குரியன் ஜோசப் குழு கலைப்பு விஜய் அரசாங்கத்தின் வரலாற்றுத் துரோகம்- ஆழி செந்தில்நாதன் அரசியல் விமர்சகர்

- Advertisement -

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய், அண்மையில், ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராயும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை கலைத்திருப்பது, பரவலான கண்டனத்தை எழுப்பியிருக்கிறது. ஒரு புதிய ஆளும் அரசு, அதற்கு முந்தைய அரசாங்கத்தின் சில முடிவுகளையும் திட்டங்களையும் மாற்றுவது இயல்புதான். ஆனால் தமிழ்நாட்டின் அடித்தளத்தையே தகர்ப்பதுபோன்ற ஒரு செய்யக்கூடாத செயலாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது. இந்தியக் குடியரசு வரலாற்றில். இப்படி ஓர் அரசியல் தற்கொலையை எந்த மாநில அரசும் செய்துகொண்டதாகத் தெரியவில்லை. தன் சொந்த அதிகாரத்தையே நிராகரிக்கும் மனநிலை கொண்ட இப்படியோர் அரசு தமிழ்நாட்டில் அமையுமென்று நாம் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.

ஆனால் சொத்தையான காரணங்களைக் கூறி இக்குழு கலைக்கப்பட்டது குறித்த எதிர்ப்புணர்வு பொதுச் சமூகத்தில் அதிகம் இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து வெகுமக்கள், கட்சிகள், இயக்கங்கள், அறிவுஜீவிகள் இடையேகூட போதுமான புரிதல் இல்லை.

முன்னாள் முதல் அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் குழுவை நியமித்தபோது, ஒற்றையாட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் வலதுசாரிகளின் ஆட்சிக்கு எதிரான ஒரு பெரும் சவாலாக இருந்தது. 1970களில் இராஜமன்னார் குழு, மாநில சுயாட்சித் தீர்மானம் என இந்தப் போர்க் களத்தையே வடிமைத்த கட்சி தி.மு.க.தான். அன்றைய முதலமைச்சர் கலைஞரின் முயற்சிகளையே பின்பு ஸ்டாலினும் தொடர்ந்தார். குரியன் ஜோசப் குழு அமைக்கப்பட்டது அதில் மிக முக்கியமானது.

மாநில சுயாட்சி என்பது ஒரு சாதாரணமான நிர்வாகச் சீர்திருத்த விவகாரம் அல்ல. சட்டம், நிர்வாகம், நிதி போன்றவற்றைப் பற்றி அது ஆராய்வதால், பலருக்கும் அது சற்று அந்நியமாகத் தெரிகிறது. இடஒதுக்கீடு, மொழி, பண்பாடு, உணவு போன்றவற்றில் ஓர் அரசு தலையிடும்போது, அது நமக்குச் சாதகமா, பாதகமா என்று புரிந்துகொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை. அது உணர்ச்சிவயமாகவும் இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ள, அல்லது இருக்கவேண்டிய, கூட்டாட்சி – சுயாட்சி பற்றிப் பேசும்போது நமக்கு போதுமான புரிதல் ஏற்படுவதில்லை. மாநில சுயாட்சி ஒன்றும் ஜல்லிக்கட்டு மாடு அல்ல.

