வி.சி.வில்வம்
பட்டுக்கோட்டை நகரத்தில் இருந்து, 20 கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளத்தூர் கிராமத்திற்குச் சென்றோம். அங்கே தான் அரு.நல்லதம்பி அய்யா இருக்கிறார். ‘விடுதலை’ ஞாயிறு மலருக்காக நேர்காணல் செய்ய வருகிறோம் எனத் தகவல் கூறியிருந்தோம். அதே கிராமத்தில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்மநாதன் (78) அவர்களும், நல்லதம்பி அய்யாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்றாடம் சந்தித்துக் கொள்வார்களாம். இயக்க நடவடிக்கைகள், தோழர்கள் நலன், தமிழ்நாட்டுச் சூழல் எனப் பல செய்திகளும் பேசுவார்களாம். ஒருவரின் வயது 82, மற்றவர் வயது 78. தங்களின் சொந்தக் கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டு நலன் அதைவிட முக்கியம் என எண்ணுகிறார்கள் என்றால், அவர்கள் தான் பெரியார் பெருந்தொண்டர்கள்.
பள்ளத்தூரில் இருக்கும் தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் இருவரும் வந்துவிட்டனர். சந்திப்பு முடிந்து திரும்பும் போது, மாவட்டக் காப்பாளர் அத்திவெட்டி வீரையன் பேசி, “நான் வருவதாக இருந்தேன், வர இயலவில்லை”, என்றார். அதாவது தங்கள் மாவட்டத்தில் உள்ள பெரியார் பெருந்தொண்டர்களைச் சந்திக்க வந்ததால், அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி. மாவட்டக் கழகத் தோழர்களின் பிணைப்பு என்பது இதுதான்! வாருங்கள்… இப்போது நாம் நல்லதம்பி அய்யாவுடன் பேசுவோம்!
அய்யா வணக்கம்! தங்களின் பெயர், ஊர் குறித்த விவரங்களைக் கூறுங்கள்?
என் பெயர் அரு.நல்லதம்பி. 1945ஆம் ஆண்டு பிறந்தேன். வயது 82 ஆகிறது. அம்மா பெயர் இராஜாமணி, அப்பா பெயர் அருணாசலம். பட்டுக்கோட்டை அருகேயுள்ள பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்தேன். சிறு வயதிலேயே பல இழப்புகளைச் சந்தித்தேன். ஆமாம்! எனக்கு 5 வயது இருக்கும் போது, அம்மா காசநோய் காரணமாக இறந்தார். அப்போது அவரின் வயது 19. காசநோய்க்கு அந்தக் காலத்தில் மருத்துவம் கிடையாது. அதேபோல எனது தந்தையாரும் அதே நோய்க்குக் காலமானார். அப்போது அவரின் வயது 46. அப்போதும் மருத்துவ வசதிகள் வரவில்லை. பெற்றோரைத் தொடர்ந்து 17ஆவது வயதில் எனக்கும் காசநோய் வந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் மருத்துவ வசதிகள் வந்துவிட்டதால், நான் குணமாகி 82 வயதுவரை இயக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.
தங்களின் கல்வித் தகுதி என்ன?
பள்ளிப் படிப்பை முடித்ததும், 1964-1967 காலகட்டத்தில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை இயற்பியல் துறையில் சேர்ந்தேன். தொடர்ந்து அரசுப் பணியாளர் தேர்வாணையத் (Service Commission) தேர்வுகள் எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்றேன். உடனடியாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அப்பாவிற்கு உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் நான் பணிக்குச் செல்லவில்லை.
அப்பா கிராமத் தலைவராக (Village Munsif) இருந்தார். இதனை “மணியக்காரர்” என்று சொல்வார்கள். இவர்கள் கிராமத்தின் நீதி மற்றும் வருவாய் அதிகாரியாகச் செயல் படுவார்கள். சிறிய அளவிலான ஊர் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் அதிகாரம் உண்டு. கிராமத்தின் சட்டம், ஒழுங்கையும் இவர்கள் பாதுகாக்க வேண்டும். இந்தப் பதவிக்கு வர குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சி & டி தேர்வு (C & D Test) தேர்வும் எழுதியிருக்க வேண்டும். வருவாய்த்துறை அமைச்சராக எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் இருந்த போது தான், இந்த மணியக்காரர் பதவி எடுக்கப்பட்டது.
நீங்கள் எங்கே பணி செய்தீர்கள்?
அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாததால், கிடைத்த அரசு வேலைக்கும் நான் செல்லவில்லை. அதேநேரம் அப்பாவின் மணியக்காரர் பதவியில் 1968 முதல் 78 வரை நான் இருந்தேன். வாரிசு அடிப்படையில் அப்படி பொறுப்புகளை (Acting Post) எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் அதற்குரிய ஏ & பி (A&B) என்கிற தேர்வையும் நான் முடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து சாலைகள் அமைத்தல், சிறிய பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட வேலைகளை எடுத்துச் செய்தேன்.
