கள்ளக்குறிச்சி, நவ. 11- பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் குறித்து சிபிஅய் அல்லது சிபிசிஅய்டி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மனு அளித்துள்ளார். மனு அளிக்கும்போது, சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தவேல், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை என்பது வெட்கக் கேடானது என விமர்சித்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினரின் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்திட அனுமதி கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை கோரி நீதிமன்றத்தையும், மகளிர் ஆணையத்தையும் திமுக அணுகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