ஒன்றிய அரசோ மாநில அரசுகளோ மக்களுக்கு எந்த விதமான நன்மைகளைச் (தீமைகளையும்கூட) செய்ய வேண்டும் என்றாலும், அது சட்டங்களைக் கொண்டு வருவது, திருத்துவது, நீக்குவது போன்ற சட்டச் செயல்பாடுகளின் மூலமாகவே தொடங்கியாக வேண்டும். அதுவே சட்டத்தின் ஆட்சி. அந்தச் சட்டங்களின் அடிப்படையிலேயே எல்லா அரசு அமைப்புகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, நிதி, தொழில்நுட்பம், போக்குவரத்து, சுகாதாரம் என எந்த ஒரு துறைக்குமான அடிப்படை என்பது அதற்காக நிறைவேற்றப்பட்ட அடிப்படைச் சட்டங்களான அரசியலமைப்புச் சட்டத்தையும் அதையொட்டி உருவாக்கப்படும் பிற சட்டங்களையுமே பொறுத்தது ஆகும். இந்தச் சட்டங்களை இயற்றும் உரிமை கொண்டவை நாடாளுமன்றமும் மாநில சட்டப்பேரவைகளும். இந்தச் சட்டமியற்று அவைகளில் (Legislative) நிறைவேற்றப்படும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே அமைச்சரவைகளும் நிர்வாகத் துறையும் (Executive) செயல்படுகின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பிற சட்டங்களுக்கும் இசைவாக இருப்பதை உறுதிப்படுத்தவே நீதித்துறையும் (Judiciary) இருக்கிறது. இவ்வாறாக இந்தியாவில் ஜனநாயகத்தின் அடித்தளமாக குடியாட்சி முறையும் அதன் வெளிப்பாடாக சட்டத்தை இயற்றுகிற, நிர்வகிக்கிற, காப்பாற்றுகிற அமைப்புகளும் உள்ளன. இவ்வளவு முக்கியமான சட்டமியற்றும், நிர்வகிக்கும் அதிகாரங்களை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமென பிரித்துத் தந்திருக்கிறது இந்திய அரசியலமைப்பு.

ஆனால் சாரம்சத்தில் அந்த அதிகாரங்களைப் பெரும்பாலும் தன் கையில் வைத்திருப்பது ஒன்றிய அரசுதான். சட்ட அதிகாரங்களை ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என மூன்றாக பிரித்து வைத்திருந்தாலும், சாராம்சத்தில் மாநிலப் பட்டியலை மெலியச் செய்வதும் ஒத்திசைவுப் பட்டியலை ஒன்றியப் பட்டியலாகவே மாற்றிக் கொள்வதுமாக இன்றைய நிலை இருக்கிறது. நீட் விவகாரம் இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

இந்தியாவில் ஒன்றிய மாநில அரசுகளின் உறவில் காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்றால், பாஜக ஒற்றையாட்சி முறையை முன்னிறுத்துகிற கட்சி. ‘மாநில அரசுகளே இருக்க்கூடாது, ஒன்றிய அரசே அனைத்துச் சட்டங்களையும் இயற்றுகிற, நிர்வகிக்கிற அமைப்பாக இருக்கவேண்டும்’ என்று கூறுகிற கட்சி பாஜக. அதாவது ஒரே நாடு, ஒரே அரசாங்கம், ஒரே நிர்வாகம் என்கிற கொள்கையைக் கொண்டது ஆர்எஸ்எஸ்-பாஜக. அவர்கள் மாநிலங்கள் என்கிற அமைப்பையே ஏற்காதவர்கள், அதுவும் மொழிவாரி மாநிலங்கள் என்பதை அறவே வெறுப்பவர்கள். நரேந்திர மோடி அரசு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஒற்றையாட்சியை நோக்கி நகர்த்துவதையே தன் அன்றாட வேலையாகக் கொண்டிருக்கிறது.

