மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
அக்டோபர் 6ஆம் தேதி தாமஸ் பாபிங்டன் மெக்காலே அரசாங்கத்திற்கு சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அளித்தார். அந்த அறிக்கை சமர்ப்பிக்கும் வேளை, வில்லியம் பென்டிங் பிரபு பதவி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். ஜார்ஜ் ஆக்லாண்டு பிரபுவிடம், போகும் முன் அறிக்கை சமர்ப்பித்து விட்டு வில்லியம் பென்டிங் பிரபு சென்றார். அந்த அறிக்கையில், “மரணம் விளைவிக்கும் நோக்கமின்றி செய்யப்பட்ட ஆட்கொலை” என்று முடிவு செய்வதைப்பற்றி சற்று குழப்பமான அறிக்கையாகவே அது இருந்தது.
ஒருவர் தாமாக முன்வந்து மரணம் விளைவிக்கும் நோக்கமின்றி, ஆனால் மரணம் அறிவுடன் செய்யப்படுவதும் “ஆட்கொலைதான்” என்று மெக்காலே அறிக்கையின் ஆரம்பப் பகுதி கூறுகிறது. இவ்வாறு எழுதிய மெக்காலே பின்பகுதியில், “மதக்கடமை” என்ற வலுவான உணர்வு தொடர்பாகவும், சில நேரங்களில் கவுரவம் தொடர்பாகவும் “சதி”யைப் பார்க்க வேண்டும் என்று எழுதுகிறார். இது அந்தக் குற்றச் செயலை மீண்டும் செய்யத் தூண்டுகோலாக இருந்தது.
மெக்காலேயின் “சதி” பற்றிய சட்டத் திருத்தம் வில்லியம் பென்டிங் பிரபுவின் சட்டத்தைக் கூர்மையாக்காமல் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்தது. “ஒரு விதவை, தான் எரிக்கப்படுவதற்கு ஒத்துக் கொண்டு கணவன் சிதையில் குதித்து எரிந்து செத்தால் அது குற்றமாகக் கருத முடியாது” என்றும், ஒரு பரிந்துரையை அவர் செய்திருந்தார். இது “சதி” ஒழிப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது. 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தில் வங்காளப் பார்ப்பனர்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.

சிப்பாய்க் கலகத்தின் முடிவில் கிழக்கிந்திய கம்பெனி வென்றாலும், அந்தக் கம்பெனியில் ஊழல் மலிந்துவிட்ட காரணத்தால் ஆங்கிலேய அரசாங்கமே இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை விக்டோரியா மகாராணியின் தலைமையில் ஏற்றது. அப்பொழுது விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தில் “இந்தியர்களின் மத விஷயங்களில் இங்கிலாந்து அரசு தலையிடாது” என்ற உறுதிமொழி கொடுத்ததைச் சுட்டிக் காட்டி பார்ப்பனர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டினர். சிப்பாய்க் கலக எழுச்சியில் வங்காளப் பார்ப்பனர்களே முன்னிலை வகித்ததால் ஓர் கலகம் உண்டாகிவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் அவர்களே ராணுவத்தில் அதிகளவு இருந்ததாலும் மெக்காலேவின் “சதி” பற்றிய அறிக்கையை அரசாங்கம் மீண்டும் அமலாக்க முடிவு செய்தது.
அதன்படி “ஒரு விதவை 18 வயதிற்கு மேல் ஆனவராக இருந்து, அவருடைய கணவன் இறந்து விட்டால் அது கொலை என்று கூற முடியாது” என்று அரசாங்கம் கூறியது. இது மீண்டும் பல இடங்களில் “சதி” என்ற கொடுமை தலை தூக்கக் காரணமாயிற்று. (சான்று: “சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)
பெண்களைத் தீயில் தள்ளிக் கொல்வதில் பார்ப்பனர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்று தெரியுமா? மத்திய ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஆரியர்கள் இமயமலைச் சாரலில் இருந்த கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக (இன்றைய ஆப்கானிஸ்தான் வழியாக) ஊடுருவுகிறார்கள். இமயமலைச் சாரலை அவர்கள் இனப்பெண்களால் தாண்டி வர முடியவில்லை. அதனால் பெண்களை விட்டுவிட்டு மனு ஸ்மிருதிகளைக் கையில் கொண்டு வந்தனர். (“இந்து மதம் எங்கே போகிறது? – இராமனுஜ தாத்தாச்சாரியார்) ஆரியர்கள் ஊடுருவல்கள் ஒரு தொடர் நிகழ்வாகிப் போனது.
