‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ. இராமலிங்கனார் பிறந்தநாள் இன்று (12-11-1899)
தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, தொண்டு செய்த காரணத்தால் தமிழின் வரலாற்றில் “ஆட்சி மொழிக் காவலர்” என்ற சிறப்புப் பெயரால் போற்றப்படும் அறிஞர் கீ.இராமலிங்கனார் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாளில் பிறந்தார்.
ஆட்சித் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளின் மேன்மைக்கும் இவர் ஆற்றிய தொண்டில் மகத்தானது, நிர்வாகம் மற்றும் சட்டம் சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் புதியச் சொற்களை உருவாக்கிக் கொடுத்ததாகும். அவர் ஆட்சிமொழியின் பயன் பாட்டுத் தேவையை உணர்ந்து, அச்சொற்களைத் அரசு அலுவல கங்களில் அன்றாடப் புழக்கத்திற்குக் கொண்டுவர அயராது உழைத்தார். இதன் மூலம், தமிழ்நாட்டின் ஆளுமை மொழி தமிழில் இயங்க அடித்தளமிட்ட பெருந்தகையர் ஆனார்.
அவர் தொகுத்தளித்த இரு முக்கிய நூல்கள் ஆட்சித் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.
ஆட்சித்துறை தமிழ் அரசு நிர்வாகம் மற்றும் மடல் போக்கு வரத்துகளுக்கான செயல்முறைத் தமிழைக் குறித்த இந்நூல், அரசு அலுவலர்களுக்கும் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டிப் பெட்டகமாக அமைந்தது.

ஆட்சி மொழி அகராதி
ஆங்கிலத்தில் உள்ள அரசாங்கச் சொற்களுக்கு இணையான, துல்லியமான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்ட இந்த அகராதி, ஆட்சித் தமிழைச் செழுமைப்படுத்தியது. இதன் மூலம், நிர்வாகத் துறையில் தமிழ் மொழியை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்தார்.
தமிழ்த் திருமண வழிபாட்டு முறை
கீ.இராமலிங்கனார், தமிழ் மொழியின் பயன்பாட்டை அரசுத் துறையுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழர்களின் பண்பாட்டு மற்றும் சமூக வாழ்விலும் அதன் தேவையை வலியுறுத்தினார்.
தமிழில் மட்டுமே திருமணம் நடத்தும் முறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த் திருமண முறைக்கெனத் தனியே ஒரு நூலை அவர் எழுதினார்.
வெறும் நூலை எழுதுவதோடு நின்றுவிடாமல், பலருக்கும் தமிழ்த் திருமண முறையிலேயே திருமணங் களைச் செய்வித்து, தமிழ் மொழியின் மேன்மையை மக்களிடையே கொண்டு சேர்த்தார். தமிழ்வழித் திருமண முறையைச் சடங்குகளின் பிடியில் இருந்து மீட்டு, எளிமையும் தமிழும் நிறைந்த ஒரு பண்பாட்டுக் கொண்டாட்டமாக மாற்றியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
கீ.இராமலிங்கனாரின் தமிழ்ப் பணி வெறும் மொழி பெயர்ப்புடன் நின்றுவிடாமல், பயன்பாடு மற்றும் பண்பாடு எனப் பல தளங்களில் விரிகிறது. தமிழ்நாட்டில் 1956–ஆம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித் துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940ஆம் ஆண்டு வெளியிட்டார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் அரிய நூலை 1957ஆம் ஆண்டு வெளியிட்டார். இராமலிங்கனார் 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர், நாளுக்கு நாள் ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது. தமிழ் வளர்ச்சி இயக்கம் என்ற துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன. சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் அறிஞர் இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.
இவரது அயராத உழைப்பின் விளைவாகவே, இன்று தமிழ் நாட்டில் ஆட்சித்துறைத் தமிழ் செழுமையுடன் செயல்பட முடிந்தது. எனவேதான், அறிஞர்
கி. இராமலிங்கனார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக “ஆட்சி மொழிக் காவலர்” என்று அறிஞர்களால் இன்றும் போற்றப்படுகிறார். இவர் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளில் தமது 87 ஆவது வயதில் மறைவுற்றார்.
lll
உலக நுரையீரல் அழற்சி விழிப்புணர்வு நாள் இன்று (நவம்பர் 12, 2026)
ஆண்டுதோறும் நவம்பர் 12 ஆம் நாள் ‘”உலக நுரையீரல் அழற்சி நோய் விழிப்புணர்வு நாள் (நிமோனியா நாள்) உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிமோனியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்படும் லட்சக் கணக்கான மக்களின் உயிரைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த நாள் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைகிறது.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
