டிஜிட்டல் சர்வாதிகாரம்! வாக்காளர் உரிமைப் பறிமுதல் முதல் தனிமனித உரிமைத் தலையீடு வரை

4 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பாணன்

தேர்தல் ஆணையம் (ECI) பயன்படுத்தி வரும் மென்பொருள் அல்காரிதங்கள், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்துச் சரிபார்க்கும் மாநில வாக்காளர் பதிவு அதிகாரிகளின் (இ.ஆர்.ஓ.) சட்டப்பூர்வ அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்து, டில்லியிடம் அதிகாரத்தை மத்தியமயமாக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் கண்ட முதல் அறிகுறி: இ.ஆர்.ஓ. அதிகாரிகளின் அதிகாரம் முடக்கம்!

ஜனவரி மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளின்போது இ.ஆர்.ஓ. (ERO – Electoral Poll Officer) அதிகாரிகளின் அதிகாரங்கள் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் யார் இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அதுவரை இ.ஆர்.ஓ. அதிகாரிகளிடமே இருந்த நிலையில், அதற்குப் பதிலாக டில்லியிலிருந்து ‘சிறப்புப் பட்டியல் பார்வையாளர்கள்’ (Special Roll Observers) அனுப்பப்பட்டனர். இறுதிப் பட்டியலில் வாக்காளர்களைச் சேர்ப்பதா அல்லது நீக்குவதா என்ற முடிவை இந்த சிறப்புப் பார்வையாளர்களே எடுத்தனர்.

‘இ.ஆர்.ஒ. நெட்’ மென்பொருள் மூலம் தன்னிச்சையான கட்டுப்பாடுகள்

இந்த மாற்றங்கள் அனைத்தும் ‘இ.ஆர்.ஓ. நெட்’ என்ற மென்பொருள் மூலமாகவே அரங்கேற்றப்பட்டன.

இ.ஆர்.ஓ. அதிகாரிகள் தங்களது வழக்கமான பணிகளைச் செய்வதைத் தடுக்கும் வகையில், இந்த மென்பொருளின் வசதிகள் தன்னிச்சையாகச் செயல்பாட்டில் வைக்கப்பட்டும், பின்னர்க் முடக்கப்பட்டும் வந்தன.

ஆதார் பதிவேற்றம் தடை

ஒரு கட்டத்தில், அடையாளச் சான்றாக ஆதாரைப் பதிவேற்றம் செய்யும் வசதி மென்பொருளில் திடீரென முடக்கப்பட்டதால், இ.ஆர்.ஓ. அதிகாரிகளால் ஆதாரை ஆவணமாகப் பதிவேற்ற முடியாமல் போனது.

‘விஅய்பி’ வாக்காளர்களுக்குத் தனி வசதி: ஏழை மக்களுக்கோ நீண்ட வரிசையாம்!

தேர்தல் ஆணையம் தனது விருப்பத்திற்கு ஏற்ப மென்பொருள் அல்காரிதம்களைத் தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. ‘ரிபோடர்ஸ் கலக்ட்’ என்ற இணைய இதழ் செய்தியாளர்கள் நடத்திய ஆய்வில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி ஒன்று கண்டறியப்பட்டது.

பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள், அய்.ஏ.எஸ்./அய்.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள், பிரபலங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் போன்ற சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களை அடையாளப்படுத்தப் புதிய வசதி தொடங்கப்பட்டது.

