மதுரை, நவ.11- எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விரிவான விவரங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கதிர் என்ற வின்சென்ட் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 2015 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தரவுகள் கிடைக்கப்பெற்ற மாவட்டங்களில் மொத்தம் 11,117 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 3,611 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும், மாவட்ட வாரியாக இந்த வழக்கு குறித்த பதிவேடுகளை பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று (10.11.2026) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விரிவான, மாவட்ட வாரியான புள்ளிவிவர அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குநர், கூடுதல் தலைமை இயக்குநர் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையில் பின்வரும் விவரங்கள் இடம்பெற வேண்டும்:-
பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை, புலனாய்வு விசாரணை முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை, அந்தந்த நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட கால இடைவெளியில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, மேல்முறையீடு செய்வது அல்லது தண்டனையை அதிகரிப்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சேகரித்து வருகிற 24ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
