நம்பூதிரிப் பார்ப்பனர்கள் விதித்த ஜாதிய சட்டங்கள் மூலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் கோயில்கள் எல்லாம் அவர்களின் சொந்த சொத்துகள் போலாகிவிட்டது. கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்களும் கோயில்களின் சொத்துகள் என்றே நிறுவிவிட்டனர். கோயில்களில் இருக்கும் தெருக்களில் கூட அவர்கள் அனுமதிப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பது ஜாதிய சட்டமாக்கப்பட்டுவிட்டது.
மாடுகளும், நாய்களும், பன்றிகளும் நுழைய முடிந்த கோயில் சுற்றுத் தெருக்களில் கீழ் ஜாதியைச் சேர்ந்த மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. “கீழ்ஜாதி” என்ற ஒரே காரணத்தால், அடிப்படை மனித உரிமை கூட அந்த நாட்டில் மறுக்கப்பட்டது. இந்த நிலையை மாற்ற ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்த மக்கள் மேல் விதிக்கப்பட்ட தெரு நுழைவுக் கட்டுப்பாடு ஒழிய இந்தப் போராட்டமே காரணமாகி விட்டது.
திருவாங்கூர் சமஸ்தானம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் என்ற ஊர் உள்ளது. அந்த ஊரில் “சிறீ மஹாதேவர் அம்பலம்” (கோயில்) என்ற கோயில் உள்ளது. “வைக்கத்தப்பன்” என்றும் அந்தக் ‘கடவுளை’ அழைப்பர். கோயில்களின் சுற்றுத் தெருக்களில் ஈழவர், சாணார், பறையர், புலையர் போன்ற ஜாதியினரும், அவர்களைப் போன்ற மற்ற கீழ் ஜாதியினரும் நுழைய முடியாத ஜாதியக் கட்டுப்பாடு இருந்தது. ஒருமுறை ஈழவ ஜாதியைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் ஏதோ ஒரு அவசர காரணமாக அந்தக் கோயில் தெருவில் நுழைந்ததற்கு, பார்ப்பனர்களால் தாக்கப்பட்டார். இந்த நிகழ்வு ஒரு பெரும் ஜாதிய ஒழிப்புப் போராட்டத்திற்கு வழி வகுத்தது. “வைக்கம் போராட்டம்” என்றும், “வைக்கம் சத்யாகிரகம்” என்றும் வரலாற்றில் இடம் பெற்ற போராட்டமே அது!
இந்த ஜாதிய இழிவை ஒழித்து, மனித உரிமையை நிலைநாட்ட கேரள காங்கிரஸ் முதல் முயற்சியைத் துவக்கியது. கேரள காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் கே.பி.கேசவமேனன் ஒடுக்கப்பட்ட ஈழவர், புலையர் போன்ற மக்களைக் கூட்டிக் கொண்டு மகாதேவர் ஆலயத் தெருக்களில் நழையப் போவதாக 1.3.1924 அன்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. இந்தப் போராட்ட அறிவிப்புக்கு காந்தியாரின் அனுமதியும், ஆசியும் கிடைத்தது. இந்த நூற்றாண்டில் நடந்த ஒரு பெரிய சமூகநீதப் போர் என்றே இந்தப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். அண்ணல் அம்பேத்கர் தன் ‘மகர்’ குளப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக இருந்தது இந்தப் போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு சமூகப் புரட்சியை வைக்கம் போராட்டம் நிகழ்த்திக் காட்டியது.
மகாதேவர் ஆலயச் சுற்றுத் தெருக்களில், கீழ் ஜாதியினரை அழைத்துக் கொண்டு நுழைவதாக கே.பி.கேசவமேனனின் அறிவிப்பு, நம்பூதிரிப் பார்ப்பனர்களிடையே பெரும் சீற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவர்கள் உடனே ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். மகாதேவர் கோயில் சுற்றுச் சாலைகள் கோயிலைச் சார்ந்தவை என்றும், அவை எப்போதும், எல்லா மக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து விடப்படுவதில்லை என்றும், தனியார் (கோயில்) சொத்துகள் மீது அந்நியர்கள் பிரவேசிக்க முடியாது என்றும், அந்தத் தெருக்களில் தடை செய்யப்பட்டவர்கள் நுழைவதை அத்து மீறியதாகக் கருத வேண்டும் என்றும், அதனால் பொது அமைதி பாதிக்கப்படும் என்றும், கோயிலில் வழிபடுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.
வழக்கை ஆய்வு செய்த நீதிமன்றம் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கூற்றை ஆமோதித்து, கோயில் தெருக்கள் கோயிலின் தனிச் சொத்து என்றும், அதில் நுழைய மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும், பல்லாண்டுகளாகக் காப்பாற்றி வந்த பாரம்பரியத்தை உடைக்க முடியாது என்றும், கோயிலின் “புனிதம்”(?) காப்பாற்றப்பட வேண்டும் என்றும், அதனால் கோயில் தெருக்களில் நுழைய தடையுள்ள ஜாதியினர் அந்தத் தெருக்களில் நுழையத் தடை விதிப்பதாகத் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றம் தடை விதித்து போட்ட உத்தரவை மீறுவது என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பதாகவும் வைக்கம் போராட்டக் குழுத் தலைவர் கே.பி.கேசவமேனன் அறிவித்தார். 30.3.1924 அன்று தாழ்த்தப்பட்ட மக்களோடு மகாதேவர் ஆலயச் சுற்றுத் தெருக்களில் நுழையும் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கப் போவதாக போராட்டக் குழு அறிவித்தது.
இந்த அறிவிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. திருவாங்கூர் அரசு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், போராட்டக் குழுவினர் திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவது என்பதில் உறுதியாக நின்று, போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியது. கோயில் அமைந்துள்ள பகுதிகளில் அமைதிக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், வருவாய்த் துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்குக் குறிப்பிட்ட அந்த நாளும் (30.3.1924) வந்தது. நகரே பரபரப்பாக இருந்தது.
