சென்னை, நவ.13 தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று (13.11.2026) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது வரும் 19-ஆம் தேதிக்குப் பிறகு புயலாக வலுவடையக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (14.11.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 19-ஆம் தேதிக்குப் பிறகு புயலாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
நவம்பர் 15 & 16
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் அவற்றின் மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் இன்றும் நாளையும் (நவ. 13, 14) அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மய்யம் அறிவுறுத்தியுள்ளது.
