கோவில்பட்டி, நவ. 12- கோவில்பட்டி அருகே கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியுடன் காவல்துறை ஆய்வாளர் விசாரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. அங்கு தீபாவளி அன்று மதுப்பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பாக மோதிக் கொண்டனர். இதில், அந்த பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அந்த பகுதியைச் சேர்ந்த மாவீரன் (வயது 41), ரவி (39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். குமார், ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல்துறை ஆய்வாளர் வானமாமலை அங்கு விசாரணை நடத்தச் சென்றார். அப்போது அவர், அங்குள்ள மக்கள் சிலரை தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் விசாரணை நடத்தியதுடன் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்களிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, இருதரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு 4 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஆய்வாளர், இருதரப்புக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு விடக்கூடாது என அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பாதுகாப்பு தான் முக்கியமாக இருந்தது. மற்றபடி யாரும் மிரட்டப்படவில்லை என்றனர்.
சட்டப் பேரவைத் துணைத் தலைவரைப்
பதவி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
துறையூர், நவ. 12- திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கார்த்திக்குமார். தவெகவில் உறுப்பினராக உள்ள இவர், துறையூர் நகராட்சி பகுதி வார்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அவர் பல முறை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கார்த்திக்குமார், மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டப் பேரவைத் துணைத் தலைவரும், துறையூர் தனி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து வார்டு பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க சென்றார்.
ஆனால், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், மனுவை வாங்காமல் கார்த்திக்கை ஆபாசமாகத் திட்டி சரமாரியாக தாக்கி உள்ளார். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், கார்த்திக்கை மிரட்டி அதுபோல் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என காட்சிப் பதிவையும் வெளியிட வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்குள்ளான கார்த்திக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல் துறையினர் இதுவரை சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மனு அளிக்க வந்த நபரை தாக்கிய சட்டப் பேரவைத் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அருகே நேற்று (11.11.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடப்பாண்டில் சென்னை ரயில் நிலையங்களில்
சுற்றித் திரிந்த 413 குழந்தைகள் மீட்பு!
ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை!
சென்னை, நவ.12- சென்னை சென்ட்ரலில் கடந்த 10.11.2026 அன்று நள்ளிரவில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ரயில்வே பாதுகாப்புப் படை காவலரால் மீட்கப்பட்டார். மேலும், தெற்கு ரயில்வே நிலையங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 413 சிறுவா், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் கடந்த நவ.10ஆம் தேதி இரவு ரயில்வே பாதுகாப்புப் படை காவலரான கதிரவன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது 9 வயது சிறுவன் தன்னந்தனியாக சுற்றித் திரிவதைக் கண்ட அவா், சிறுவனிடம் விசாரித்தாா். அப்போது, திருப்பதியிலிருந்து ரயிலில் ஏறி சென்னை வந்ததைத் தெரிவித்த சிறுவன், உணவு உண்ணாமல் சோா்வாக இருப்பதையும் திருப்பதி செல்ல வழி தெரியாமல் சுற்றிவருவதையும் தெரிவித்தாா்.
இதையடுத்து சிறுவனுக்கு உணவு வாங்கித் தந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் கதிரவன், சிறுவா் பாதுகாப்புக் குழுவினரிடம் சிறுவனை ஒப்படைத்தாா்.
413 குழந்தைகள் மீட்பு
கடந்த 2026 ஜனவரி முதல் அக்டோபா் வரையில் தெற்கு ரயில்வே மண்டலத்தின் நிலையங்களில் சுற்றித் திரிந்ததாக 17 வயதுக்குள்பட்ட 413 சிறாா்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 613 சிறாா்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