டில்லியில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த நடவடிக்கைகளுக்காகக்  லட்சக்கணக்கான ஏழை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்ட நிலையில், விஅய்பிக்களுக்கு மட்டும் இந்தச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. டிசம்பர் மாதம், தங்கள் மென்பொருள்கள் திறம்படச் செயல்படவில்லை என்றும், அதனால் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைகளுக்காக அவற்றை முழுமையாக நீக்கிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால், அடுத்த எட்டு நாள்களுக்குள்ளேயே 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.அய்.ஆர்.-இன் இரண்டாம் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, களத்தில் சோதனை செய்யப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத புதிய அல்காரிதம்களைத் தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக அறிமுகப் படுத்தியது. மேலும், இதனால் ஏற்பட்ட குழப்பங்களைச் சரிசெய்ய எவ்வித அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகளும் அனுப்பப்படாமல், வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக மட்டுமே கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த வாக்காளர் பட்டியல் புலனாய்வுத் திட்டம், இந்தியத் தேர்தல் அமைப்பில் தொழில்நுட்பத்தின் பெயரால் அதிகார பரவலாக்கம் சீர்குலைக்கப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது.

வாக்காளர் சிறப்பு
தீவிர திருத்தப் பணி

இ.ஆர்.ஓ. நெட்,  இ.சி.அய். நெட் செயலிகளால் பறிபோன கோடிக்கணக்கானோரின் வாக்குரிமை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் மேலாண்மைக்கான டிஜிட்டல் அமைப்புகளான இ.ஆர்.ஓ. நெட்,  இ.சி.அய். நெட் ஆகியவை, வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மய்யப்படுத்தப்பட்ட நிர்வாகம் காரணமாக நாட்டின் கவனத்தைப் பெற்றுள்ளன. வாக்காளர் பதிவு, வேட்பாளர் தகவல், e-EPIC பதிவிறக்கம் போன்றவை ஒரே மய்யத்திற்குக் மாற்றப்பட்டுள்ளன.

தற்போது இ.ஆர்.ஓ. நெட்  (ERONet) தளமானது, இ.சி.அய். நெட் (ECINet)-இன் ஒரு பகுதியாக (“Electoral Roll module of ECINET”) செயல்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, பழைய தரவுத்தளத்துடன்  தற்போதைய வாக்காளர் விவரங்களைப் பொருத்திப் பார்க்க இந்தச் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது.

தெலங்கானா, கருநாடகா, மகாராட்டிரா, டில்லி போன்ற மாநிலங்களில் சுமார் 1.76 கோடி வாக்காளர்களுக்கு மென்பொருள் மூலமாக “பிழைகள் உள்ளதாக” அறிவிக்கைகள் அனுப்பப்பட்டன.

2002-ஆம் ஆண்டின் பழைய பட்டியல்கள் தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மாநில மொழிகளில் இருந்ததால், அவற்றை ஆங்கிலத்தில் மாற்றும்போது உச்சரிப்பு மற்றும் எழுத்துகள் மாறுபாடுகளால் மென்பொருள் தவறாகப் பிழைகளைக் காட்டியது.

பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் தவறாகக் கணக்கிடப்பட்டதாக அறிவிக்கைகள் அளிக்கப்பட்டன.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி (Representation of the People Act, 1950), வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இறுதி அதிகாரம் அந்தந்த பகுதி Electoral Registration Officer (ERO) களுக்கே உண்டு.   ஆனால், மென்பொருள் மய்யப்படுத்தப்பட்டதால் (Centralised Control) உள்ளூர் ERO/DEO அதிகாரிகளுக்கு அமைப்பில் முழுமையான அனுமதி வழங்கப்படவில்லை எடுத்துக்காட்டாக கோவாவில் ERO-க்கள் தகுதியானவர்கள் எனக் கண்டறிந்த  வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மென்பொருள் அனுமதிஅளிக்கவில்லை

இது இ.ஆர்.ஓ. அதிகாரிகளால் தலைமைத் தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் போன்றோரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் விளக்கிய போது அவர் இதனைப் பொருட்படுத்தவில்லை.

இதேதான் முதலில் பீகார், பின்னர் மேற்குவங்கம், அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் நடந்துள்ளது. இதுநாள் வரை எஸ்.அய்.ஆர். மூலம் 15 கோடி வாக்களர்களின் வாக்குரிமைப் பறிபோயுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *