நியூயார்க், நவ. 14- அமெரிக்கா சுதந்திரமடைந்ததின் 250ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள பிப்த் அவென்யூ சாலையில் 107ஆம் ஆண்டு முன்னாள் படைவீரர்கள் தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.
யுனைடெட் வார் வெட்டரன்ஸ் கவுன்சில் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் அணிவகுப்பிற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீராங்கனையும், அமெரிக்க கடற்படையின் முன்னாள் கேப்டனுமான சுனிதா வில்லியம்ஸ் தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தினார்.
இவ்விழாவில் பேசிய சுனிதா வில்லியம்ஸ், “முன்னாள் படைவீரர்களுடன் இணைந்து அணிவகுத்துச் செல்வது மிகப்பெரிய கவுரவம். கடற்படையில் நான் பணியாற்றிய காலம்தான் எனக்குத் தைரியம், மரியாதை மற்றும் அர்ப்பணிப்பைக் கற்றுக்கொடுத்து, விண்வெளிப் பயணம் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயார்படுத்தியது. சுதந்திரம் என்பது எளிதில் கிடைத்ததல்ல, நம் முன்னோர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாசாவில் விண்வெளிப் பயணங்கள் மூலம் நீண்ட காலம் தங்கியிருந்து சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
