ஜப்பானில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 22 பேர் காயம்; மக்கள் அச்சம்

- Advertisement -

டோக்கியோ,  நவ. 9- ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று (நவம்பர் 8) அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதுடன், கடைகளின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் மய்யப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகள் காரணமாக அய்ச்சி, ஹமமட்சு, யாமனாஷி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த திடீர் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் இயக்கப்படும் ஷிங்கன்சென் (Shinkansen) அதிவேக ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

வண்ணார் சமூகத்தைப் பட்டியல்
இனத்தில் சேர்க்கக் கோரி வழக்கு

உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை, நவ. 9- தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வண்ணார் சமுதாயத்தினரை பட்டியலினத்தவர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ்நாடு வண்ணார் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் த.ம.பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை தாலுகாவில் வசிக்கும் வண்ணார் சமுதாயத்தினர் மட்டும் பட்டியலினத்தவர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, செங்கோட்டையில் வசிக்கும் வண்ணார் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் அதே பாகுபாடும், ஒடுக்குமுறைகளையும் சந்திக்கும் பிற மாவட்டங்களில் வசிக்கும் வண்ணார் சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் பெரும்பான்மையான வண்ணார் சமுதாயத்தினர் வறுமையிலும், முறையான வீட்டு வசதி இல்லாமலும், ஜாதிரீதியாக ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் இரு மாவட்டங்களில் வசிக்கும் வண்ணார் சமுதாயத்தினரை மட்டும் பட்டியல் இனத்தவர்களாக அறிவித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. இடஒதுக்கீட்டில் அதிக போட்டி நிலவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வண்ணார் சமுதாயத்தினரை சேர்த்துள்ளதால் காவல்துறை, ஆசிரியர் பணி உள்ளிட்ட அரசு பணிகளில் சம பிரதிநிதித்துவம் மற்றும் சலுகைகள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாட்டில் வசிக்கும் வண்ணார் சமுதாயத்தினரின் சமூக பொருளாதார நிலைகுறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவான ஆய்வு நடத்த வேண்டும். வண்ணார் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மாற்றி பட்டியலினத்தவர் வகுப்பில் சேர்க்க வேண்டும்.  இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் அளித்த மனுவை பரிசீலித்து வண்ணார் சமுதாயத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வண்ணார் சமுதாயத்தினரை பட்டியலினத்தவர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் வங்கியில் வேலை – 1,500 பணியிடங்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சென்னை, நவ. 8- 2026–2027 நிதியாண்டிற்கான 1,500 பயிற்சிப் பணியிடங்களுக்கான (தமிழ்நாட்டில் உள்ள 270 காலிப்பணியிடங்கள் உட்பட) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி (Indian Bank) வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

பயிற்சிப் பணியிடங்கள்: 1,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 270 இடங்கள்.

பயிற்சிக் காலம்: ஒரு ஆண்டு

கல்வி தகுதி: 1-4-2022-க்கு பிறகு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள். 1-11-2026-க்குள் இறுதி தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 25-11-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

ஊக்கத்தொகை (மாதம்): மெட்ரோ/நகர்ப்புறம்-ரூ.15,000, புறநகர்/கிராமப்புறம்-ரூ.12,300

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-11-2026

இணையதள முகவரி: https://indianbank.bank.in/en/career

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *