அரசு தடைசெய்த நச்சு மரத்தை நெடுஞ்சாலைத் துறையே வளர்ப்பதா?

சிறப்பு புத்தக சலுகைகள்

உலகின் ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரினங்கள் உருவாகும்; பரிணாம வளர்ச்சி பெறும். அவற்றின் உணவும், தகவமைப்பும், அவற்றின் இனப்பெருக்கமும் அதன் அடிப் படையில் தான் அமையும்.

வெகுசாதாரணமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குளிர் பிரதேசத்தில் வசிக்கும் ‘பென்குவின்’ போன்ற உயிரினத்தால், வெப்பப் பகுதியில் வாழ இயலுமா? ஒரு பாண்டா கரடியால் இந்திய வெப்பத்தில் தாக்குப்பிடிக்க முடியுமா? இதே போலத்தான் தாவரங்களும், மீன் வகைகளும் கூட!

சில உயிரினங்களில் புதிய சூழலில் மடிந்துபோகும். சில உயிரினங்கள், வேற்று நாட்டின் புதிய சூழலைத் தங்களுக்கேற்றவாறு மாற்றத் துடிக்கும். அப்போது அது அப் பகுதியின் இயல்பான உயிர் வாழ்வியலைப் பாதிக்கும். இந்தப் புரிதலுடன் தான், வெளிநாட்டுத் தாவரங்கள், விலங்குகள், மீன் வகைகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவதை எச்சரிக்கையுடன் அரசுகள் தடை செய்கின்றன.

ஒரு காலத்தில் மக்களின் ஏழ்மை நிலையில் விறகுக்குப் பயன்படும் என்று ஹெலிகாப்டரில் விதை தூவி வளர்க்கப்பட்ட சீமைக் கருவேல மரங்கள், இந்த மண்ணுக்கே நச்சாகிவிட்டன என்று உணர்ந்து, அதை அழிப்பதற்கு இன்று படாதபாடு படுகிறோம். இம் மரங்களை அகற்றும் பணிகளைத் தாமதப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் எச்சரித்துள்ளதுடன், பணிகளைக் கண்காணிக்க வருவாய்த்துறைச் செயலாளரை முதன்மை அதிகாரியாகவும் நியமித்தது என்றால் இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.

கடந்த 1980-1990-களில் பார்த்தீனியம் (Parthenium hysterophorus) என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடும் ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு நச்சுச்செடி என்பதை உணர்ந்ததாலும், அது மற்ற பயிர்களை வளரவிடாமல் தடுத்து, சுற்றுச்சூழலை நாசம் செய்வதாலும், இதனை முழுமையாக அழிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசாங்கமும் விவசாயத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. இன்றும் அதன் நச்சு விளைவுகள் முழுவதும் தீரவில்லை.

அதே போல இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘ஆப்பிரிக்கன் கெழுத்தி’ என்ற வகை மீனை, வணிக நோக்கத்திற்காகச் சிலர் இந்தியாவுக்குள் வளர்க்க ஆரம்பித்ததால், அது இந்த நிலத்தில் உள்ள நீர்நிலைகளின் இயல்பான மீன்வகைகளை அழித்துக் கொண்டிருக்கிற ஆபத்தை – அச்சுறுத்தும் நிலையை இன்றும் எதிர்கொண்டு வருகிறோம்.

இப்போது புதிதாக மேலும் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது. அதன் பெயர் ‘கோனோகார்பஸ்’. இது கோப்ரிடசீஸ் குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் இரண்டு இனங்களைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரப் பேரினமாகும். இந்த பேரினத் தாவரத்தில் ஓர் இனம் அலையாத்திப் பகுதியிலும் (காடுகள்) மற்றொன்றானது தென் செங்கடல் பகுதிகளிலும் வளர்கின்றன. ஒன்று முதல் இருபது மீட்டர் உயரத்திற்கு அடர்ந்த புதராக வளரக்கூடியது. இது குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தடைசெய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசும் தடை செய்துவிட்டது.

இதன் பூக்களில் இருந்து வெளியாகும் மகரந்தம் ஆஸ்துமாவையும், ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இதன் வேர்கள் 50 மீட்டர் ஆழம் வரை சென்று, நகரப்புற உட்கட்டமைப்புகளான தொலைத்தொடர்பு சேவை கேபிள்கள், கழிவுநீர், குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்துகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பதால் தான் தமிழ்நாடு அரசும் 2025-ஆம் ஆண்டு இதனைத் தடை செய்தது.

ஆனால், தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் இருக்கும் மீடியன்களில் இச் செடி வளர்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. கும்பகோணம் முதல் தஞ்சை வரையிலான நெடுஞ்சாலைகளின் நடுவில் ஏராளமாக இம் மரம் நடப்பட்டிருக்கும் செய்தி சில சமூக ஊடகங்கள் வழியாக ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட, மனித உயிருக்கே ஆபத்தான மரத்தை அரசின் நெடுஞ்சாலைத் துறையிலேயே வளர்ப்பது எந்த வகையில் நியாயம்?

இதைப் பராமரிக்கும் பொறுப்பு யார் வசம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது? அரசிடமா? தனியார் பொறுப்பில் இருக்கிறதா? அப்படியென்றால், இந்த மரங்களை நடுவதற்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த மரங்கள் உடனடியாக அழிக்கப்பட வேண்டும்.

சுற்றுச் சூழல் காப்பு என்பது, இவருக்கு அவருக்கு என்றில்லை; எல்லோருக்கும் முக்கியமானது. மனித குலம் நோயின்றி தழைத்திருக்க அவசியமானது. அரசு இதில் முக்கியக் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *