சூத்திரப் பட்டமும், சிறுநீர்க் குடுவையும்! (3)

- Advertisement -

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

“அப்பழுக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுயமரியாதைக்குப் பிறந்த) சுதந்திரமாய் இருந்தால் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டதுபோல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பது என் போன்ற சாதாரண மனிதனால் கையாளப்பட்டதினால் அதன் பெருமை விளங்காமல் போய்விட்டது என்று சொல்லலாமே தவிர அதற்கு நிகர் மனிதனுக்கு உயிரைத் தவிர ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்த பத்து வருஷ காலமாய் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரச்சாரமாக நடந்து வந்திருந்த போதிலும், அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன்? சுயமரியாதைக் கூட்டங்களில் இருந்தவர்களுக்குள் இருந்து கூட ஏற்பட்டு இருந்தாலும் “ஒரு குடம் பாலுக்கு ஒரு சொட்டு விஷம்” என்பது போல் தமிழ்நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்குக் கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தியையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது” என்று தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தின் பெருமையை அழகாக எடுத்துக் காட்டுகிறார்.

“பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையை சுயமரியாதை இயக்கம் கிளப்பி விட்டு விட்டது. கீழ் ஜாதி, மேல் ஜாதியென்பவைகள் ஒடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பைபிளுக்கும், குர்ரானுக்கும் புதிய வியாக்கானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். தோழர் காந்தியாரோ அல்லது காங்கிரஸ் தொல்லையோ இல்லாமல் இருந்திருக்குமேயானால் இந்தியா பூராவையும் சுய மரியாதை இயக்கம் இன்னும் அதிகமாகக் கலக்கிக் கொண்டிருக்கும் என்பதோடு பார்ப்பனியம் மாண்டு இருக்கும் என்றே சொல்லலாம். சுய மரியாதை இயக்கம் காந்தியாரை ஓரளவுக்கு மூலையில் உட்கார வைத்து விட்டது என்றாலும் பார்ப்பனியம் வேறு ஆட்களைப் பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்வந்து விட்டது. ஆனபோதிலும் காந்தியம் பட்டு மாய்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்த பெருமை சுயமரியாதை இயக்கத்திற்கே உண்டு” என்று தந்தை பெரியார் தன் இயக்கத்தைப் பற்றி பெருமையாகக் குறிப்பிடுகிறார்.

“இனி 2 மாதம் சென்றவுடனே ஜவஹர்லால் நேருவை சுயமரியாதை இயக்கம் மூலையில் உட்கார வைக்க முழு மூச்சில் முனையப் போகிறது. சுயமரியாதை இயக்கம் இதுவரை செய்து வந்த பிரச்சாரத்திற்கு மேலாக கேரள, ஆந்திர, கருநாடக தேசம் மாத்திரமில்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரச்சாரம் செய்யப் போகிறது; அது, தனது பழைய வாலிபர்கள் பெரும்பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்து விட்டதால், புதிய வாலிபர்களை சேகரித்துக் கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் “குறை” ஏற்பட்டாலும் சுயமரியாதை இயக்கத்திற்குக் குறை ஏற்படாது. வாலிபர்களே தயாராய் இருங்கள்” என்று அறைகூவல் விட்டு தன் அறிக்கையை முடிக்கிறார். (18.7.1937 அன்று வெளிவந்த “நவமணி” ஆண்டு மலரில் தந்தை பெரியார் எழுதியக் கட்டுரை.)

