தனியார் நிறுவனங்கள் மூலம் சேவையா? தமிழ்நாடு முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 12- தனியார் நிறுவனங்கள் மூலம் பத்திரப் பதிவு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (11.11.2026) 2-ஆம் நாளாக இந்தப் போராட்டம் நீடித்தது. இதனால் பல இடங்களில் பத்திரப் பதிவு பணியில் தொய்வு ஏற்பட்டது.

பத்திரப்பதிவு செய்வதற்காக சார்-பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும். பத்திரப்பதிவில் நடைபெறும் முறைகேடு களை கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட புதியத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய இ-ஹப் சேவை மய்யங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை மய்யங்கள் மூலம் பொதுமக்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணைய வழியாக பத்திரப்பதிவு செய்துகொள்ள முடியும்.

டிஜிட்டல் டோக்கன் வசதி. அதிவேக வை-பை உள்ளிட்ட நவீன வசதிகளும் இந்த மய்யங்களில் இடம்பெற உள்ளன. முதல்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 5 இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் மாதிரி பத்திரப்பதிவு மய்யங்களை செயல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பத்திர எழுத்தர்கள், பத்திரம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர்கள், பத்திர எழுத்தர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் கணினி ஆபரேட்டர்கள். பத்திர விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்திரப்பதிவு பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (11.11.2026) ஏராளமானோர் பத்திரப் பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, ‘இணைய வழி மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது அதிக மோசடி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பத்திர எழுத்தர்கள் மூலம் இந்த பணிகளை செய்யும்போது மட்டுமே மோசடியை தடுக்க முடியும்.

இ-ஹப் மய்யங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பெரும் தொகை தேவைப்படும். தனியார் நிறுவனங்களால் மட்டுமே இந்த மய்யத்தை நடத்த முடியும். இதனால் பல தலைமுறைகளாக பத்திரம் எழுதும் தொழிலில் ஈடுபட்டு வரும், பத்திர எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், பத்திர விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பத்திரம் தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சொத்துகளைப் பதிவு செய்ய வரும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தனியாரிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் வருவது அவசியம் என்றாலும், பல தலைமுறைகளாக இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பயன் கிடைப்பதுடன், ஏற்கனவே இந்த தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் அரசு தீர்வுகாண வேண்டும்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *