரிசையில் தற்போது என்டிபிசி தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பது போட்டித் தேர்வர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