கேவசமேனன், ஏ.கே.பிள்ளை, டி.கே.மாதவன், வேலாயுத மேனன், டி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள், பல ஆயிரம் (ஈழவர், புலையர்) மக்களுடன் பெரும் ஊர்வலமாக வைக்கம் தெருக்களில் சென்றனர். காவல் துறை கோயிலின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்புகளைப் போட்டு வைத்திருந்தனர். அந்தத் தடுப்புக்கு இரண்டு கஜத் தூரத்தில் ஊர்வலத்தினர் நின்றனர்.
முதல்முதலாக ஒடுக்கப்பட்ட மக்களில் யார் அந்தத் தெருக்களில் செல்வது என்று முடிவை ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்து வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட “குஞ்சப்பா” என்ற புலையரும், “பாஹிலயன்” என்ற ஈழவரும், “கோவிந்த பணிக்கர்” என்ற நாயரும் கதராடை அணிந்து ஊர்வலத்தின் முன் வந்தனர். அவர்கள்தான் தடை செய்யப்பட்ட கோயில் தெருக்களில், தடை செய்யப்பட்டதை மீறி நுழைய ஆர்ப்பாட்டத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பெரும் முழக்கத்துடன், ஆரவாரத்துடன் அவர்களுக்குத் தலைவர்கள் மாலைகள் போட்டனர். போராட்டப் போராளிகள் கோயில் தெருக்களை நோக்கி நடந்தனர்.
தடுப்புகள் அருகே ஏராளமான காவலர்கள் நின்றிருந்தனர். தடைகளை நெருங்கிய போராளிகளைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்தத் தெருக்களில் நுழைய நீதிமன்றம் தடை செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி காவலர்கள் அவர்களை திரும்பிப் போகச் சொன்னார்கள். ஆனால், போராளிகளோ, தாங்கள் திரும்பிப் போக முடியாது என்றும், தடையை மீறி அத்தெருவில் நடக்கப் போவதாகவும், காவல் துறையினர் அவர்கள் கடமையைச் செய்யலாம் என்று கூறி தடைகளைத் தாண்டி தெருவில் நுழைய முயன்றனர்.
காவலர்கள் ஒரு சுவர்போல் நின்று அவர்களைத் தடுத்தனர். ஒரு சிறிய தள்ளு, முள்ளுக்குப் பின் போராளிகளை காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கிடையே கைதான போராளிகள், காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர். கோயில் தெருக்களில் நுழையும் மனித உரிமைக்கானப் போராட்டம் இந்த வகையில் வைக்கம் மகாதேவர் கோயிலின் அருகே துவங்கியது.
(சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்)
30.3.1924இல் துவக்கப்பட்ட வைக்கம் போராட்டத்தை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்பதில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் குறியாய் இருந்தனர். பார்ப்பனர்களின் சார்பாக சிவராம அய்யர் என்பவரும் வாஞ்சேஸ்வர அய்யர் என்பவரும் காந்தியாரைச் சந்தித்து போராட்டத்தை நிறத்த வேண்டுகோள் வைப்பது என்று பார்ப்பனர்கள் முடிவு செய்தனர்.
காந்தியார் பம்பாய் அந்தேரியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு சிவராம அய்யர், வாஞ்சேஸ்வர அய்யர் குழுவினர் பம்பாய் புறப்பட்டனர். 1.4.1924 அன்று திருவாங்கூர் குழுவினர் காந்தியாரை சந்தித்தனர். “பிரச்சினைக்குரிய சாலைகள் கோயில் சொத்துகள் என்றும், அவை பார்ப்பன டிரஸ்ட்கள் வசம் உள்ளவை என்றும், அவர்கள் போட்ட ஜாதியக் கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதையும், தாழ்த்தப்பட்டவர்கள் அத்தெருக்களில் நடந்தால் கோயில் தெருக்களின் புனிதம் கெட்டு விடும்” என்று தங்கள் எண்ணத்தை காந்தியாரிடம் வெளிப்படுத்தினர்.
காந்தியார் “அந்தத் தெருக்களில் பார்ப்பனர் அல்லாத மற்ற மேல் ஜாதியினர் நடக்க அனுமதிக்கப்படுகிறார்களா?” என்று கேட்டார். பார்ப்பனக் குழுவினர் நாயர் போன்ற உயர்ஜாதியினர் அந்தத் தெருவை பயன்படுத்துவதாகக் (நாயர்களும் சூத்திரர்களே) கூறினர். அதற்கு காந்தியார் “மேல்ஜாதியினர் போல் கீழ் ஜாதியினரும் இந்துக்கள் தானே என்றும், பின் ஏன் அவர்களை அந்தத் தெருக்களில் அனுமதிக்க மறுக்கிறீர்கள்” என்றார்.
“அவர்களும் மனிதர்கள்தானே; அவர்களையும் அந்தத் தெருக்களில் நடக்க உரிமை தருவதுதான் நியாயம். எனவே, அந்த அனுமதியை அவர்களுக்குத் தாருங்கள்” என்று காந்தியார் தூது வந்த நம்பூதிரிப் பார்ப்பனர் குழுவிடம் அறிவுறுத்தினார். காந்தியார் ஸநாதனவாதி. இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். அவரை எப்படியும் மதக் காரணங்களை விளக்கிக் கூறி போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் பம்பாய் அந்தேரி வந்த நம்பூதிரிப் பார்ப்பனர் குழுவினர் தோல்வியுடன் திருவாங்கூர் திரும்பினர். மறுபுறம் போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.
(சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்)
(தொடருவேன்…)