முதலில் ஊடுருவிய ஆரியர்கள் (குப்தர்கள் காலத்திற்கு முன்) அவர்கள் பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றை இங்கே புகுத்தினர். இயற்கையை வழிபட்ட திராவிடர்களிடம் ‘இந்திரன்’ என்ற கடவுளைத் திணித்தனர். (வால்காவிலிருந்து கங்கை வரை – இராகுல சாங்கிருத்யாயா). அதற்குப் பின் (குப்தப் பேரரசின் முடிவில்) வந்த அடுத்த காட்டுமிராண்டி ஆரியக் கும்பல் “ஹெப்தலைட்டுகள்”. இந்த முரட்டுக் கும்பல்தான் இந்த மண்ணில் அவர்கள் கடவுள்களான விநாயகர், லட்சுமி, சிவன், விஷ்ணு போன்றவற்றைப் புகுத்தியவர்கள். முழுமையாக இந்த மண்ணின் பெண்களோடு கலந்தவர்கள். (அவர்கள்தான் இராஜபுத்திரர்கள் என்று ஒரு கருத்தியலும் உண்டு).
நம் இனப் பெண்களும் ஆரியர்களைப் பொறுத்த வரை ‘சூத்திர’ப் பெண்களே. அதனால் அவர்களைத் தங்கள் உடல் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குப் பின் அவர்களை ஒழித்து விடும் (Use & throw) பழக்கத்தை பரவச் செய்தனர். (ஆரியப் பார்ப்பனர்களுக்குப் பின் “சதி” பழக்கம் அதிகளவில் இருந்தது இராஜ புத்திரர்களிடம்!) தாங்கள் கையோடு கொண்டு வந்த மனுஸ்மிருதிகளிலும், பகவத் கீதை போன்ற நூல்களிலும் பெண்களை “விபச்சார தோஷமுள்ளவர்கள்” என்றும், “பாப யோனி”யில் பிறந்தவர்கள் என்றெல்லாம் கேவலப்படுத்தியதோடு நில்லாமல் அவர்கள் இணை(கணவன்) இறந்தால் அதே நெருப்பில் போட்டுக் கொல்லும் “சதி”ப் பழக்கத்தையும் வழமையானதாக மாற்றிவிட்டனர். அதனால்தான் எப்படியாவது “சதி”யைக் காப்பாற்ற பார்ப்பனர்கள் அந்தப் பாடுபட்டனர்.
மெக்காலேயின் சட்டம் பல குழப்பங்களுக்கு வழிவகுத்தது. “சதி”யைக் கொலைக்குற்றம் என்கின்ற நிலையிலிருந்து நீக்கி “சதி”யை அந்தப் பெண்ணே ஏற்றுக் கொள்ளும் தற்கொலைச் செயல் என்ற நிலைக்குத் தாழ்த்தியது. கொலைக் குற்றத்திற்கு கொடுக்கப்படும் மரண தண்டனையிலிருந்து பார்ப்பனர்கள் தப்பிக்க இந்த புதிய விளக்கம் ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. “கொலை செய்யப்பட்ட நபர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து மரணமடைந்திருந்தால் அல்லது மரணம் என்கின்ற அபாயத்தை விரும்பி ஏற்றிருந்தால் அது மரணம் விளைவிக்கும் என்ற எந்தவித நோக்கமுமின்றி நிகழ்வதால் அது ஆட்கொலை இல்லை” என்று கேன்னிங் பிரபு தலைமையில் இருந்த சட்டமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் வில்லியம் பென்டிங் பிரபுவின் சட்டமும், லண்டன் பிரிவியூ கவுன்சில் “சதி”க்கு விளைவித்த தடையும் “சதி” குற்றத்தை பெருமளவு குறைத்தது என்பதே உண்மை. கிராமப்புறங்களில் அச்சத்தோடே அங்கொன்றும், இங்கொன்றுமாக அந்தக் கொடுமை நடந்த வண்ணம்தான் இருந்தது. திருட்டுத்தனமாகவோ, அதிகாரிகள் (பார்ப்பனர்களே அதிகாரிகள்) ஆதரவுடனோ இந்தக் கொடுமை நடந்து வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னும் இது ஆங்காங்கு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. (சான்று: “சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)

சுதந்திரத்திற்குப்பின் இந்தியாவின் “அடிப்படை உரிமைகள்” குறித்து ஆவணத்தை உருவாக்க இந்திய (ஆங்கிலேய) அரசாங்கம் ஓர் ஆணையத்தை அமைத்தது. இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியில் இருந்த ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் குழு 1928இல் தனது பரிந்துரைகளை வெளியிட்டது. இந்தியாவின் நீண்டநாள் பிரதமராகவும், “புதிய இந்தியாவின் சிற்பி” என்று புகழப்பட்டவருமான ஜவஹர்லால் நேருவினுடைய தந்தை புகழ் வாய்ந்த வழக்குரைஞர் மோதிலால் நேரு “சதி” பிரச்சினையைப் பற்றிப் பரிந்துரை செய்தார். (சான்று: “சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)
