மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி


வில்லியம் பென்டிங் பிரபுவின் சட்டம் பற்றி ராஜீவ் காந்தியின் சட்டத்தில் குறிப்பிடவில்லையென்றாலும் அந்த சட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.”சதி”என்பது மனித இயல்பின் அருவருக்கத்தக்க ஒரு நிகழ்வு”என்ற 1987 சட்டம், பென்டிங்கின் சட்டத்திலிருந்து கலாச்சார நடுநிலையை அப்படியே எடுத்துக் கொண்டது.”சதி”என்பது இன்றியமையாத கடமையென இந்துக்களின் மதமே கூறவில்லை”என்ற வில்லியம் பென்டிங்கின் கருத்தையும் அப்படியே எழுதியது.ஆனால் பென்டிங்கின் சட்டம் “இந்து மதம்”என்று கூறியதற்கு பதில் “எந்த மதமும்” என்று எழுதப்பட்டிருந்தது.ஆனாலும் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இந்த பெண்களை கொலை செய்யும் “சதி”இல்லை.
வில்லியம் பென்டிங் சொற்களை 1987 ஆம் ஆண்டு சட்டம் அப்படியே கையாண்டது.ஆங்கிலேயக் காலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட ஒரு நாடு, ஆதிக்கம் செலுத்தி வந்த நாட்டுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த நாடு கொடுத்த புகழுரை போன்று இந்த சட்டம் அமைந்தது. அதேபோல விடுதலையடைந்த பின்பும்”சதி”பற்றிய பிரிட்டிஷ் அரசின் கருத்துக்கு தார்மீக, மத ரீதியிலான கருத்துக்கு மாற்றாக சிந்திக்கவில்லை. சுதந்திரமடைந்த இந்தியா என்பதையும் 1987 சட்டம் உணர்த்தியது. (சான்று :”சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)
1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. “சதி” வழக்கத்தால் பெண்களை உயிரோடு நெருப்பில் தள்ளிக் கொன்ற கொடிய பழக்கம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.முன்பு அங்கொன்றும்,இங்கொன்றுமாக திருட்டுத்தனமாக இந்த செயல்கள் நடந்தது முழுமையாக நின்று போனது. ‘சதி’யை ஆதரித்த ஸநாதனிகள் வாயடைத்து அடங்கிப் போயினர்.ஒரு நீண்ட போராட்ட ஏறத்தாழ (1829 முதல் 1987 வரை) 158 ஆண்டுகள் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.இளம் பெண்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டன.
இன்று நாட்டில் “சதி” என்ற பெண்களை கொல்லும் பார்ப்பனர்களின் சதி ஒரு வழியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஸநாதனச் சேற்றில் புதைந்து கிடந்த பார்ப்பனக் கூட்டம், கணவனை இழந்த பெண்கள் ஒழுக்கம் தவறி விடுவார்கள் என்று எழுந்த அச்சத்தின் காரணமாக எழுப்பப்பட்ட அவலமே இந்த “சதி” என்ற சதி! அதை அப்பட்டமாக வெளியே சொல்லாமல், பெண்களை “உடன்கட்டை” என்று கூறி எரித்துக் கொன்றது பார்ப்பனக் கூட்டம். அந்தக் குடும்பத்து அப்பாவிப் பெண்களும் “கடவுளாகி விடலாம்”, “சொர்க்க லோகப் பதவியடையலாம்” என்றெல்லாம் கூறப்பட்டு மூளைச் சலவைக்கு ஆளாக்கப்பட்டதால் அவர்களும் அந்தக் கொடுமையை மனதார ஏற்றனர். ஸநாதனத்தின் பேரால் உலகில் எங்குமே நிகழாத இந்த கொலைகள் இறுதியில் ஆங்கிலேயர்களால் தான் தடுத்து நிறுத்தப் பட்டது. அதன் “மிச்ச, சொச்சங்களும்” அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் முடித்து வைக்கப்பட்டது. “சதி” என்ற பெயரால் ஏற்கெனவே ஆயிரக் கணக்கான பெண்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையிலிருந்து பெண்களைக் காப்பாற்றி வாழ வைத்தவர்கள் வில்லியம் பென்டிங் பிரபுவும், அதன் பிறகு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும்தான்.
‘இந்து மதம்’ என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களின் “வேத மதத்தில்” பெண்கள் என்பதற்கு ஒரே பொருள்தான். அவள் ஒரு “பொருள்”! அவளுக்கென்று எந்த உரிமையும் இல்லாதவள், “விபசார தோஷம்” உடையவள், வீட்டு வேலைகள் செய்யும் “குடும்பத் தேவைக்காரி”, “பிள்ளை பெறும் இயந்திரம்” என்பதைத் தவிர வேறு எந்த விதமான தனிப்பட்ட உரிமைகளும் பெற்றவளல்ல என்றே பார்ப்பனர்களின் வேதங்களும், மனுஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும் சமூகத்தில் நிலை நாட்டி விட்டன.
“விபசார தோசமுடையவர்களாக அவர்கள் இருப்பதாக எண்ணியதால்தான் கணவன் இறந்து விட்டால் பெண் கற்பிழந்து விடுவாள் என்ற ஆணாதிக்கத் திமிரினால்தான் “சதி” பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. நல்ல வேளையாக அரசாங்கத்தின் சட்டங்கள் அதை ஒழித்து பெண்களுக்கு வாழ உரிமை வாங்கிக் கொடுத்தது.
(முற்றும்.)
