
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயி லில், கோபுரத்தைச் சுத்தம் செய்ய சாமி உலா வர பயன்படுத்தப்படும் நந்தி வாகனத்தை, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியதற்கு, இந்து அமைப்புகள் கூக்குரல் போடுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயி லில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், ஆன்மிக உணர்வோடும், வழிபாட்டு மரபுகளோடும் தொடர்பு டைய, சிவபெருமானின் நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறதாம்!
இந்த சம்பவத்திற்காக கோயில் நிர்வாகம், பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டுமாம்! முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்!
‘‘இனி வரும் காலங்களில் கோயில் வாக னங்கள், ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாக பயன்படுத்தப்படாது, கோயில்களின் ‘புனித’தத்தை பாதுகாப்போம் என அறநிலையத் துறை உறுதி யளிக்கவேண்டும்’’ என்று அறிக்கைகள் விடப்பட்டு உள்ளன.
சிவலிங்கமும் சரி, அதனுடைய வாகனம் என்று சொல்லப்படும் நந்தியும் (காளை மாடு) சரி, ஒன்று கல்லாயிருக்கவேண்டும்; அல்லது உலோகத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
இதில் ‘புனிதம்’ கெட என்னவிருக்கிறது? சிறு பிள்ளைகள் கூட்டாஞ்சோறு விளையாடுகிறார்கள் என்றால், பெரியவர்கள் பக்தியின் பெயரால் இந்த சாமி விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் – அவ்வளவுதானே!
அப்படியே அந்த சிலைகளுக்குத் தெய்வீக சக்தி இருப்பது உண்மை என்றால், அந்த சாமி பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே! தேவையில்லாமல், அந்த சிலைகளுக்காக வக்காலத்து வாங்குவானேன். இந்த சிலைகளைப்பற்றி பிரபல கணபதி ஸ்தபதி என்ன சொல்லுகிறார்?
கடவுளைக் கற்பித்தவர்!
‘‘ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரி யும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்படறீங்க?’’
‘‘நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வர ணும். அப்பதான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான்் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?’’
– கணபதி ஸ்தபதி, 11.6.2006,
‘கல்கி’ இதழில்
தீர்ந்து போச்சே கதை! எத்தனை எத்தனை சாமி சிலைகளை செதுக்கிய அனுபவம் கணபதி ஸ்தபதி அவர்களுக்கு?
‘‘நாங்கள்தான் கடவுளை உருவாக்குகிறோம்’’ – என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டாரே!
இதற்கு ஏன் கூச்சல்?
