இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தில், பல்வேறு துறைகளில் அத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல் வளர்ச்சிப் பாதையில் உலகம் சென்றுக் கொண்டிருந்தாலும், இங்கே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஜாதகம், ஜோதிடம் சார்ந்த மூடத்தனங்கள் வளர்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காகப் பார்த்த கிளி ஜோதிடம், எலி ஜோதிடம்,நாடி ஜோதிடம், கைரேகை ஜோதிடம் போன்ற பழங்காலத்து முறைகள் எல்லாம் மறைந்து, அது வேறு வடிவமாக அண்மைக் காலமாக கைப்பேசியில் நவீன முறையில் ஜோதிடத்தை (Astrology) புதிய, புதிய வைப்செட் தளங்களை உருவாக்கி, அதில் உங்கள் பிறந்தநாள் சொன்னால் போதும் உங்களின் முழுவிவரங்களையும் கடந்த காலம், எதிர்காலம் பற்றிச் சொல்லுவதாக, அதற்கு பரிகாரம் செய்வதாக திரைப்பட நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களின் மூலம் விளம்பரம் செய்து, ஆர்வத்தைத் தூண்டி, மூளைச்சலவை செய்து அத்தளங்களை பதி விறக்கம் செய்ய வைத்து மூடத்தனத்தை முதலீடாகக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். (பிரபலமான நடிகர், நடிகைகளை விளம்பரத் தூதுவர்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று கணக் கிட்டுக் கொள்ளுங்கள்).
புத்தக நிலையங்கள், புத்தக கண்காட்சிகளில் பெரும்பாலும் எவ்விதமான புத்தகம் விற்பனை யாகிறது என்றால் பெரியார் புத்தக நிலையம் தவிர்த்து பெரும்பாலும், ஜோதிடம், ஜாதகம், பக்தி, சமையல் போன்ற புத்தகங்கள் தான் அதிகமாக விற்பனை ஆகிறது என்கிறார்கள், விற்பனையாளர்கள். அதே நிலை இன்று சமூக ஊடகத்திலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பார்ப்பதும், கேட்பதும், அதி வேகமாகப் பரவும் நிலை உள்ளது.

இதுவொரு பக்கம் என்றால்
மற்றொரு பக்கம் தொலைக்காட்சி.
இந்த தொலைக்காட்சியில்
தினம்.. தினம்.. அரைமணி நேரத்திற்கு மாறி, மாறி வரும் தொடர்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகள் சொல்லிமாளாது. எவ்வித அறிவியல் சிந்தனையும், பகுத்தறிவும் இல்லாமல், முட்டாள்தனமான, பிற்போக்குதனமான காட்சிகளாக வளம் வருகிறது.எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைத்து தொலைக் காட்சியிலும் இத்தகைய மூட நம்பிக்கை காட்சிகள் நிறைந்த தொடர்கள் தான்.
அப்படி அண்மையில் தொலைக்காட்சி தொடரில் எதேச்சையாகப் பார்த்த காட்சி அதிர்ச்சி யாக இருந்தது. அதில் ஒரு பெண்ணிற்கு அம்மை நோய் (சின்னம்மை- Chicken pox ) வந்து விடுதிறது. அதில் அவர் கணவரே ஒரு மருத்துவர். அப்படி இருந்தும் “அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக அவளைத் தண்டிப்பதற்காக அவள் மேல் ‘ஆத்தாள்’ வந்து இறங்கி உள்ளாள். அவளை குளிர்விக்க வேண்டும் – அவளை குளிர் வித்தால் ‘ஆத்தாள்’ அவளை விட்டு சென்று விடுவாள் என்று” அவ் வீட்டு பணிப் பெண் சொல்கிறாள்.

அவள் சொல்வதை கேட்டு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவ கணவன்,அவளுக்கு உரிய மருத்துவம் பார்க்காமல், பண்டையகால மூடநம்பிக்கையின் படி சடங்குகள் செய்கிறான் என்று இப்போதும் இது போன்ற மூடத்தனமான காட்சிகள் வளம் வருகிறது என்பதை காணும் போது வேதனைப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அறிவியல் படிப்பிற்கும், சமூகத்தில் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களுக்கும் பெரிய வேறுபாடு இன்னும் உள்ளதையும், அது தொடர்வதையும் இது உணர்த்துகிறது.
