புதுடில்லி, நவ. 20- அமெரிக்க நிறுவனமான ‘டைம்’ இதழ் முதல் முறையாக இந்தியாவின் மற்றும் உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 இந்தியர்களின் பட்டியலை நேற்று (19.11.2026) வெளியிட்டது. இதில், பாலிவுட் நட்சத்திரங்களான் ஆலியா பட், விக்கி கவுஷல், கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி, எழுத்தாளர் மீனாகந்தசாமி பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தமிழ்நாடு செஸ் விளையாட்டு வீரர் டி.குகேஷ், நடிகைகள் சமந்தா, நயன்தாரா, சாய் பல்லவி, இயக்குநர் பா.ரஞ்சித், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இயின் புதிய டிஜிட்டல் தேர்வு மதிப்பீட்டு முறையில் இருந்த குளறுபடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திய கணினி அறிவியல் மாணவர் சார்த்தக் சித்தாந்த்தும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
‘டைம்’ இதழின் முதன்மை ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் கூறுகையில், ‘‘இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் இளமையான மக்கள் தொகையைக் கொண்ட நாடு. 2030ஆம் ஆண்டிற்குள், உலகளவில் பணிபுரியும் வயதில் உள்ளவர்களில் ஒவ்வொரு அய்வரில் ஒருவர் இந்தியராக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறை இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் வடிவமைக்கப்போவதில்லை. இவர்களின் கருத்துகள், லட்சியங்கள் மற்றும் தலைமைத்துவம் உலகையே வடிவமைக்க உதவும்’’ என்றார்.