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது என்பதை எதோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கட்டுப்படுத்துகிற விசயமாக அது பார்க்கவில்லை. மாறாக, எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடமே குவித்து அதன் மூலம், ஒரு பார்ப்பனிய-பனியா ஏகாதிபத்தியத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அது வெளிப்படையாக முன்வைத்து, வெளிப்படையாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாம் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எத்தனைப் போராட்டங்களை நடத்தினாலும். இந்தியா வெங்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தேர்தல் முறை, விவசாயப் பிரச்சினை, குடியுரிமைப் பிரச்சினை என பல தளங்களில் போராட்டங்கள் நடந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருப்பது இந்த சட்டமியற்றும் மற்றும் நிர்வகிக்கும் அதிகாரங்களை பா.ஜ.க. அரசு கையாளும் முறைதான். எஸ்அய்ஆரும் தேர்தல் தில்லுமுல்லுகளும் இதில் அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் மட்டுமே. எத்தனை நாடாளுமன்ற அமர்வுகளில் எத்தனை அரசமைப்புத் திருத்த மசோதாக் களும் பிற மசோதாக்களும் அமித்ஷாக்களால் அவசர அவசரமாக, ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்டன என்பதை யோசித்துப்பாருங்கள். எந்த விவாதங்களும் இல்லை. எந்தச் சீராய்வும் இல்லை. இந்திய ஜனநாயகமே ‘ஹைஜாக்’ செய்யப்பட்டுவிட்டது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக, சோஷலிச அடித்தளங்களை நொடிப்பொழுதில் அவர்கள் மாற்றுகிறார்கள், ‘இராமராஜ்யம்’ என்பதன் தொடக்கம் காசி நகரில் கங்கை ஆற்றங்கரையில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருந்தாகவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா எதிர்க்கட்சிகளையும் வெளியே அனுப்பிவிட்டு, ஒரு மாலை நேரத்தில், ஏதேனும் ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தால் போதுமானது. அதைத் தன் கையாளாக இருக்கும் நீதித்துறையின் மூலம் தனக்கேற்ப வியாக்கியானம் செய்துகொண்டால் போதுமானது. காஷ்மீரைக் கேட்டுப்பாருங்கள், தெரியும். இந்தியாவில் இந்துராஜ்யம் கனஜோராகத் தொடங்கிவிடும்.

இந்த ஒரு மோசமாக சூழலில்தான், மோடி அரசுக்கு எதிரான மிக முக்கியமான காயை நகர்த்தினார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதுதான் குரியன் ஜோசப் குழு.

ஒரு நூற்றாண்டு சமூக முன்னேற்ற வரலாறு கொண்ட தமிழ்நாட்டைப் பொறுத்துவரை நமது எல்லா ஜனநாயகப் போராட்டங்களும் ஒரே ஒரு மய்யப்புள்ளியில்தான் வந்து குவிகிறது – அது மாநில சுயாட்சி. அதாவது, நமது மாநிலத்தின் மக்களின் நலன்களுக்கு எந்தெந்தச் சட்டங்களையும் திட்டங்களையும் அமைப்புகளையும் நாம் உருவாக்கவேண்டுமோ அவற்றைச் செய்துமுடிக்க நமக்கு இருந்தாகவேண்டிய உரிமைகளின் தொகுப்புதான் மாநில சுயாட்சி.

கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, நிர்வாகம், வேளாண்மை, தொழில், தொழில்நுட்பம், சமூகம், மொழி, பண்பாடு, சுகாதாரம், உள்ளாட்சி, இயற்கைவளம் என எல்லா அதிமுக்கியமான தங்களிலும் தமிழ்நாடு பெற்ற முன்னேற்றங்களுக்கு நமது சட்டங்களே காரணம். பெறமுடியாத முன்னேற்றங்களுக்கு நமக்குள்ள சட்டவரம்புதான் காரணம். நீதிக்கட்சி முதல் நேற்றுவரை நாம் மெல்ல மெல்ல நடைபோட்டு சமூக நீதியை நோக்கியப் பயணத்தில் இதுவரை முன்னேறிக்கொண்டு தந்தோம், மாநில சுயாட்சி இல்லாபோதுமே, மாநில உரிமைகளைப் போராடிக் காப்பாற்றி அவற்றைச் செய்துகொண்டிருந்தோம். அந்தப் பயணத்தை – தமிழ்ச்சமூகத்தின் உரிமைப் பயணத்தை – இதோ முடித்துவைக்கிறார் விஜய்.

