டிச. 9-இல் எஸ்.அய்.ஆருக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 18- எஸ்.அய்.ஆர். நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராகுல் காந்தி உள்பட பலரும் தாக்கல் செய்த மனுக்கள்மீது விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் தாக்கல் செய்த மனுக்கள் மீது 9.12.2026 அன்று விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதி மன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று (17.11.2026) நடைபெறவிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதை 9.11.2026 அன்று தேதிக்கு ஒத்திவைத்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடந்தாண்டு முதல் எஸ்அய்ஆர் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பல கோடி தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதனிடையே, எஸ்அய்ஆர் நடவடிக்கை தொடர்பான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உத்தரவுகளுக்கு கடந்த 10 மாதங்களில் 14 முறை தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சாந்து விவேக் ஜோஷி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்ததாக  செப்.15-ஆம் தேதி அன்று தகவல் வெளியானது. மேலும், எஸ்அய்ஆர் தொடர்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக மேற்கொண்டதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.

இது நாடு முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, எஸ்அய்ஆர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தரப்பில் தலைநகர் டில்லியிலும், பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் 248 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எஸ்அய்ஆர் தொடர்பான முடிவுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுக்கவில்லை. அது தொடர்பான அனைத்து முடிவுகளும் சட்டப்படி, ஒரு மனதாகவே எடுக்கப்பட்டன. மேலும், படிவம் 6-இல் தேர்தல் ஆணையம் தரப்பில் மாற்றங்கள் மேற் கொள்ளப்படவில்லை. அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்அய்ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 16.11.2026 அன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் புதிய மனுக்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

இதையடுத்து, எஸ்அய்ஆருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது டிச.9-ஆம் தேதி விசாரணை நடைபெறுமென தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *