மலர்மன்னன், திருச்சி
திருச்சி மேலப்புதூர் பகுதியில், எங்கள் வீட்டு அருகில் மாரியம்மன் கோயில் உள்ளது. அதன் சாவி எங்கள் வீட்டில்தான் இருக்கும். அக்கோயிலின் செயலாளராக எங்கள் அப்பா இருந்தார்.
இந்நிலையில் எங்கள் மாமா வலங்கை விசு என்கிற நா.விசுவநாதன் பகுத்தறிவாளர் கழகத்தில் ஊட்டியில் இருந்து செயல்பட்டு வந்தார். தெருமுனைப் பிரச்சாரத்தை ஊட்டியில் தொடர்ந்து நடத்தினார்கள். பல மாநாடுகளிலும் அவரது நாடகங்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் தான் எனக்குப் பெரியார் கொள்கை அறிமுகம். இப்போது திருச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பில் இருக்கிறேன்.

ஜப்பான் செல்லும் ஆசை!
இந்நிலையில்தான் ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு நடைபெற உள்ளது என்பதை, ஏப்ரல் மாதம் ‘விடுதலை’ ஏட்டின் மூலம் அறிந்து பெயர் பதிவு செய்தேன். உலக மக்களைப் போல தமிழர்கள் ஏற்றத் தாழ்வு அற்ற, ஜாதியற்ற சமுதாயத்தைக் காண விரும்பி தந்தை பெரியார் தன் 95 வயதிலும் பட்டி, தொட்டி என உலகமே சுற்றுச் சுற்றி மக்களைப் பக்குவப்படுத்தினார். அவர் காலத்திற்குப் பின் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி அவர்கள் பெரியாரின் கொள்கையை, உலகமயமாக்கும் பணியை மேற்கொண்டு கனடா, ஜெர்மன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாநாடுகள் நடத்தினார். தற்போது ஆசிரியர் அவர்கள் ஜப்பானில் மாநாடு என அறிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாநாட்டில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற பெரியார் மனிதநேய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 9ஆம் தேதி சென்னை விமான நிலையம் சென்றோம். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் பங்கேற்பதாக இருந்து, கடைசி நேரத்தில் பயணம் ரத்தானது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியருடன் பயணம் செய்து மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால், எங்களின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கும்! இந்நிலையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வந்திருந்தனர்.
சிங்கப்பூர் டாலர் பரிசு!
எங்களை வரவேற்றுச் சிறப்புச் செய்து, விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தார்கள். பல நிலைகளைத் தாண்டி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் உணவு, குளிர்பானம் கொடுத்தார்கள். அப்போது ஆரஞ்சு பழச்சாறு தவறுதலாக என் மீது சிந்தியது. உடனே விமான ஊழியர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டதுடன், நட்ட ஈடாக 75 சிங்கப்பூர் டாலரும் எனக்குக் கொடுத்தனர். அடுத்த நாள் 10 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஜப்பான், ஹனேடா விமான நிலையம் சென்றடைந்தோம்.
விமான நிலையத்திற்கு வெளியே ஜப்பானியத் தோழர்கள் பலர் எங்களை வரவேற்று, அழகிய பேருந்தில் எங்களை “ஸ்மைல்” தங்கும் விடுதி இருந்த “நிஷிகசாய்” பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
ஞாயிறு, திங்கள் (அக்டோபர் 11,12) இரண்டு நாள் மாநாடு முடிந்து அடுத்த நாளில் இருந்து 3 நாட்கள் சுற்றுலா சென்றோம். முதலில் பெரிய பூங்கா ஒன்றிற்குச் சென்றோம். அங்கிருந்த 150 அடி ராட்டினத்தில் சுற்றி வந்தோம். டோக்கியோ நகரின் அழகை ரசிக்க அது வாய்ப்பாக இருந்தது. டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா, வழக்குரைஞர் அருள்மொழி, மதுரை முனியசாமி, நான் ஆகிய அய்ந்து பேரும் சென்றோம். டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், தம் சிறு வயதில் கொய்யா மரத்தில் ஏறி விளையாடியது, குளத்தில் குதித்து விளையாடியது எனச் சுவையான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நிறைய தோழர்களிடம் நான் பேசியதோ, பழகியதோ கிடையாது. பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால், அனைவரையும் சந்திக்கவும், இனிய முறையில் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.

அறிவியலின் உச்சம்!
அடுத்த நாள் ஃபூஜி மவுண்ட் என்று அழைக்கப்படும் எரிமலை பார்க்கச் சென்றோம். திரும்பும் போது ஜப்பான் கிராமங்களுக்குச் சென்று ரசித்து வந்தோம். அதேபோல “புல்லட்” ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதிநவீன தொழில் நுட்பங்களை ஜப்பானியர்கள் அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது. இதேபோன்று வியக்கத்தக்கப் பல இடங்களுக்குப் போனோம்.
இந்தியாவில் சொர்க்கம், சொர்க்கம் என மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பார்ப்பனக் கும்பலிடம் நான் சிக்காமல் இருக்கக் காரணம் தந்தை பெரியார். அவர் கொள்கை வழி வாழ்வதால் ஜப்பான் போன்ற சொகுசான நாட்டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எதிலும் அறிவியல் பின்னிப் பிணைந்துள்ளது. “டீம் லேப்ஸ்” என்கிற இடத்திற்குப் போனோம். அவையெல்லாம் அறிவியலின் உச்சம், அங்கு நின்றால் மனித மன மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
உடன் பயணித்த தமிழ்நாட்டுத் தோழர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி! அதேபோல பேருந்தில் வழிகாட்டியாக வந்த ஜப்பான் தோழர் சந்தீப், பன்முகப் பணிகளை மேற்கொள்ளும் வி.சி.வில்வம் ஆகியோருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்நாளில் மறக்கவே முடியாத நாடு ஜப்பான்!
