திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியாக நீடிக்கத் தகுதி உண்டா?
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
- திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியாக நீடிக்கத் தகுதி உண்டா?
- வழக்கு விசாரணை நடக்கும்போது….
- உச்சநீதிமன்றம் சொல்லும் நெறிமுறைகள்:
- வயிற்றெரிச்சலில் பார்ப்பனர்கள்!
- வம்புச்சண்டைக்கு வருவது யார்?
- பாவம், புண்ணியம்?
- சங்கராச்சாரியாரின் ‘மனித நேயம்’
- பெண்ணுரிமைக்கு எதிரான சங்கராச்சாரியார்
- தீண்டாமை, விவசாயம் குறித்து சங்கராச்சாரியார்
- நாம் தயார்!
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பகம் சார்பில் ‘மகா பெரியவா’ என்ற புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்றுப் பேசியுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், “பெரியார் அறிவுலகத்தின் அனைத்து ரேக்குகளிலும் அகல்விளக்கு புத்தகங்கள் தான் இருக்கின்றன. வெறும் ஜி.ஓ போட்டால் அந்தப் பாவமெல்லாம் போகாது. அந்தப் பாவம் கழிய வேண்டு மென்றால் மகா பெரியவருடைய புத்தகங் களை அந்த ரேக்குகளில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று ‘திருவாய்’ மலர்ந்திருக்கிறார்.
பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, பஞ்சாங்கம் பார்த்துப் பாவ, புண்ணியம் பேசும் சாதாரண சுவாமிநாதனாக இருந் தால், நாமும் எப்படி வேண்டுமானால் பதில் சொல்லலாம். ஆனால், சொல்லி யிருப்பவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆயிற்றே!
நீதிமன்றத்தில் நீதிபதி அவர்கள் எழுதும் தீர்ப்புக்கும், தானே உள்நோக்கம் இருக்க முடியாது என்று நம்ப வேண்டும்.
நீதிமன்றத்தில் சொல்லவில்லை அல்லவா? அதனால் அதை நீதிமன்றத்தின் கருத்து என்றோ, தீர்ப்பு என்றோ கருத முடியாது.
‘பெரியவா’ பக்தராக இருந்து, பாவ புண்ணியக் கதைகள் எல்லாம் பேசும் போது அதற்கொரு நோக்கம் இருக்கலாம் அல்லவா? அப்போதும் அவர் நீதிபதியாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கு ‘நியாயங்கள்’ உண்டு அல்லவா?
அப்படித்தான் அவரும் பேசியிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?அவர் பேசியதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?
தமிழ்நாட்டு நூலகங்களுக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது என்பதும், போலிப் புத்தகங்கள் பல வாங்கப்பட்டுள்ளன என்பதும் ‘பெரியார் அறிவுலகம்’ திறக்கப்பட்டதும், அதைப் பார்வையிட்ட சிலர், அங்கிருந்த புத்தகங்களில் போலிப் புத்தகங்கள், போலி எழுத்தாளர்களின் பெயர்களில் இருப்பதைக் கவனித்தனர். அதைக் குறித்து சமூக ஊடகத்தில் சிலர் எழுதினர்; எழுத்தாளர் பெருமாள் முருகன் இணையதளத்தில் கட்டுரை எழுதினார். அது இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல நூலகங்களில் நூலகங்களில் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதே போன்ற வழக்கு ஒன்றை ஏற்கெனவே விசாரித்து, தீர்ப்பு வழங்கியதுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கினர் ஜஸ்டிஸ் மகாதேவன், ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர்.

வழக்கு விசாரணை நடக்கும்போது….
தற்போதைய வழக்கு விசாரிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் வந்தால், அது வேறு நீதிமன்றத்துக்குச் செல்லும். இதனிடையில், பழைய தீர்ப்புக்கு விரோதமாக நடந்திருப்பதாகக் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த ராமசுப்பு என்றொருவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே தான் ‘மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில், பாவம் கழித்து பிராயச்சித்தம், பரிகாரம் தேடும் ‘யோஜனை’ சொல்லியிருக்கிறார். வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது அது குறித்து வெளியில் பேசக் கூடாது என்று நீதிபதிகள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், ஒரு நீதிபதியே தன் அமர்வில் கொண்டுவரப்பட்டிருக்கும் வழக்கு ஒன்றைக் குறித்து பொது மேடையில் பேசுகிறார்; பேசுவதுடன் நில்லாமல், அதற்குத் தீர்வாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுகிறார் என்றால், இது நீதித்துறையின் மரபுக்கு உட்பட்டதா?
