டெக்கான் கிரானிக்கள், சென்னை:
* தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்க்கட்சிகளை இருட்டில் வைத்துள்ளது ஒன்றிய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற முயற்சிப்பதாகவும், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல். 1976-இல் இந்திரா காந்தி அரசு தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததையும், 2001-இல் வாஜ்பாய் அரசு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்ததையும் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் ரமேஷ், அதே அணுகுமுறையைப் பின்பற்றி 2026-க்குப் பிறகான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடியும் வரை மறுவரையறையை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
* நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பும் இல்லை; மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து 100 நாட்கள் ஆகியும் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு சட்ட ஆலோசனை: அமைச்சர் நிர்மல் குமார். நவம்பர் 24-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அரசின் முடிவு அறிவிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தாலும் மதம் கடந்த திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது: சென்னை உயர்நீதிமன்றம். ஹிந்து – கிறிஸ்தவர் இடையிலான திருமணத்தை இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் அல்லது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* காவிரி நீர்ப் பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமரிடம் வலியுறுத்துக – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை. கருநாடகத்திடம் இருந்து 11 டி.எம்.சி. தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கவலை தெரிவித்த ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமரிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தி ஹிந்து:
*நீதிபதி குரியன் குழு கலைக்கப்பட்டது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை: குழு உறுப்பினர் அசோக் வர்தன்: ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழுவின் உறுப்பினரான ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி, குழு கலைக்கப்படுவது குறித்து தமக்கோ, குழுத் தலைவர் நீதிபதி குரியன் ஜோசப்புக்கோ முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
* தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்க பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். முயற்சி: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தி, குறிப்பாக தமிழ்நாட்டில் மதப் பதற்றத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி மற்றும் பிற அமைப்புகள் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
தி டெலிகிராப்:
* காலிஸ்தான் ஆதரவு தலைவர் பன்னூன் வழக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முன்னாள் ‘ரா’ தலைவர் சமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஹேக் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி, டெல்லியின் மூன்று நீதிமன்றங்களுக்கு (பாட்டியாலா ஹவுஸ், தீஸ் ஹசாரி, துவாரகா) FEDEX மூலம் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. இந்திய நீதிமன்றங்கள் மூலம் இரு அதிகாரிகளுக்கும் சட்ட ஆவணங்களை வழங்குவதற்கு உதவுமாறு நீதிபதி கேத்ரின் போல்க் ஃபைலா கோரியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி. மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தினார். நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து ஒன்றிய அரசு தெளிவின்மையை கடைப்பிடிப்பதாகவும் விமர்சனம்.
– குடந்தை கருணா
