உயர்நிலைக் குழுவின் ஆய்வு அறிக்கையின் முதல் தொகுதி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது!
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றக்கூடிய ஓர் அரசாங்கமாகத்தான் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது!
த.வெ.க. அரசு தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறது!
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றக்கூடிய ஓர் அரசாங்கமாகத்தான் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது!
த.வெ.க. அரசு தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறது!
சென்னை, நவ.17 நீதிபதி குரியன் ஜோசப் தலை மையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஆய்வு அறிக்கையின் முதல் தொகுதி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், குழுவைக் கலைத்ததைவிட, அந்த அறிக்கையும் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு நீக்கப்பட்டி ருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றக்கூடிய ஓர் அரசாங்கமாகத்தான் இருக்கிறார்களா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இவர்கள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றார் தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள்.
- உயர்நிலைக் குழுவின் ஆய்வு அறிக்கையின் முதல் தொகுதி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது! தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றக்கூடிய ஓர் அரசாங்கமாகத்தான் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது! த.வெ.க. அரசு தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறது!
- சிறப்புக் கருத்தரங்கம்
- முதல் குரல் பெரியார் திடலிலிருந்துதான் எழுப்பப்படுகிறது!
- எனது நெஞ்சார்ந்த நன்றி!
- தமிழ்நாடு அரசுக்கு ஒரு கேள்வி!
- ‘எதற்காக இந்தக் குழுவைக் கலைக்கிறீர்கள்?’ என்று சொல்லியிருக்கலாமே!
- முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வராமல், ஓர் அரசாணையைப் போட்டு முடித்துவிட்டார்!
- சட்ட ஆணையத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா?
- சட்ட ஆணையம் என்பது ஒரு கண்துடைப்பு ஆணையம்!
- ஒரு நாளைக்கு 14, 15 மணி நேரம் அமர்ந்து பணியாற்றி, முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்!
- முக்கியமான ஒன்பது அம்சங்களை முதல் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்!
- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது!
- தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
சிறப்புக் கருத்தரங்கம்
கடந்த 12.11.2026 மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம் – தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில், தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா?’’ என்ற தலைப்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில், தி.மு.க. வழக்குரைஞரணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இச்சிறப்புக் கருத்தரங்கிற்கு வருகை தந்தி ருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல தலைப்பு! “இந்தக் குழுவைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா?” என்று ஒரு பெரிய கேள்வியை நம்முடைய ஆசிரியர் அவர்கள் எழுப்பி, இந்தக் கருத்தரங்கிற்குத் தலைப்பாகக் கொடுத்திருக்கிறார்.
முதல் குரல் பெரியார் திடலிலிருந்துதான் எழுப்பப்படுகிறது!
இங்கே எனக்கு முன்னால் பேசிய அன்புச் சகோதரர் சுவாமிநாதன் தேவதாஸ் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, எப்போதெல்லாம் சமூகத்திற்கு, நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் எழுப்பப்படுகின்ற முதல் குரல் இங்கிருந்துதான் (பெரியார் திடலில்) எழுப்பப்படுகிறது என்பதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு முதன்முத லில் வந்தபோதுகூட, அரசியலமைப்புச் சட்டத்தை முதலில் திருத்துவதற்குக் காரணமாக இருந்து, திருத்திக் காட்டி வெற்றி கண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
அந்த வகையில்தான், தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு சோக நிகழ்வு நடந்த பிறகு, நடைபெறுகின்ற முதல் அறிவுசார்ந்த கருத்தரங்கம் பெரியார் திடலில் நடைபெறுகிறது என்கிறபோது, உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு இங்கே வரும்போது சற்று அச்சமாகவும் இருந்தது. காரணம், நான் பல இடங்களில் பேசியி ருந்தாலும், ஆசிரியர் முன்னால் ஒரு மாணவன் பேசுவது என்பது சற்று எனக்கு உதறலாகத்தான் இருக்கிறது.
எனது நெஞ்சார்ந்த நன்றி!
முதன்முறையாக, ஆசிரியர் தலைமையில், ஆசிரியர் அவர்கள் இருக்கக்கூடிய இந்த மேடையில், இக்கருத்தரங்கத்தில், இத்தகைய வாய்ப்பினை நல்கி யிருக்கக்கூடிய திராவிடர் கழகத்திற்கும், இதன் ஏற்பாட்டாளர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குழுவை அமைத்ததற்கான நோக்கம் என்ன?
இந்தக் குழுவை அமைத்ததற்கான நோக்கத்தை அப்போதே தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் எழுந்து சொன்னார்.
ஏன் இந்தக் குழுவை நாங்கள் அமைக்கிறோம்? இந்தக் குழுவின் அவசியம் என்ன? என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் இத்தகைய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜமன்னார் குழுவைப் பற்றியெல்லாம் எனக்கு முன்னால் பேசிய பெரியோர்கள் குறிப்பிட்டார்கள்.