நீதிபதியாக இருப்பவர், பொது மேடையில் ஒரு கருத்தைச் சொல்லு கிறார். அது அவருடைய அமர்வில் நடந்துகொண்டிருக்கும் வழக்கு தொடர்பான ஒரு கருத்து. அது எப்படிப் புரிந்துகொள்ளப்படும்? நீதிமன்றத்தில் சொல்ல முடியாததை, அல்லது சொல்ல விரும்புவதை, அல்லது நீதிமன்றத்தில் சொல்ல முடியாத நீதிபதியின் உள்ளக் கிடக்கையை அவர் வெளிப்படுத்துவதாகத் தானே அது புரிந்துகொள்ளப்படும்.
இது நீதித் துறையின் மரபுக்கு மாறானது அல்லவா? மரபு மட்டும் அல்லவே!
உச்சநீதிமன்றம் சொல்லும் நெறிமுறைகள்:
இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1997-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட, நீதித்துறை அறநெறிகள் குறித்த 16 அம்சங்களைக் கொண்ட ‘நீதித்துறை வாழ்வுக்கான விழுமி யங்களின் மீள்-வரையறை’ (Restatement of Values of Judicial Life) கொடுக்கும் உதாரணப் பட்டியல் என்ன சொல்கிறது?
நடுநிலைமை, நலன்களுக்கிடை யிலான முரண்பாடுகளைத் தவிர்த்தல், அரசியல் அல்லது பொது விவாதங்களி லிருந்து விலகி இருத்தல், மற்றும் ஒரு நீதிபதியின் முன்னிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர் களாகப் பணியாற்றுவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் போன்ற நெறிமுறைகளை வரையறுக்கும் அந்தப் பட்டியலில் முதல் நெறிமுறை என்ன?
“1. நீதி வழங்கப்படுவது மட்டு மல்லாமல், அது வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் காணும் வகையிலும் இருக்க வேண்டும். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் செயல்பாடுகளும் நடத்தைகளும், நீதித்துறையின் நடுநிலைத்தன்மை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். எனவே, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது அலுவல் ரீதியான அல்லது தனிப்பட்ட செயல்பாடுகளில், இத்தகைய நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.”
தந்தை பெரியார் யார்? ‘அவர்’ கூறும் ‘மகா பெரியவா’வான காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யார்? இருவரின் கருத்துகள் என்ன என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
வயிற்றெரிச்சலில் பார்ப்பனர்கள்!
பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்ட திலிருந்து பொருமித் தள்ளிக் கொண்டிருக்கும் பார்ப்பன ஊடகங்களும், ஹிந்துத்துவவாதிகளும் என்ன என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அனைவரும் அறிவர். ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் உள்ள சில நூல்கள் வாங்கியதில் முறைகேடு என்றதும் அதற்கு எப்படி எப்படியெல்லாம் தலைப்பிட்டார்கள் என்பதையும், இதைக் கொண்டே தந்தை பெரியார் மீது தங்களுக்கு உள்ள காழ்ப்புணர்வையெல்லாம் எப்படி கொட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், இந்த ஊழல் நெடுநாட்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய வந்ததும் பலர் வாயை மூடிக் கொண்டுவிட்டார்கள்.
இப்போது “பெரியார் அறிவுலகத்தில்” பாவத்தைக் கழுவ “மகா பெரியவா” புத்தகத்தைக் கொண்டு போய் எல்லா அடுக்கிலும் வைக்க வேண்டும் என்று சொல்வதன் வாயிலாக திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதற்குத் தனி விளக்கம் தேவைப்படுகிறதா என்ன?
தன்னுடைய தனிப்பட்ட நம்பிக் கைகளை, விருப்பங்களைத் தனது அமர்வுக்கு வந்திருக்கும் ஒரு வழக்கு தொடர்பான விமர்சனங்களை, தீர்வுகளை முன்வைக்கிறார் என்றால், இதில் நீதி வழங்கப்படும் என்று நாம் நம்ப முடியுமா? நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது அனைவருக்கும் தெரியும்படி வழங்கப்பட வேண்டும் என்று முதல் நெறிமுறையிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறதே உச்சநீதி மன்றம். இந்தப் பேச்சில் நமக்குத் தெரிவது என்ன? நீதி வழங்கப்படுகிறது என்பதை நம்பும் வகையில் இருக்கிறதா?
மேலும், அந்த நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பவை என்ன?
