மதுரை, நவ.20- காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பிய காவல்துறை ஆய்வாளர், துணை ஆய்வாளர் இருவரையும் பணீ நீக்கம் செய்து தென்மண்டல காவல் துறைத்தலைவர் விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் எம். கவுதமன். இவர், கடந்த 2025-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண் ஒருவரின் செல்பேசி எண்ணைப் பெற்று, அந்த பெண்ணிடம் அடிக்கடி செல்பேசியில் பேசி கவுதமன் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி என்ற முறையில், ஆய்வாளர் கவுதமனை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து தென்மண்டல காவல் துறைத்தலைவர் விஜயேந்திர பிதாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பழநி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிதடி பிரச்சினை தொடர்பாக, கடந்த மே மாதம் நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த துணை ஆய்வாளர் ராஜகோபாலை சந்தித்து, புகார் அளித்தார். அதன் பேரில், துணை ஆய்வாளர் ராஜகோபால் விசாரணை நடத்தினார். பின்னர், அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ராஜகோபால் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மே 24-ஆம் தேதி அவர் ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றப்பட்டார். அன்றைய நாளே டிஅய்ஜி உத்தரவின்பேரில் ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலான நிலையில், நேற்று முன்தினம் ராஜகோபாலை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி உத்தர விட்டுள்ளார்.
