புதுடில்லி, செப். 7- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) தன்னாட்சி மற்றும் எதிர்காலப்பாதை குறித்துக் கடுமையான பாதுகாப்பு மற்றும் கொள்கை மாற்றங்களை முன்வைத்து, முதல்முறையாக இஸ்ரோ வின் ஒன்பது வெவ்வேறு மய்யங்களைச் சேர்ந்த ஊழியர் சங்கங்கள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி தொழில்நுட்பங்களை வெளிப்படைத்தன்மையின்றித் தனி யாருக்கு மாற்றுவதற்கு எதிராக விண்வெளி ஆணைக்குழுவின் (Space Commission) தலைவருக்கும், விண்வெளித் துறை செயலாளருக்கும் ஊழியர் சங்கங்கள் எழுத்துப்பூர்வமாகப் பகிரங்கக் கடிதம் அனுப்பியுள்ளன.
தனியார்மயமாக்கலும் – இஸ்ரோவின் சுருக்கப்படும் அதிகாரமும்!
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் வணிக ரீதியான வளர்ச்சியைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்று ஊழியர் சங்கங்கள் தங்களது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளன. எனினும்,பல பத்தாண்டுகளாக நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் முது கெலும்பாக விளங்கிய இஸ்ரோவை, வெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (R&D Boutique) சிறிய நிறுவனமாக மட்டும் சுருக்கிவிட்டு, நாட்டின் முக்கிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் மற்றும் ஏவுதளங்களை இயக்கும் முழு அதிகாரத்தையும் தனியாருக்கு மாற்றுவது எந்த வகையிலும் நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அய்.என்-ஸ்பேஸ் (IN-SPACe) தலைவரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மய்யத்தின் (IN-SPACe) தலைவர் பவன் கோயங்கா அண்மையில் வெளியிட்ட கொள்கை சார்ந்த கருத்துகள் இஸ்ரோ ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இஸ்ரோ எந்தவொரு ஏவு ஊர்தியையும் (Launch Vehicles) தயாரிக்காது என்றும், முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்களே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இது ஒன்றிய அரசு அல்லது விண்வெளி ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வமான கொள்கை முடிவா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் உத்தி என்ன என்பது குறித்தும் ஊழியர் சங்கங்கள் நேரடியான விளக்கத்தைக் கோரியுள்ளன.
ராக்கெட்டுகள் தயாரிப்பு மற்றும் ஏவுதளங்கள் கைமாற்றம்
எல்.வி.எம்.3 (LVM3), பி.எஸ்.எல்.வி (PSLV) மற்றும் எஸ்.எஸ்.எல்.வி (SSLV) உள்ளிட்ட நாட்டின் முன்னணி ராக்கெட்டுகளின்உற்பத்தி மற்றும் எதிர்கால செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது குறித்துக் கடிதத்தில் தீவிர கவலை எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் (Space Launch Complex) உள்ளிட்ட தேசிய உள்கட்ட மைப்புகளைத் தனியார் இயக்க அனு மதிப்பது நாட்டின்இறையாண்மைக்கு எதிரானது என்று சங்கங்கள் சுட்டிக்காட்டி யுள்ளன. பொதுத்துறை நிறுவனங்க ளையும், தகுதிவாய்ந்த உள்நாட்டு நிறுவனங்களையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, ராக்கெட்தயாரிப்புப் பணிகளைச் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் மாற்றுவ தற்கான நியாயம் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
ஊழியர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்புச் சுருக்கம்
பல தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பிலும், கோடிக்கணக்கான பொதுமக்களின் வரிப்பணத்திலும் கட்டமைக்கப்பட்ட விண்வெளி உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் முறையான விவா தமின்றித் தனியாருக்கு மாற்றப்படுவதால், இஸ்ரோவில் எதிர்கால வேலைவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பிரிவு களில் புதிய நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படுவது முடக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ளஊழியர்கள் தேவையற்ற நிலைக்குதள்ளப்படலாம் அல்லது தனியார் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் போலப் பார்க்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும் ஊழியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அரசின் வெளிப்படையான விளக்கத்திற்குக் கோரிக்கை!
தேசிய பாதுகாப்பு மற்றும் அதி முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி தொழில்நுட்பங்களை முழுமையாகத் தனியாருக்கு மாற்றுவது தொடர்பான விவ காரத்தில், ஒன்றிய அரசும் விண்வெளித் துறையும் உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் உரிய பதிலும் மாற்றமும் எட்டப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள இஸ்ரோவின் முக்கிய மய்யங்களை ஒருங்கிணைத்துத் தங்களது அடுத்த கட்டப் போராட்டநடவடிக்கைகள் குறித்துக் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிவிக்கப்படும் என்றும் சங்கங்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளன.
