மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் அறிக்கை முதன்முதலாக
“குடிஅரசு” இதழில் வெளியிடப்பட்ட நாள் இன்று (04-10-1931)
“குடிஅரசு” இதழில் வெளியிடப்பட்ட நாள் இன்று (04-10-1931)
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் (மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் அறிக்கை) முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்க வார ஏடான “குடிஅரசு” இதழில் 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவான பூர்ஷ்வாக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தமிழாக்கத்தை வெளியிட்டது.
மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட வில்லை. ஆயினும் முதல் பகுதி தந்தை பெரியார் அவர்களின் அறி முக உரையுடன் வெளியிடப்பட்டது. இன்றும் பொருத்தப் பாடுடைய அந்த அறிமுக உரையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது :
“உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷ்ய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷ்யாவைவிட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.”
ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விடயம்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் ஜாதியார் – கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன் – ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக்கொண்டு வருகிறது” (“குடிஅரசு” 04.10.1931).
கேரளம் பகுத்தறிவாளர் பசவ பிரேமானந்த்
நினைவு நாள் இன்று (04-10-2009)
நினைவு நாள் இன்று (04-10-2009)

பசவ பிரேமானந்த் (Basava Premanand) என்பவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற பகுத்தறிவாளர். சாமியார்களை அம்பலப்படுத்தியவர் ஆவார். இவர் 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாளில் கேரளா கோழிக்கோட்டில் பிறந்தார்.
இந்தியாவில் நிலவிய மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIRA – Federation of Indian Rationalist Associations) நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார். சாமியார்கள் மற்றும் குருமார்கள் தங்களின் “அற்புதங்கள்” என்ற பெயரில் கூறிச் செய்யும் வித்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் தந்திரங்களை (Magic tricks) கிராமப்புற மக்களுக்குச் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காற்றில் மிதப்பது, கைகளில் விபூதி மற்றும் நகைகளை வரவழைப்பது போன்ற தந்திரங்களைச் செய்து காட்டி, அவை வெறும் ஏமாற்று வேலைகளே என்று நிரூபித்தார். புட்டபர்த்தியின் சாமியாரான சாய் பாபா பற்றிய தீவிர விமர்சகராக பசுவ பிரேமானந்த் அறியப்பட்டார். சாய்பாபா செய்யும் மோ(ச)டி வித்தைகள் அனைத்தும் வெறும் மேஜிக் தந்திரங்கள் தான் என்று சவால் விடுத்தார். கட்டுப்படுத்தப்பட்ட அறிவியல் சோதனைகளின் கீழ் சாய் பாபாவைத் தனது வித்தைகளை நிரூபிக்குமாறு பலமுறை வெளிப் படையாக அழைப்பு விடுத்தார்.
“தி இந்தியன் ஸ்கெப்டிக்” (The Indian Skeptic): என்ற மாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து, இந்தியாவில் நடக்கும் போலி அற்புதக் கூற்றுகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கட்டுரை களை வெளியிட்டார். இவர் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாளில் தமது 79 ஆவது வயதில் போத்தனூரில் மறைவுற்றார். அவருடைய இந்நினைவு நாளில் அவரின் புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்!
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி
