தஞ்சாவூரில் கடந்த 14.11.2026 அன்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற் குழுக் கூட்டம், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் ஆகியவை எழுச்சியாக நடைபெற்றன.
கழகத்தில் தோழர்கள் மிக உற்சாகமாக உள்ளனர்; இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நன்றாகவேக் காண முடிகிறது.
இப்பொழுதெல்லாம் தமிழர் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களின் எண்ணிக்கையும் எழுச்சியும் எப்படி இருக்கின்றன என்பதை நன்கு உணர முடிகிறது.
இன்றைக்குப் போராட்டம் என்பது பாசிசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கிறது. எதிரணியில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய சித்தாந்தமும் – அதனை எதிர்க்கும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சித்தாந்தமும் மல்லுக்கட்டி நிற்கின்றன.
இந்தத் தாக்கம் இப்பொழுது அகில இந்திய அளவிலும் ஊடுருவி இருப்பதை உணர முடிகின்றது.
தமிழ்நாட்டை எல்லாரும் உற்று நோக்குகின்றனர். தனித் தன்மையாக தமிழ்நாடு இருப்பதை எண்ணிப் பார்க்கும் ஒரு நிலையும் உருவாகியுள்ளது.
தந்தை பெரியாரின் சித்தாந்தம் தமிழ் மண்ணில் வேரூன்றி இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றும், பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் என்ற அமைப்பு அரசியல் நோக்கு இல்லாமல் தொடர்ந்து தந்தை பெரியார் சிந்தனைகளை நாள்தோறும் நாள்தோறும் மேலும் மேலும் அழுத்தமாக நவீன அறிவியல் யுக்திகளையும் கையாண்டு பரப்புரை செய்வதே இதற்கு முக்கிய காரணம்.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனைகளை உலகே ஏற்கும் என்று தொலைநோக்கில் சொன்னது –இப்பொழுது நடைமுறையாகி வருவதையும் பார்க்கிறோம்.
அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International) டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் உருவாக்கப்பட்டு, உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் மாநாடுகள் நடைபெற்று வருவதைப் பார்க்கும்போது, தந்தை பெரியார் மறைந்து 53 ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் அவர்தம் சிந்தனைகள் உயிரோட்டமாக வற்றா ஜீவ நதியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு மொழிகளிலும் தந்தை பெரியார் சிந்தனைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு உலா வருகின்றன.
தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக திராவிட நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிலும் இருந்து வருகிறது.
தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவரின் சீடர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக, 94 வயதிலும் ‘தந்தை பெரியார் பணி முடிப்பதே நம் இலட்சியம்’ என்ற பாட்டையில் வீறு நடைபோட்டு வருகிறார்.
‘சமூகநீதிக்கும் பகுத்தறிவுக்கும் எதிராக எது எங்கு நடந்தாலும், அவற்றை எதிர்த்து முதல் குரல் வெடிப்பது சென்னை பெரியார் திடலில் தான்’ என்பதை கட்சிகளைக் கடந்து அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும்.
இன்றைக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபி அரசு சமூக நீதியின் வேரை வெட்டும் வேலையில் அவ்வப்போது சன்னமாக ஈடுபட்டு வருகிறது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு; ‘பொருளாதார அளவுகோல்’ என்ற பிரச்சினைக்கே இடமில்லை’’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திலேயே தெளிவாக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இதே அடிப்படையில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுள்ளன.
ஆனால் இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு முற்றிலும் சட்ட விரோதமாக பொருளாதார அடிப்படையிலான உயர் ஜாதியினருக்கு (EWS)10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை சட்ட வடிவமாக்கி தமது பார்ப்பன மேலாண்மையைக் காட்டியுள்ளது.
அதன் விளைவை நாம் கண் எதிரில் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி எழுத்துத் தேர்வை எடுத்து கொண்டால் –
பழங்குடியினர் (ST) கட் ஆஃப் மார்க் 53.75 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) கட் ஆஃப் மார்க் 61.25 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கான (BC) கட் ஆஃப் மார்க் 61.25 சதவீதம், பொருwாதார அடிப்படையிலான உயர் ஜாதியினருக்கு (EWS) கட் ஆஃப் மார்க் 28.5 சதவீதமாம்!
புரிகிறதா ஒன்றிய பிஜேபி அரசின் நயவஞ்சகம்? அதுபோலவே ‘நீட்’ என்ற தேர்வும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கக் கூடியதாகும். இந்தத் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தின் கீழ் வினாக்கள் கேட்கப்படுகின்றன. மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் இருபால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மிக அண்மையில் வெளிவந்த ஒரு தகவல்: அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெறும் 5 விழுக்காட்டினரே வெற்றி பெற்றுள்ளனர் என்பதாகும்.
இதன் காரணமாகவே ‘நீட்’டை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நடத்திக் கொண்டு வருகிறது.
தஞ்சையில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் எண் 4
‘‘நீட் நுழைவுத் தேர்வின் கெடுவிளைவாக, தமிழ் நாட்டில் 90 சதவிகிதம் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டு, அவர்களுக்கு 40 சதவிகிதம் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற மாபெரும் அநீதியைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வின் சமூக அநீதியை எடுத்துக் காட்டியும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட இச் செயற்குழு தீர்மானிக்கிறது.’’ என்பதுதான் அந்த தஞ்சைத் தீர்மானம்.
‘போராடுவோம் – வெற்றி பெறுவோம்! வெற்றி பெறும் வரை போராடுவோம்!’’ என்ற நம் முழக்கம் தொடரட்டும்! தொடரட்டும்!!
