சென்னை, நவ.19- திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாசப் பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஅய்க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி திமுக சட்டப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று (18.11.2026) நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ, ‘திமுக தலைவர்களை இழிவுபடுத்தி அவதூறாக சித்தரித்து சமூக வலைதளைங்களில் பதிவிடும் தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு எதிராக எத்தனை புகார்கள் அளித்தாலும், அவற்றின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’ எனக் குற்றம் சாட்டி சமூக வலைதளப் பதிவு தொடர்பான புகைப்படம் ஒன்றை நீதிபதியிடம் காண்பித்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, இதுபோன்ற பதிவுகளை பதிவிடும் நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ‘இந்த பதிவுகளால் நிச்சயம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். தங்களது தலைவர்களுக்கு எதிரான பதிவுகளைப் பார்க்கும் கட்சியினர் நிச்சயம் ஆத்திரமடையக் கூடும்’ என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் அருண் அன்புமணி, ‘திமுகவினருக்கு எதிரான ஒரு பதிவு தவிர மற்ற அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது ‘எக்ஸ்‘, பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், இதுபோன்ற ஆபாச மற்றும் அவதூறு பதிவுகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருவதாக விளக்கமளித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.23-க்கு தள்ளி வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
அக்டோபர் மாதத்தில் மட்டும்
16 பேர் சாலை விபத்தில் மரணம்!
16 பேர் சாலை விபத்தில் மரணம்!
காஞ்சிபுரம், நவ. 19- சட்டம் –- ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நேற்று (18.11.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாலாஜாபாத் வட்டம் வல்லப்பாக்கம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் சுரங்கப்பாதையை ஒட்டி மாற்றுப்பாதை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரகடம் அருகே வாரணவாசி தொழில் வளாகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், கனரக வாகனங்கள் வாரணவாசி முதல் தென்னேரி அகரம் வரையிலான குறுகிய கிராமச் சாலையைப் பயன்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறீபெரும்புதூர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் இடையூறுகள், தண்டலம் – கீவளூர் சாலை, பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை ஆகியவற்றில் உள்ள பழுதுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டம் நையாண்டிபாக்கம் – இளையனார் வேலூர் சாலையில் செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுவரும் பாலப் பணிகளை விரைந்துமுடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விபத்து புள்ளி விவரங்கள்
இந்தக் கூட்டத்தில் சாலை விபத்துகள் தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 373 விபத்துகளும், அக்டோபர் மாதத்தில் 342 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.அக்டோபர் மாத விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில்,அக்டோபரில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செ.அரவிந்த்,மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யசிறீ, கூடுதல் ஆட்சியர் ஆஷிக் அலி, சார் ஆட்சியர் தி.புவ னேஷ் ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
