சென்னை, நவ. 10- புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்கிலும் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 260 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு 3 மாதத்துக்கான ஊதியம் வழங்க ரூ.8.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசு கருவூலம் மூலம் கல்லூரியின் வங்கிக் கணக்குக்கு கடந்த 3ஆம் தேதி இரவு வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கல்லூரி நிர்வாக வங்கிக் கணக்கில் ஏற்கெனவே இருந்த பணத்துடன் சேர்த்து ரூ.8.85 கோடி திடீரென காணாமல் போனது. கருவூலத்தில் இருந்து பணம் வரவு வைக்கப் பட்ட 2 மணி நேரத்தில் இந்த பணம் டிஜிட்டல் முறையில் திருடப்பட்டது. அம்மாநில சைபர் கரைம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோசடிக் கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதே போல, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்கு களில் இருந்தும் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி அரசு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிதி, 15-ஆம் நிதிக்குழு மானியத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சுகாதார நல மய்யங்கள் கட்டுவதற்கான திட்டத்துடன் தொடர்புடையது.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊராட்சிகளிலும் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நல மய்யக் கட்டிடங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறையில் மாநில அளவிலான ஒற்றை மய்ய வங்கிக் கணக்கு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் பணிகள் நிறைவு அறிக்கையை அளித்த பிறகே சம்பந்தப்பட்ட நிதி விடுவிக்கப்படும். அதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒப்பந்த தாரர்களுக்கு பணம் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்னையில் இருந்து நிர்வகிக் கப்படும் இந்த வங்கிக் கணக்கு களில் இணைய வழியாக ஊடுருவி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் நடந்துள்ள இந்த மோசடிகளின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சைபர் க்ரைம் கும்பல் களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
