சென்னை, நவ.19 தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் நிதி நிர்வா கத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வரவு – செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கை களை இணையதளத்தில் வெளியிட உத்தர விடக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. எஞ்சிய கோயில்களின் அறிக்கை விவரங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என்றும், முழுமையான தணிக்கை அறிக்கைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முழுமையான தணிக்கை அறிக்கைகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்களில்கூட இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள் இல்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, தணிக்கைக்கு உட்பட்ட கோயில்களின் அறிக்கை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியை இரண்டு மாதங்களுக்குள் முடித்து விடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். அவரது வாக்குறுதியைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 18 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
