உப்பளத் தொழிலாளர்களின் மழை நிவாரண நிதி ரூ.7,000 ஆக உயர்த்தியது தமிழ்நாடு அரசு

- Advertisement -

சென்னை, நவ. 17- உப்பளத் தொழிலாளர்களின் மழை நிவாரண நிதி ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (16.11.2026) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, ‘வெற்றித் தமிழகம் தொலை நோக்குப் பார்வை’ என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர், ‘உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000 லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000 லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன்படி 2026-2027ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் ரூ.16.78 கோடி செலவினை அரசே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை பேர் காணவில்லை?

மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?

மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, நவ. 17- தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரை சொத்து பிரச்சினைக்காக அவரது தந்தையும், சகோதரரும் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கர்ராஜை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இது தொடர்பான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என புவனேஸ்வரி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில், சங்கர்ராஜை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்கர்ராஜ் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை பொன்னன் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்ததாகவும், 2021ஆம் ஆண்டு சங்கர்ராஜ் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க திருக்கோவிலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களை கண்டறிய ஏஅய் தொழில்நுட்பத்தை அந்த மாநில காவல்துறையினர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதுபோன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், ஆள்கொணர்வு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும், தீவிர விசாரணை நடத்தப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

பின்னர், சங்கர்ராஜைக் கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி திருக்கோவிலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகளின் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன? எத்தனை பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த காவல் துறையினர் எடுத்த முயற்சிகள் என்ன? என்பது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை!

த.வெ.க. பிரமுகர்கள், இருவர் கைது!

சென்னை, நவ. 17- சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரெஸ்ட்ரோபாரில் (உணவகம் மற்றும் மதுபானக் கூடம் ஆகிய இரண்டும் இணைந்த இடம்) கடந்த ஓராண்டாக பில்லிங் கேஷியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9.11.2026 அன்று அந்த பெண் தனது இருசக்கர வாகனத்தை தரைதளத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புப் படக் கருவிக் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபுகுமார் (49), பாலாஜி (30) என்பது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரபுகுமார் தவெகவில் அண்ணாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாகவும் இருப்பது தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *