மதுரை, செப். 10- தஞ்சாவூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், அவர்களின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தந்தை பங்கேற்கவில்லை.
இதையடுத்து, கணவரிடம் இருந்து மணவிலக்குக் கோரி தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார். தஞ்சை நீதிமன்றம் அவருக்கு மணவிலக்கு வழங்கி, 2021இல் தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்யக் கோரி கணவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மகளின் திருமணத்தில் கணவர் பங்கேற்கவில்லை என மனைவி குற்றம்சாட்டியுள்ளார். தந்தையின் இந்தத் திருமணப் புறக்கணிப்பு நடவடிக்கை, தாய்க்கு நிச்சயமாக பெரும் மனவேதனையை ஏற்படுத்தி யிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரு வகையான கொடுமைதான். இந்த இணையர் 1990இல் இந்து திருமண முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இரு குழந்தைகள் உள்ளனர். 2016 முதல் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 2014 முதல் அவர்கள் ஒன்றாக வாழவில்லை.
இந்நிலையில் கொடுமை மற்றும் குடும்பத்தை கைவிடுதல் ஆகிய காரணங்களின் அடிப்படையில் மணவிலக்குக் கோரி மனைவி 2019இல் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். குடும்பநல நீதிமன்றம் 2021இல் மணவிலக்கு வழங்கியது. மேலும், வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தகாத உறவு இருந்ததாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கப்படாததால், அந்த விவகாரத்துக்குள் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை.
தந்தையின் நடத்தையால் தாய் மனதில் தீவிரமான உணர்வுப் பூர்வமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக திருமணம் முறிந்த நிலையில் இருப்பது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மணவிலக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