நேரத்தின் அருமை கருதி, ஆசிரியர் அவர்கள் அதிக நேரம் இங்கே அமர்ந்திருக்கக் கூடாது என்பதற்காகவும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தப் பெரிய கடல் போன்ற தலைப்பில், சுருக்கமாகப் பேச விரும்புகிறேன்.
குழு சரியா? குழுவில் இருக்கக்கூடிய கருத்துகள் சரியா? என்பதைப் பேசுவதற்கே நமக்கு நிறைய நேரம் தேவைப்படும்.
ஆனால், இந்தக் குழு கலைக்கப்பட்டது சரியா? என்பதுதான் இன்றைக்கு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு தலையாய கடமையாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு ஒரு கேள்வி!
இந்த அரங்கத்தின் வாயிலாக, இந்தக் கருத்த ரங்கத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசிடம் ஒரு கேள்வியை எழுப்பவும், நாட்டு மக்களின் கவனத்திற்கு ஒரு செய்தியைக் கொண்டு செல்லவும் நான் விரும்புகிறேன்.
ஒரு குழுவை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைந்திருக்கக்கூடிய சட்டமன்ற அவையில், இந்தக் குழுவை நான் ஏன் அமைக்கிறேன் என்பதற்கான காரண, காரியங்களை எடுத்துச் சொல்லி, அதற்கான நோக்கங்களைக் குறிப்பிட்டு, அந்தக் குழு எந்த வகையில் பணியாற்றப் போகிறது என்பதையெல்லாம் விளக்கி, சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவோடு அறிவிப்பை வெளியிட்டு, அரசாணையும் வெளியிட்ட ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. அதன் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள்.
நீங்கள் கலைக்கவே கூடாது என்று நான் சொல்லவில்லை.
‘எதற்காக இந்தக் குழுவைக் கலைக்கிறீர்கள்?’ என்று சொல்லியிருக்கலாமே!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே! இதுபற்றிய புரிதலும், தெளிவும், துணிவும் உங்களுக்கு இருந்திருக்குமேயானால், குறைந்தபட்சம், நீங்கள் சட்டமன்றத்திற்கு வந்து, அதே சட்டமன்றத்தில், ‘நான் எதற்காக இந்தக் குழுவைக் கலைக்கிறேன்?’ என்பதற்கான காரண காரியங்களைச் சொல்லிக் கலைத்திருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால், அது விவாதத்திற்கு உரிய ஒரு பொருளாகியிருக்கும்.
சட்டமன்றத்தில் இதைச் சொன்னால், அதைக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதுதான் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய விடையாக இருக்கிறது.
கற்றறிந்த, அறிவார்ந்த சட்டமன்றம் என்பதால்தான், தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடும், ஆதரவோடும் இதை அறிவித்தார்.
முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வராமல், ஓர் அரசாணையைப் போட்டு முடித்துவிட்டார்!
‘நான் சொன்னாலும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புரியவா போகிறது?’ என்ற எண்ணத்தாலோ என்னவோ தெரியவில்லை. முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வராமல், ஓர் அரசாணையைப் போட்டு முடித்துவிட்டார்.
அரசாணை போடுவது மட்டுமே முக்கியமல்ல. ஆனால், இதுவரை முதலமைச்சர் அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தைக்கூடச் சொல்லவில்லை.
அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழு. இந்தக் குழுவைக் கலைத்து அரசாணை வெளியிடப்பட்ட பிறகுகூட, முதலமைச்சர் அதுபற்றிப் பேசவில்லை.
எதைப் பற்றியும் பேசாத முதலமைச்சர்தான் அவர், பரவாயில்லை. ஆனால், இந்தக் குழுவைக் கலைத்த தற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் என்ன?
சட்ட ஆணையத்திற்குச்
சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா?
சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா?
சட்ட ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கி றதா? இந்தக் குழுவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் (Statutory Power) இல்லை என்று சொல்லுகி றார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டி ருக்கக்கூடிய வரையறைகளின்படி, இது அதிகாரமிக்க, சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல என்று சொல்லுகிறார்கள். ஆனால், அதையே சொல்லிவிட்டு, அந்த அரசாணையில் தமிழ்நாட்டின் சட்ட ஆணையம் இந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்கள். நான் ஆட்சியாளர்களைக் கேட்க விரும்புவதெல்லாம், சட்ட ஆணையத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா? அதுவும் அரசாணையின் மூலமாக அமைக்கப்படும் ஓர் ஆணையம்தான். இதுவும் அரசாணையின் மூலமாக அமைக்கப்படும் ஒரு குழுதான்.
முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அந்தச் சட்ட ஆணையம், 2026 ஜூன் மாதம் வரை பல்வேறு தலைவர்களைக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால், இதுவரை அந்த ஆணையம் ஒன்று இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?
அந்த ஆணையம் இதுவரைக்கும் தமிழ்நாடு அரசுக்கு எத்தகைய அறிக்கைகளை அளித்திருக்கிறது?
சட்ட ஆணையம் என்பது ஒரு கண்துடைப்பு ஆணையம்!