தந்தை பெரியார் தன் ‘குடியரசில்’ “மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகிறது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்கிறது” என 20.9.1937இல் எழுதுகிறார். அந்தத் தடைகள், எதிராக நிற்பவைகள் யாவை என்பதைப் பற்றி தந்தை பெரியாரே விளக்குகிறார். அவை 1. கடவுள், 2. மதம், 3. சாஸ்திரம், 4. காந்தி, 5. பார்ப்பனர் என்பவைகள்தான் அவை என்பது தந்தை பெரியாரின் வாதம். இந்த தடைகள் இங்குள்ள மனிதர்கள்  மனதில் ஆணிவேராகப் படிந்துள்ளது என்றும், அவற்றை ஒழிக்கவே சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியதாக தந்தை பெரியார் கூறினார்.எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்தான் என்னவென்று பார்ப்போமா? 1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். 2. ஒரு நாட்டின் மக்களிடையே உயர்வு, தாழ்வு வேறுபாடு இருக்கக் கூடாது. 3. எவரும், எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை.ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவரில்லை. எவரும், எவருக்கும் தாழ்ந்தவராக நினைக்கக் கூடாது. எவரும், எவரையும் தாழ்த்தவும் கூடாது.மனிதனை, மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும். 4. மனிதனுக்கு, மனிதன் பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு ஏதும் கிடையாது. பிறப்பில் வேறுபாடு கற்பித்து, உயர்வு, தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக்காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையேயாகும். (சான்று: சுயமரியாதை இயக்கக் கொள்கைகள். ‘உண்மை’ 30.9.2022.)

“நம் சமுதாயத்தில் இந்த அய்த்தும் எவ்வளவு பலமாக வேரூன்றி நின்றன. எந்த மக்களின் நன்மைக்காக இவற்றை எதிர்க்கப் போகிறோமோ, அந்த மக்களே நம் பணிக்கு எதிராக முரட்டுத் தனத்துடன் கிளம்புவார்கள். அந்த அளவுக்கு அந்த மக்களின் சிந்தனை “சீழ்” பிடித்துப் போயிருக்கிறது. அவர்கள் மூளைக்கு இந்த பிற்போக்குச் சக்திகள் விலங்கிட்டு விட்டன” என்ற தந்தை பெரியார் இந்தத் தொண்டறப் பணியைத் தன் தோள் மேல் போட்டுக் கொண்டு செய்ய முன்வந்தார்,செய்தார்.

“சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பி விடப்பட்ட பல விதமான கற்பனை சேதிகளாலும் விஷமப் பிரச்சாரங்களாலும் பொது மக்களுக்கு சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.இதைப் பற்றி பல சமயங்களில் நான் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்விதத் தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது” என்று தந்தை பெரியார் துவக்கி எழுதுகிறார். (ஆதாரம்: ‘கீற்று’ 2.12.2024)

“சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கருத்தெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து, சமூகத் துறையிலும், பொருளாதார துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். சமூகநீதியாகட்டும், பாலியல் நீதியாகட்டும், பொருளாதார நீதியாகட்டும் மற்ற எந்தத் துறையிலும் மேலானவர், கீழானவர் என்ற பேதத்தை ஒழிக்க வேண்டும். அனைவரும் சமம் என்ற நிலையை உண்டாக்க வேண்டும்.ஆண்டான், அடிமை நிலைப்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே அவர் குறிக்கோளாக இருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் தெளிவாக விளங்கும். தந்தை பெரியார் மேலும் தொடர்கிறார்.

“மதம் என்பது கூட்டுறவு வாழ்க்கை மற்றும் சமூகத்திற்காக நடத்தை விதிகளின் தொகுப்பாகும். சுயமரியாதை இயக்கம் அத்தகைய இணக்கமான சமூகத்திற்கு எதிரானது அல்ல. கடவுளை அடைய மதம் தேவை என்று கூறப் பட்டாலும் நாங்கள் தலையிடமாட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக அது ஒரு தனி நபரின் தனிப்பட்ட விஷயம்” என்று மதம் பற்றி தந்தை பெரியார் தன் கருத்தை எழுதுகிறார்.

“ஆனால் மதம் சமூகத்தில் ஞானத்தை அழித்தாலும், சுயமரியாதைக்கு ஆபத்தை விளைவித்தாலும் மனித குலத்தை உயர்ந்தது,தாழ்ந்தது என வேறுபடுத்தி,பிரித்து ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி சுதந்திரத்தைத் தகர்த்தாலும் நமது சுயமரியாதை இயக்கம் அதை விட்டு விலகாது. உதாரணமாக ஏராளமான மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்நியர்கள் மதங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.நமது இந்திய மதம் என்று கூறப்படும் இந்து மதத்தைக் கருத்தில் கொள்வோம்” என்று எழுதிய தந்தை பெரியார் அடுத்து இந்து மதத்தில் உள்ள கோளாறுகளை வன்மையாக சாடுகிறார்.

(வரலாறு வளரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *