சென்னை, ஆக. 5- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அவரை இந்த அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: கருத்துக்கு கருத்தால் பதிலளிப் பதே ஜனநாயகத்தின் மாண்பாகும். கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. ஆங்கிலேயர் காலத்தில் வாய்ப்பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத் தக்கது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாடு சட்டப் பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல் வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதைப் பார்க்க வேண்டியுள்ளது.