என்னென்ன சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து விவாதித்து, ஆய்வு செய்து அறிக்கைகளை வழங்கியிருக்கிறது என்று கேட்டால், எதுவுமே கிடை யாது. அது ஒரு கண்துடைப்பு ஆணையம்.
இன்னும் சொல்லப்போனால், அந்த ஆணையத்தின் வேலை என்னவென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாங்கள் இயற்றுகின்ற சட்டங்கள் எல்லாம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கின்றனவா, ஒன்றிய அரசின் சட்டங்களுக்கும், மாநில அரசின் சட்டங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் ஆய்வு செய்வதுதான். அவற்றைத் திருத்தி, சரிசெய்து, நெறிப்படுத்துகின்ற பணியை மட்டுமே அது செய்கிறது. இதைத் தாண்டி வேறு எந்தப் பணியையும் செய்வதற்கு அந்த ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக அறிக்கை அளிப்பதற்கு அந்த ஆணையத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்களா?
இது ஒரு தனிப்பட்ட பணி. அரசியலமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதற்காகத்தான் ராஜமன்னார் குழுவை அமைத்தோம்.
ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டபோதும், சட்ட ஆணையம் அமைப்பதற்கான வழிமுறை அரசியல மைப்பில் இருந்தது. ஆனால், இருந்தாலும், இதற்கு நிபுணத்துவம் தேவை. திறமையும் அனுபவமும் வாய்ந்த ஆளுமைகள் தேவை. அறிவார்ந்த குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதற்காகவே தனியாக அமர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஒரு நாளைக்கு 14, 15 மணி நேரம் அமர்ந்து பணியாற்றி, முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்!
இங்கே அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் நாகநாதன் அவர்களுக்கு 81 வயது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் இந்தக் குழுவின் தலைவர்.
இந்தக் குழுவின் உறுப்பினராக இருந்த அசோக் வர்தன் ஷெட்டி, ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி.
இவர்கள் தங்களுடைய வயதையும் பொருட்படுத்தா மல், ஒரு நாளைக்கு 14, 15 மணி நேரம் அமர்ந்து பணியாற்றி, முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், இதற்கென அர்ப்பணிப்பு உணர்வும், திறமையும், அனுபவமும் கொண்ட ஆளுமைகள் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் பொருள்.
இந்தப் பணிகளையெல்லாம் சட்ட ஆணையம் செய்யுமா? என்று கேட்டால், செய்யாது.
எனவே, இன்றைக்கு அவர்கள் சொன்ன காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதுதான் நம்முடைய வாதம்.
ஆனால், இதை அப்படியே விட்டுவிட முடியுமா? என்னென்ன காரணங்களுக்காக இந்த முதல் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது? அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?
மொழிக்கொள்கையைப் பற்றி ஒன்றிய அரசுக்கு எத்தகைய தெளிவான புரிதலை ஏற்படுத்தி, அதன் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?
ஆளுநருடைய அதிகாரங்களைப் பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் பேசுகிறோம். ஆளுநருடைய அதிகாரங்களை எப்படி வரையறுக்க வேண்டும்? அவருடைய அதிகாரங்களை எப்படிக் குறைக்க வேண்டும்?
தேர்தல் முறைகளை எப்படிச் சீரமைக்க வேண்டும்?
சுகாதாரம் தொடர்பான தேவைகளுக்கான சட்டங்கள் இன்றைக்கு ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கின்றன. அவற்றை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.
கல்வியையும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.
அது மட்டுமல்ல, உழைத்து வரி செலுத்துகின்ற மக்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கி றார்கள். அவர்கள் செலுத்துகின்ற வரிக்கு நியாயமான பங்கீட்டை அவர்களுக்குத் தேவையான அளவில் மாநிலங்களுக்கு வழங்குவதில்லை.
அதற்கு ஒரு நெறிமுறைப்படுத்தப்பட்ட ஏற்பாடு தேவை.
முக்கியமான ஒன்பது அம்சங்களை முதல் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்!
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் (GST Act) எப்படித் திருத்தங்களைக் கொண்டுவந்து, அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு அதிக வருவாயைப் பெற்றுத்தர முடியும் என்பதையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட முக்கியமான ஒன்பது அம்சங்களை முதல் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தக் குழுவின் புத்தகத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதை அனுப்பியது.
அதேபோல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பியது. மாநில முதலமைச்சர்களுக்கு அனுப்பியது மட்டுமல்ல; இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இந்தப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், கருத்தியலாளர்கள் எனப் பலருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக அனுப்பப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது!
ஆனால், இன்றைக்கு அந்த ஆய்வு அறிக்கையின் முதல் தொகுதி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், குழுவைக் கலைத்ததைவிட, அந்த அறிக்கையும் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு நீக்கப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
இவர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றக்கூடிய ஓர் அரசாங்கமாகத்தான் இருக்கிறார்களா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
இது கேள்வி மட்டுமல்ல; விடையும் கூட!
இவர்கள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிற வர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
(தொடரும்)
