தாம்பரம், நவ.7- ‘ஆன்லைன் டிரேடிங்’கில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் சிக்கிய தகவல் தொழில்நுட்ப (அய்.டி.) நிறுவன மேலாளர், கடனை அடைக்க பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றபோது கைதானார்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த ஒரு மாதமாக தாம்பரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (5.11.2026) வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து சானடோரியம் வரை பேருந்தில் சென்றார். பின்னர் அங்கிருந்து நடைமேம்பாலம் வழியாக நடந்து சென்றார்.
அப்போது நடைமேம்பாலத்தில் இருந்த ஆதரவற்றோருக்கு, தான் வாங்கி வைத்திருந்த லட்டுகளை புவனேஸ்வரி வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென புவனேஸ்வரி மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, அவர் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சங்கிலி பறிக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்த குப்புசாமி (46) என்பது தெரியவந்தது. பி.காம். பட்டதாரியான இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் அய்.டி. நிறுவனத்தில் புராஜெக்ட் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஆன்லைன் டிரேடிங்கில் அதிகளவில் பணத்தை இழந்ததால் குப்புசாமி கடன் தொல்லையில் சிக்கியுள்ளார். கடனை அடைப்பதற்காக பம்மலில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்றுள்ளார். இருப்பினும், அந்த பணத்தால் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை.
இதனால் கடனை அடைக்க வேறு வழியின்றி நகைபறிப்பில் ஈடுபட முடிவு செய்து, நடைமேம்பாலத்தில் சென்ற புவனேஸ்வரியிடம் பெப்பர் ஸ்பிரே அடித்து சங்கிலி பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமியை தாம்பரம் காவல் துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