“8. ஒரு நீதிபதி, அரசியல் விவ காரங்கள் குறித்தோ அல்லது நீதிமன்றத் தீர்மானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டி யவை அல்லது எதிர்காலத்தில் அத்தகைய தீர்மானத்திற்கு வரக்கூடியவை என எதிர்பார்க்கப்படும் விவகாரங்கள் குறித்தோ, பொது விவாதங்களில் ஈடு படவோ அல்லது பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவிக்கவோ கூடாது.
- ஒரு நீதிபதியின் தீர்ப்புகளே அவற்றுக்கான விளக்கங்களாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கக்கூடாது.”
இந்த நெறிமுறைகளைத் துளி அளவாவது இந்தப் பிரச்சினையில் பின்பற்றியிருக்கிறாரா திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்?
நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கு தொடர்பாகப் பொதுவெளியில் கருத்துச் சொல்கிறார். அப்படிக் கருத்துச் சொன்னால், அதற்கு எதிர்க்கருத்துகள் வரத் தான் செய்யும். “எங்களுக்குப் பெரியாரும், அம்பேத்கரும் தான் பெரியவா!” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளிக்கிறார்.
வம்புச்சண்டைக்கு வருவது யார்?
அவ்வளவுதான், கச்சை கட்டிக் கொண்டு வம்புச் சண்டைக்குக் கிளம்பிவிட்டார் திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன். “நானே சாதா பெட்டியில் போகிறேன். ஒரு கம்யூனிஸ்ட் எம்.பி. ரயிலில் முதல் வகுப்பில் செல்வதா?” என்று குடுமியைப் பிடிக்கப் பாய்கிறார். பாவம், சு.வெ. அவர்களுக்குக் குடுமியில்லை – அதைப் பிடித்து இழுக்கவும் வழியில்லை.
நூலகங்களில் வாங்கப்பட்டுள்ள போலிப் புத்தகங்களுக்குப் பதில், அறிவுசார்ந்த புத்தகங்களை வாங்குங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வாங்கி வையுங்கள், சட்டப் புத்தகங்களை எளிமையாக்கித் தமிழில் வழங்குங்கள் என்றெல்லாம் சொல்லியிருப்பாரேயானால், இந்தப் பேச்சு சர்ச்சையாகியிருக்காது.
சர்ச்சை ஆக வேண்டும் என்பதற்காகவே பேச முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வது?
பாவம், புண்ணியம்?
பாவம், புண்ணியம் எல்லாம் எந்தச் சட்டத்தில், எந்தச் செக்சனில் வருகின்றன? பிராயச்சித்தம் சொல்வதும், பரிகாரம் சொல்வதும் ஜோசியக்காரரின் ஏமாற்று வேலையா? நீதிபதியின் வேலையா?
அப்படியென்ன அதிசயமான பரிகாரம் சொல்லிவிட்டார் திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்?
காஞ்சி சங்கராச்சாரியாரின் நூல்கள், அவரைப் பற்றிய நூல்களையெல்லாம் வாங்கி அடுக்க வேண்டுமாம்! தமிழ்நாடு அரசு கட்டியுள்ள பெரியார் அறிவுலகத்தில் மட்டுமல்ல, பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திலே கூட காஞ்சி சங்கராச்சாரியாரின் புத்தகங்கள் உண்டு. கருத்துகளைக் கொண்டு சேர்க்க எல்லோருக்கும் உரிமை உண்டு; கருத்துகளை விவாதிக்கவும் எல் லோருக்கும் உரிமை உண்டு.
எந்த ஒருவரின் கருத்தைக் கண்டும் அஞ்சக் கூடியவர்கள் அல்லர் பகுத்தறிவாளர்கள். அதிலும் ஆரியத்தின் நூல்களை, வேதங்களை, இதிகாசங்களை, கீதை உள்ளிட்ட உளறல்களை, சங்கராச் சாரி தொடங்கி கதாகாலட்சேபப் பார்ப்பனர்கள் வரை எழுதியுள்ள எல்லாவற்றையும் பொதுவெளிக்கு எடுத்து வரட்டும்; அவர்கள் பேசிய வற்றையெல்லாம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்போது தெரியும் – அகல்விளக்குகள் வெளியிட்ட குப்பை களாவது எரிப்பதற்குப் பயன்படும்; ஆனால், ‘அவாள்’கள் எழுதியுள்ள அனைத் தும் எரித்தால் கூட விஷப் புகையாக நச்சுகளே வெளிவரும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அவர்கள் சங்கராச்சாரியார் புத்தகத்தை அடுக்கட்டும் – நாமும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சங்கராச்சாரி – யார்?” என்ற புத்தகத்தைக் கொண்டுபோய் அடுக்குவோம்.