69 சதவீத இட ஒதுக்கீடு, மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள், பெண்களுக்கு சொத்தில் பங்கு, சுயமரியாதைத் திருமண ஏற்பு, இருமொழிக் கொள்கை, சத்துணவு, 1980களிலேயே பரவலான பொறியியல் கல்லூரிகள், பள்ளியில் முற்போக்கான பாடநூல்கள், மாநிலமெங்கும் பரவலான தொழில் வளர்ச்சி, கீழடி போன்ற வரலாற்று மீட்புகள், நூலகங்களுக்கான முக்கியத்துவம் என எண்ணற்ற தமிழர் நலத் திட்டங்களும் இலவசத் திட்டங்கள் என அறியப்படும் மக்கள் நலத் திட்டங்களும் எப்படி சாத்தியமாயின? நாம் வெறுமனே சத்தம் போட்டு அவற்றைச் சாத்தியப்படுத்தவில்லை. சட்டம் போட்டு அவற்றைச் சாத்தியப்படுத்தினோம்.

அந்த அடித்தளத்தையே சிதைக்கவேண்டும் என விரும்புகிறது பாஜக! அதற்குத் துணைபோகிறது தமிழ்நாட்டு தவெக அரசு. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு, தமிழ்நாட்டையும் பாதாளத்தில் வீழ்த்துகிறது விஜய் ‘சர்க்கார்’.

1974 இல் இராஜமன்னார் குழு அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாநில சுயாட்சித் தீர்மானத்தை அன்றைய முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார். அப்போது நமது சட்டப்பேரவையிலும் மேலவையும் மிக நீண்ட விவாதமொன்று நடந்தது. அதிலிருந்து ஒரே ஒரு கேள்வி பதிலை மட்டுமே இங்கே தருகிறேன்:

திரு ஜே ஜேம்ஸ்: ஜனசங்கம் மதத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு கட்சியாக இருக்கிறது. ஒரு வேளை ஜனசங்கம் ஆட்சியில் இருக்கக்கூடிய நிலைமை ஒரு மாநிலத்தில் ஏற்பட்டால், அங்கு முஸ்லீம் மைனாரிட்டிகள் நிலைமை என்ன ஆகும்?

முதல்வர் கலைஞர்: அதுபோல ஜனசங்கம் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஒரு அரசு அமைகிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்?

அத்துடன் விவாதத்தில் வேறு ஒரு இடத்தில் கலைஞர் சொன்ன பதில்: மாநிலத்தில் ஒரு முன்னேற்ற சர்க்கார் வந்து, முற்போக்கான சமதர்மத் திட்டத்தை நிறைவேற்றுகிற சர்க்காராக, இன்னும் தீவிர சர்க்காராக அமைந்து, அதற்கு நேர்முகமாக மத்திய அரசு ஒரு சனாதன சர்க்காராக, பிற்போக்கு சர்க்காராக அமைந்தால், அப்போது நிலைமை என்ன?

அவரது எச்சரிக்கை, இன்றைய வரலாறு.

இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியின் தோற்றுவாயாக இந்த நாள் இருக்கும் என்று மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய நாளைக் குறிப்பிட்டுப் பேசினார் கலைஞர். அந்த ஜனநாயகப் புரட்சியைத் தொடர முயன்றார் ஸ்டாலின். அந்த ஜனநாயகப் புரட்சியின் தொடர்ச்சியைக் குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் விஜய்.

தொடர வைக்க வேண்டியது தமிழ்நாட்டின் நலன் காக்க விரும்பும் நம் அனைவரின் கடமை. எவ்வளவோ சாதனைகளைச் செய்தவர் கலைஞர். ஆனால் அவரே தன் வாழ்நாளின் ஆகப்பெரும் பங்களிப்பு எனக் கருதுவது மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதைத்தான். அப்படியென்றால், நாம் அதன் முக்கியத்துவத்தை அறியத்தான் வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *