புதுடில்லி, நவ. 9- வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து விலகும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உறுதியளித்துள்ளார்.
ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாகப் போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது இடைப்பட்ட காலத்தில் கைவிடப்படும் போராட்டம் அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இது குறித்து கே.சி. வேணுகோபால் மேலும் கூறுகையில், “ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தேர்தல் முறை மற்றும் செயல்பாடுகள் எந்தவித பாரபட்சமுமின்றி முற்றிலும் நேர்மையானதாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகே நாங்கள் இந்த அறப்போராட்டத்திலிருந்து விலகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டையைக் கட்டாயமாக்க ஒன்றிய அரசு பரிந்துரைத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் காரணமாக வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் ஏழை எளிய மக்கள் தங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழப்பதுடன், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் பாதிக்கப்படுவர் எனத் தீவிரக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