மருத்துவ வசதிகள் இல்லாத பண்டைய காலத்தில், அம்மை நோய் வேகமாகப் பரவி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு கொடிய நோயாக இருந்த பொழுது,பல கோடி பேர் இதனால் இறந்துள்ளனர். இந்நோய் வரும்போது உடலில் தோன்றும் கொப்பளங்கள் முத்துக்களைப் போல உருண்டையாகவும், பளபளப்பாகவும் காட்சியளித்ததால் இதற்கு ‘முத்துமாரி’ என்ற பெயர் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்.உடலில் தோன்றும் இந்தக் கொப்பளங்களை ‘அம்மை முத்துக்கள்’ என்று அழைத்தனர். நோயின் தீவிரத்தைக் கண்டு பயந்த மக்கள், நோயைக் கவுரவப்படுத்தும் விதமாகவும், தெய்வத்தைக் குளிர்விக்கும் விதமாகவும், மதிப்பிற்குரிய ‘அம்மை வந்துள்ளது’ அல்லது ‘அம்மா போட்டிருக்கிறது’ என்று கூறத் தொடங்கினர்.
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், அம்மை நோய் தீவிரமடையும் போது உடலில் கடுமையான வெப்பம் (சூடு) உண்டாகும். அக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள், குளிர்ந்த நீர் மற்றும் இளநீர் போன்ற இயற்கையான குளிர்ச்சி தரும் பொருட்களைப் பயன்படுத்தினர்.
இந்த மருத்துவ முறைகள் அனைத்தும் மாரியம்மன் வழிபாட்டோடு இணைக்கப்பட்டிருந்ததால், இந்நோய் இயற்கையாகவே ‘அம்மை’ என்ற பெயரில் நிலைபெற்றுவிட்டது.
இது தான் உண்மை. (வெளி நாட்டில் இந்த நோய்க்கு அம்மை என்ற பெயரே இல்லை),
இன்றைய அறிவியல் மருத்துவ முறையில் சின்னம்மை (Chicken pox),
தட்டம்மை (Measles), புட்டாலம்மை (Mumps) உமியம்மை (Rubella),
பெரியம்மை (Smallpox) ஆகிய அம்மை வகைகளுக்கு அறிவியல் மருத்துவம் கண்டுபிடித்த தடுப்பு ஊசி உள்ளது. பெரியம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டே விட்டது.
கடந்த காலத்தில் புராண இதிகாச கதைகள் எப்படி எவ்வித அறிவியல் சிந்தனையும் இல்லாமல் நாடகம், தெருக்கூத்து என்று மக்களின் மனதில் பதியப்பட்டு, பரப்பப்பட்டு வந்ததோ, அதே போன்று இன்று இத்தகைய மூடக் கதைகளை நவீன ஊடகமான இந்த தொலைக் காட்சியை பயன்படுத்தி பரப்பிப் பணம் பார்க்கிறார்கள்.
தந்தைபெரியார் அவர்கள் இந்த மூடத்தனத்தை பரப்புகிறவர்களை மகா.. மகா.. அயோக்கியன் என்று சொல்லுகிறார்.
எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாத மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அயோக்கியர்களிடமிருந்து காக்க, தமிழர் தலைவர் சொல்வதை போல மக்களிடம் இருக்கும் அறியாமையை அகற்றி, மூடநம்பிக்கையை ஒழித்து ஜாதி, மத வெறிகளுக்கு இடமில்லாமல், “அனைவரும் சமம்; அனைத்து மக்களும் ஒரு நிறை – உலகம் ஓர் குலம்” என்ற தத்துவத்தை நிலைநாட்டுகின்ற அவசியமும், அவசரமும் வருகின்ற இடங்களில் எல்லாம், பெரியார் அறிவுலகம் தேவை என்பதை உணர்த்துகிறார்.
இந்த நவீன மூடத்த(ள)னங்களின் வளர்ச்சியைப் பார்க்கும் போது இன்னும் ஆயிரம் பெரியார் அறிவுலகம் தேவை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A (h)-இன் படி, “ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை (Scientific temper), மனிதநேயம், மற்றும் சீர்திருத்த எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்பது அடிப்படைக் கடமையாக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இது போன்ற மூடநம்பிக்கைகளைத் தடுக்க துணிச்சலுடன் முற்போக்கான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
நவீன ஊடக மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களைக் காப்போம்!
மூடத்தனங்கள் இல்லா உலகத்தை உருவாக்குவோம்.!
