சென்னை, நவ.22 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, புழல், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது.
இந்த ஏரிகளுக்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில், அதிக நீர்வரத்து கிடைக்கிறது. அத்தகைய நேரங்களில், ஷட்டர் களை திறந்து, அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வெள்ளச் சேதம் ஏற்படுகிறது. எனவே, ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை ‘ஸ்காடா’ எனப்படும் நவீன மென்பொருள் சென்சார் வாயிலாக, இணைய வழியில் கண்காணித்து, உபரி நீர் திறப்பை மேலாண்மை செய்ய, முந்தைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது.
இந்த திட்டம், 31 கோடி ரூபாய் மதிப்பில், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மய்யம், சென்னை, காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் அருகே, அய்.என்.எஸ்., அடையாறு கடற்படை வளாகத்தில் உள்ள, நீர்வளத்துறை அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
துணைக் கட்டுப்பாட்டு மய் யங்கள், தொடர்புடைய ஏரிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள மென் பொருள் சர்வர்கள் வாயிலாக, ஏரிகள் 24 மணிநேரமும் சி.சி.டி.வி., கேமரா வாயிலாக கண் காணிக்கப் படுகின்றன.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மய்யத்தில் இருந்து, தேவைப்படும் போது, ஏரிகளின் மதகு கதவுகளை, ‘இணைய’ வாயிலாக திறந்து, நீரை வெளியேற்ற முடியும். இந்த நடைமுறையை, நீர்வளத் துறையின் 90 அணைகளிலும் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை குடிநீர் ஏரிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள, ‘ஸ்காடா’ திட்டம், வெற்றிகரமாக செயல்படுகிறது. இதை மற்ற அணைகளுக்கும் விரிவுப்படுத்த, தொடக்க கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பணியை முடிக்க, குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் ஆகும். திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் உள்ள அணைகளை, சென்னை யில் இருந்தபடி கண்காணிக்க முடியும்.
மேட்டூர் அணையை பாச னத்திற்கு திறக்க, முதலமைச்சர் நேரில் செல்ல வேண்டியது இல்லை. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மய்யத்திற்கு வந்து, பட்டனை தட்டி, மேட்டூர் அணையில் நீரைத் திறக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
