‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில்
மூத்த வழக்குரைஞர் – மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்!
‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் குழுவைக் கலைத்தது, தமிழ்நாட்டின் மாநில சுயாட்சிப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும்!’’ என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் மூத்த வழக்குரைஞர் – மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் எழுதிய கட்டுரையின் தமி ழாக்கம் வருமாறு:
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஒன்றிய – மாநில உறவு கள் குறித்து ஆராய மாண்பமை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை, நவம்பர் 06,2026 அன்று தேதியிட்ட அரசாணை வாயிலாக கலைத்துள்ளது.
அரசின் இந்த முடிவானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி யுள்ள கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சிக்காக பல ஆண்டுகளாக தமிழ்நாடு முன்னெடுத்து வரும் போராட்டத்தின் அடிநாதத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது.
இக்குழுவைக் கலைக்க எடுக்கப்பட்ட முடிவும், அதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களும் முற்றிலும் பொருத்த மற்றவை. முதலாவதாக, நீதியரசர் குரியன் ஜோசப் குழுவானது சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல என்றும், இரண்டாவதாக, அதன் செயல்பாடுகள் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில சட்ட ஆணையம் என்பது ஒரு அரசாணையின் மூலம் அமைக்கப்பட்ட, பொதுவான சட்டச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பாகும். மாறாக, நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழு என்பது ஒன்றிய – மாநில உறவுகள், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை மட்டுமே மய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவ– அரசியலமைப்புச் சட்ட முன்னெடுப்பாகும். ஒன்றிய சட்ட ஆணையம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்தபோதிலும், ஒன்றிய அரசே கடந்த காலங்களில் சர்க்காரியா ஆணையத்தையும், பூஞ்சி ஆணையத்தையும் அமைத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தமிழ் நாடு அரசே, நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத அமைப்பு எனக் குறிப்பிட்டு, அதையே அக்குழுவைக் கலைப்பதற்கான காரணமாக முன் வைத்துள்ளது. ஆனால், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம் மற்றும் பூஞ்சி ஆணையம் ஆகியவையும் எந்தவொரு தனிச் சட்டத்தின் கீழும் அமைக்கப்படாமல், அரசின் நிர்வா கத் தீர்மானத்தின் மூலமாகவே அமைக்கப்பட்டவை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், குரியன் ஜோசப் குழுவின் பணிகள் மாற்றி ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படும் மாநில சட்ட ஆணையமும் அரசின் நிர்வாக உத்தரவின் மூலமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானே தவிர, தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல.
மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்து வம் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை வலியுறுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இவை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உத்தரவாதங்களாகும். இவை புதிதாக உருவாக்கப்பட்ட கருத்துகளோ, அரசியல் விருப்பத்தின் அடிப்படையிலான தற்காலிக முழக்கங்களோ அல்லது திமுகவின் தனிப்பட்ட அரசியல் நோக்கமோ அல்ல. மாறாக, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவை மறுவரையறை செய்து, உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டும் நோக்கில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆழமாக வேரூன்றி முன்வைக்கப்படும் கொள்கைகளாகும்.
மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா விளங்குகிறது என்றும், அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஆட்சி அமைப்புகளில் ஒன்றாகத் திகழும் ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளும் அதிகார வரம்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. மாநிலங்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, அவற்றின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட சூழலில், அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
மு. கருணாநிதி அவர்கள், செப்டம்பர் 1969 இல் நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த இக்குழு, 1971 ஆம் ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குதல், நிதிப் பகிர்வில் மாநிலங்களின் பங்கை அதி கரித்தல், கூட்டாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பரிந்து ரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1983 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீதிபதி எம்.என். வெங்கடாசலையா தலைமையில், அரசியலமைப்பின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர், 2007 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்டது. ஒன்றிய– மாநில உறவுகளை மறுஆய்வு செய்தல், ஒன்றிய அரசின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான கட்டமைப்பு ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றின் மூலம், இந்த ஆணை யங்கள் இந்தியக் கூட்டாட்சித் தத்து வத்தின் வடிவமைப்பிலும், அதனை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின.
அரசியலமைப்புச் சட்டம் குறித்த தேசிய அளவிலான மறுஆய்வு கடைசி யாக 2010 ஆம் ஆண்டில் நடை பெற்றது. அதன்பிறகு, நாடு பல்வேறு முக்கியமான மாற்றங்களையும், சவால்க ளையும் சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி அறிமுகம், திட்டக்குழு கலைப்பு, ஜம்மு–காஷ்மீர் மாநிலம் ஒன்றியப் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது, நீட் தேர்வு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னெடுப்புகள், விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறை,புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மாநிலங்களின் நிர்வாகத்தில் ஆளுநர்களின் தொடர்ச்சி யான தலையீடுகள் எனப் பல்வேறு சவால்களும் உருவாகியுள்ளன. ஆனால், இவற்றில் எதுவுமே சர்க்காரியா ஆணையம் அல்லது பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்ட காலகட்டத்தில் விவா தத்திற்கு உட்பட்டவையாக இருக்க வில்லை.
அதனால்தான், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமை களையும் பாதுகாக்கும் உயரிய நோக்கோடு நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைத்தார்.
ஒன்றிய– மாநில உறவுகளை நிர்வ கிக்கும் அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் அர சாணைகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்திய நீதியரசர் குரியன் ஜோசப் குழு, இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் மீளாய்வு செய்தது. தொடர்ந்து, 2026 பிப்ரவரியில் தனது அறிக்கையின் முதற்பகுதியைச் சமர்ப்பித்த நிலையில், அது சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே, தற்போது தமிழ்நாடு அரசு இக்குழுவைக் கலைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் தொகுதிக்கான பணிகள் ஏறக்குறைய 60 முதல் 70 சதவீதம் வரை முடிவடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கும் சூழலில், இக்குழுவைக் கலைக்க வேண்டிய கட்டாயம் முதல மைச்சர் விஜய் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது?
மாநில சுயாட்சியையும், கூட்டாட் சித் தத்துவத்தையும் ஒரு அரசு கைவிடு வதற்கும், மற்றொரு அரசு தனது விருப்பத்திற்கேற்ப மீண்டும் அதனைக் கையில் எடுப்பதற்குமான அரசியல் சொத்துகள் அல்ல.
அவை ஒவ்வொரு அரசும் கடைப்பிடித்துப் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்டக் கடமைகளாகும். ஆட்சிகள் மாறலாம்.. ஆனால், மாநில சுயாட்சியையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ வேண்டும். அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டமும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
எனவே, நீதியரசர் குரியன் ஜோசப் குழுவைக் கலைத்தது தொடர்பான தனது முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
“நெருக்கடி என்ன?”
இரண்டாவது தொகுதிக்கான பணி களில் ஏற்கெனவே 60–70 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், அந்தக் குழுவைக் கலைப்பதற்கான நிர்ப்பந்தம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது?