சங்கராச்சாரியாரின் ‘மனித நேயம்’
- “நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது” என்று எழுதிய ‘அருள் பார்வை’யை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
“தெய்வத்தின் குரல்” மூன்றாவது பாகம். 148ஆம் பக்கத்தில் ‘தெய்வப் பணியும், மக்கட் பணியும்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தைச் சொல்லு கின்றார்.
“மக்களுக்குச் செய்கிற காரியங்கள். தான தர்மங்கள் பகவானுக்குப் பண்ணுகிற பூஜையாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் பூஜை என்று வந்துவிடக் கூடாது. ஆலய தரிசனம், உத்ஸவாதிகள் முதலியவற்றை நன்றாக அநுபவித்துப் பயன் அடைவதற்குத்தான் மற்ற ஸோஷல் ஸர்வீஸ் எல்லாமே. “நாஸ்திகனுக்கு வைத்தியம் பண்ணி ஆயுசை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்துகொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்தியம் பண்ணாதே” என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ஆனபடியால் மக்கள் பணியெல்லாம் அந்த மக்களைப் பகவானிடம் சேர்ப்பதற்குத்தான். அதனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி செய்தால், மெய் வருந்தி ஒரு கோயிலுக்கு மதில் கட்டினால், அதுதான் ஜனங்களுக்கு மஹா பெரிய ச்ரமதானம்”
மேலும், இந்த மூன்றாம் பகுதி 734ஆம் பக்கத்தில் விரிவாகச் சொல்கிறார். “ஆயுர்வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. “நாஸ்திகனுக்கு வைத்யம் செய்யாதே” என்று அதில் சொல்லியிருக்கிறது. அது இந்த உள்ளர்த்தத்தில்தான். கேட்கிறபோது இதென்ன? கருணையேயில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கோ என்று தோன்றலாம் ஆனால், உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான். வைத்தியன் சிகிச்சை பண்ணமாட்டான் என்று வைத்துவிட்டால் அப்போது நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத்தான் செய்வான்”
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எடுக்கும் ஹிப்போர்கிரட்டிஸ் உறுதிமொழி யில், “நோயால் அவதிப்படும் எவரை யும் பேதம் பாராமல் அவர்களின் வீடு களுக்குள்ளும் நுழைந்து சிகிச்சை அளிப்பேன்” என்று இருக்கிறதே, அது மனிதநேயமா, அல்லது நாஸ்திகனுக்கு மருத்துவம் பார்க்காதே, அவனை கஷ்டப்படுத்தி ‘பகவானாண்ட இஷ்டுக்கினு வா’ என்பது மனித நேயமா? யார் பெரியவா?
பெண்ணுரிமைக்கு
எதிரான சங்கராச்சாரியார்
எதிரான சங்கராச்சாரியார்
- பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்று பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து முயற்சி செய்தபோது, அதை முறியடிப்பதற்காக டில்லியில் லாபி செய்து, தமிழ்நாட்டிலிருந்து பொம்மணாட்டிகளை அனுப்பி, போராட்டம் நடத்தி அதைத் தடுத்தவர் யார்? சாட்சாத் இதே சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச் சாரியார் தானே! அப்படியே அவரது நண்பர் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?”, “சடங்குகளின் கதை” புத்தகங்களையும் வாங்கி வையுங்கள். சங்கராச்சாரியாரின் லட்சணம் தெரிய வேண்டாமா?
- சங்கராச்சாரி ஆனதும் பூணூலைக் கழட்டி எறிந்து சந்நியாசம் பெற வேண்டுமே! பூணூல் என்ன மேனியிலா இருக்கிறது – மூளையில் அல்லவா இருக்கிறது என்பதை நொடி தோறும் நிரூபித்தவர் தானே சங்கராச்சாரியார். கம்யூனல் ஜி.ஓ.வைக் கண்டு அவர் வயிறெரிந்து பேசிய பேச்சுகள் எவ்வளவு? ஹிந்துப் பசங்களுக்காகவா அவர் வருந்தினார்? “மற்ற சமூகங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்தச் சமூகத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ‘பிராமணர்’களுக்குத் தான் அந்த ஸ்பிரிட் இல்லை. காலேஜ் அட்மிஷன், உத்தியோகம் பெறுவது எல்லாவற்றிலுமே கம்யூனல் ஜி.ஓ. வந்த நாளாக “பிராமணப் பசங்கள் அதிகக் கஷ்ட திசையில் இருக்கிறாகள். இப்போதும் அந்தச் சமூகத்தில் சவுகர்யமுள்ளவர்கள் இதைக் கவனிக்காமலிருப்பது நியாய மில்லை” என்றூ பேசியவர் தானே!
