மதுராந்தகம், நவ. 16- வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில், ஏரியில் தண்ணீர் இன்றி உள்ளதால் அங்கு வெளிநாட்டுப் பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள ஏரி பருவ மழையின்போது நிரம்பியதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 24 வகையான பறவைகள் மொத்தமாக குவிவது வழக்கம்.
அதன்படி, நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ண நாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள ஏரி மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளு டன் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இந்தநிலையில், வேடந்தாங்கல் பகுதியில் இந்த ஆண்டு வெப்பச் சலனம் காரணமாக, தென்மேற்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழ் அடுக்கு சுழற்சிகள் மழை பொய்த்துப் போனது. மேலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இந்த பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை.இதனால் ஏரியில் குட்டை போன்று மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்த நத்தை குத்தி நாரை பறவைகள் அங்கு தங்காமல் திரும்பிச் சென்று விட்டன. இதனால் தற்போது பறவைகள் இன்றி சரணாலயம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பறவைகள் இல்லை என்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கைப்பேசி, ஒளிப்படக் கருவி கொண்டு செல்ல ரூ.50, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வன உயிரினக் காப்பாளர் பார்கவா தேஜா நேற்று (15.11.2026) பறவைகள் சரணாலயம் சென்று ஏரியை பார்வையிட்டார். வேடந்தாங்கல் அருகிலுள்ள வளையப்புத்தூர் ஏரியில் தண்ணீர் நிறைந்துள்ளது.
அந்த ஏரி உபரி நீரை வேடந்தாங்கல் ஏரிக்கு கால்வாய் மூலமாகக் கொண்டு வருவதற்காக ஆலோசனை நடத்தினார். மேலும் அந்தக் கால்வாயில் உள்ள செடி கொடிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி தூர்வாரவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பறவைகள் சரணாலயத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வனச்சரக அலுவலர் கல்யாண் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் ஏரியில் தண்ணீரும் இல்லை, பறவையும் இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் பறவை இல்லாததற்கு ஏன் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இதன் விளைவாக நுழைவுக் கட்டணம் பெறுவதற்கு முன்பாகவே, ஏரியில் தண்ணீரும் இல்லை, பறவையும் இல்லை என்ற வாசகம் அடங்கிய துண்டு விளம்பரத் தாளை சரணாலயத்தில் ஒட்டியுள்ளனர்.
குவாரி உரிமையாளர்களிடம்
பசுமை நிதி வசூலிக்கும்
சட்டத் திருத்தம் செல்லும்!
உயர் நீதிமன்றம்

மதுரை, நவ. 16- தமிழ்நாட்டில் குவாரி நடத்துவோரிடம் பசுமை நிதி வசூலிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் நாராயண பெருமாள்சாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு தொழிற்துறை கடந்த 23.02.2022இல் வெளியிட்ட அரசாணை மற்றும் சிறு கனிம விதிகள் திருத்தம் ஆகியன ‘பசுமை நிதி’ என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் கட்டாய நிதி வசூல் செய்ய அனுமதிக்கிறது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, திலீப்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சட்டத் திருத்தம் மேற்கொள்ள சிறு கனிமங்கள் விதிகள்-1959 பிரிவுகளின்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பசுமை நிதியைப் பயன்படுத்தி குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. சுற்றுச்சூழல் சமன்பாட்டைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. மறு வாழ்வளித்தல், மீட்டெடுத்தல், மறு சீரமைப்பு என்ற விதிகளின் அடிப்படையில் அரசு செயல்பட வேண்டியுள்ளது. எனவே, இதற்கான பங்களிப்பை வரியாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிதி கைவிடப்பட்ட குவாரிகளைச் சீரமைக்க பயன்படுத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை நிதியம் அமைக்க விதி வழிவகை செய்கிறது. விதிப்படி ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மறு வாழ்வளித்தல், மீட்டெடுத்தல் மற்றும் மறு சீரமைப்பு விதியை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்திருத்தம் சட்டம் வழங்கியுள்ள தொழில் உரிமையை மறுக்கவில்லை. மாறாக தொழில் செய்வதற்கு சில நியாயமான கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மாவட்ட கனிம நிதியத்துக்கும், இந்தப் பசுமை நிதியத்துக்கும் வேறுபாடு உள்ளது. எனவே, சிறு கனிமங்கள் விதிகள், 1959இல் செய்யப்பட்ட சட்டத் திருத்தப் பிரிவுகள் 35-யு மற்றும் 35-எச் ஆகியன செல்லுபடியாகும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்