தீண்டாமை, விவசாயம் குறித்து சங்கராச்சாரியார்
- ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று எழுதியவர் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? ‘விவசாயம் பாவத்தொழில்’ என்று சொன்ன பெரியவா(ய்)ள் யார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டாமா? மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அடிப்படை அறம் அற்றவர்களையெல்லாம் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்களின் லட்சணம் என்ன என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டாமா? நீங்கள் அதைக் கொண்டு போய் வையுங்கள். நாங்கள் தந்தை பெரியாரின் “ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?” புத்தகத்தையும், அண்ணல் அம்பேத்கரின் “ஜாதியை ஒழிக்க வழி” புத்தகத்தையும் கொண்டுபோய் வைக்கிறோம்.
பக்கம் பக்கமாக ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் ஒலித்துள்ள ‘பார்ப்பனக் குரலை’ அம்பலப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு என்று கிளம்பிவிவோம். ‘கருஞ்சட்டைகள் ஹேப்பி அண்ணாச்சி!’
என்ன பிரச்சினை நடந்தாலும் சரி, அதில் என் காரியம் நடந்தேற வேண்டும் என்னும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்’ அணுகுமுறைதானே நீதிபதியின் பேச்சில் வெளிப்படுகிறது.
இன்னொரு பழமொழியும் இருக்கிறது. ‘பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டத்தை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்ட கதையாக, நூல்கள் வாங்கியதில் பிரச்சினை – அதனால் ‘நூல்’களின் நூல்களாக வாங்கி அடுக்குங்கள் என்று மறைமுகமாகக் கட்டளை போடும் வேலைதானே இது!
விபத்து ஏற்படுத்திக் கொலை செய்த பார்ப்பனரைப் பொய் சாட்சி மூலம் தப்ப வைத்து, அது ஸநாதன தர்மத்தைப் பின்பற்றியதால் பகவான் காப்பாற்றியது என்று நீதித்துறையை ஏமாற்றிய கதையையே பெருமையாகப் பேசியவர் தானே இவர்! இந்துத்துவத்திற்குச் சார்பான வழக்குகள் எல்லாம் எப்படி இவர் அமர்வுக்கே செல்கிறது என்று ஒரு முறை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுப்பிய வினா தானே, அப்போதைய தலைமை நீதிபதியை விழிக்கச் செய்து நியாயம் கிடைக்கச் செய்தது.
ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளுக்கு மாறாகத் தொடர்ந்து நடந்துகொண்டு வருபவர் இன்னும் அந்தப் பதவியில் தொடரலாமா? இந்த வழக்கை விசாரிக்கலாமா? அவர் இந்த வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு சொல்ல உரிமை உண்டா?
நாம் தயார்!
“நீதிபதியாக எல்லாம் இல்லை, நான் பரமாச்சாரியாரின் பக்தனாகத் தான் பேசினேன்” என்று சொன்னால், நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லட்டும். நாமும் ‘தெய்வத்தின் குரலை’க் கையில் வைத்துக் கொண்டு பேசத் தயார்!
ஆனால், நீதிபதியாக இருப்பவர் அப் பொறுப்பில் இருக்கிறவரை அதன் கண்ணியத்தைக் காக்க வேண்டியவர் என்கிறது உச்சநீதிமன்றம். நீதிபதியாக இருந்து அவர் இந்தக் கருத்துகளை யெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், ‘நீதிபதிகளுக்குள்ள நெறிமுறைகளை’ அவர் முற்றாகப் பின்பற்றவில்லை என்று பொருள். நீதிபதி பேசியதற்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்கள் என்று கருதினால், அவர் நீதிபதியாகவே இருந்து நீதிமன்றத்திற்கு அழைக்கட்டும். அப்போதும் நாம் அரசியலமைப்புச் சட்டத்தையும், உச்சநீதிமன்றம் வழங்கிய ‘நீதித்துறை வாழ்வுக்கான விழுமியங்களின் மீள்-வரையறை’யையும் கையில் வைத்துக் கொண்டு பேசத் தயார்!
அழைப்பா? அழைப்பாணையா? காத்திருக்கிறோம்.