தந்தை பெரியார் கொள்கைத் தங்களுக்கு எப்போது அறிமுகமானது?
எனது தந்தையார் கோயில் பூசாரியாக இருந்தவர். “பூசாரிக் குடும்பம்” என்றே எங்களை அழைப்பார்கள். அதேநேரம் எனது மாமா ரா.சின்னையன் கடவுள் மறுப்பாளர். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். எனக்கும் உறுப்பினர் அட்டை வாங்கிக் கொடுத்து, திமுகவில் சேர்த்து விட்டார். பெரியாரின் கொள்கைகளைத் தொடர்ந்து பேசுவார். அதையொட்டி நானும் கடவுள் மறுப்பாளராக மாறினேன். இதையறிந்த சிலர் என் அப்பாவிடம் சென்று, “உனது பையன் கடவுள் இல்லை என்கிறான், பகுத்தறிவுக் கருத்துகள் பேசுகிறான்”, எனப் புகார் செய்தார்கள். ஆனால் நான் எனது கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டேன்.
அதேநேரம் எங்கள் கிராமத்தில் இருந்த முடிதிருத்தகம் கடைக்கு வரும் ‘விடுதலை’ நாளிதழையும் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போது எங்கள் கிராமம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. அந்தச் சமயத்தில் ஊரில் இருந்த உரக்கடை ஒன்றில், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. பட்டுக்கோட்டை சதாசிவம் ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்தில் மன்னார்குடி ஆர்.பி.சாரங்கன், இராஜகிரி கோ.தங்கராசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவராக என்னை நியமனம் செய்தார்கள். அப்போது எனக்கு வயது 24.
தங்கள் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
எங்கள் கிராமத்தில் முதன்முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன் நான். அப்போது எனக்கு 25 வயது. திரைப்பட நடிகர் டி.வி.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இவர் திமுக அரசில் எம்.எல்.சியாக இருந்தவர். (சட்ட மேலவை உறுப்பினர்). அறிஞர் அண்ணாவால் “நடிகமணி” எனப் பாராட்டுப் பெற்றவர். நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களின் அக்கா கணவர் ஆவார். எனது திருமணத்தை முன்னின்று நடத்தியவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எங்கள் வீட்டிலும், கிராமத்திலும் எதிர்ப்புகள் இருந்தாலும், முதல் சுயமரியாதைத் திருமணம் சிறப்பாகவே முடிந்தது.
என்றிலிருந்து பள்ளத்தூர் எனும் சிறு கிராமத்தில் வசித்து வருகிறீர்கள்? உங்களின் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
எங்களுக்கு 3 பிள்ளைகள். அனைவருக்குமே சுயமரியா தைத் திருமணம் தான் செய்து வைத்தோம். அதில் ஒரு பையனுக்கு, ஆசிரியர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. பொதுவாகவே எனது பெற்றோர் மற்றும் கிராமத்தவர்களிடம் சில எதிர்ப்புகள் இருந்தன. எனினும் எனது செயல்பாடுகளில் எந்தத் தொய்வும் ஏற்பட்டதில்லை. இயக்கத்தில் மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்டத் துணைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்பு களில் செயல்பட்டு, தற்போது மாவட்டக் காப்பாளராக இருந்து வருகிறேன்.
மிக முக்கியமாக மூட நம்பிக்கை ஒழிப்பிற்கான கலைக்குழு ஒன்று வைத்திருந்தோம். செதில் காவடி, பறவைக் காவடி, பொய்க்கால் ஆட்டம், தீச்சட்டி ஏந்துதல், தீக்குழி இறங்குதல் போன்ற அனைத்தையும் செய்வதற்கு எங்களிடம் தோழர்கள் இருந்தார்கள். அதற்கான பயிற்சியும் நாங்களே கொடுத்தோம். அதேபோல இயக்கப் பாடல்களைப் பாடுவதற்குப் பாடகர்களையும் உருவாக்கினோம்.
சிறிய கிராமமாக இருந்தாலும் மாநாட்டுப் பேரணிகளில் பங்கேற்க, மூடநம்பிக்கை ஒழிப்புக் கலைக்குழுவுடன் தனி வாகனம் பிடித்துச் செல்வோம். ஏதாவது செயல்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும்.
“நாடகம் நல்லதம்பி” என்றே ஆசிரியர் தங்களை அழைப்பதாகக் கேள்விப்பட்டோமே?
ஆமாம்! இதுவரை 5 நாடகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் மூடநம்பிக்கை தொடர்பான “மனநோய்” என்கிற நாடகமும் ஒன்று. அந்த நாடகத்தைப் புத்தக வடிவமாக்கி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களின் திருமணத்தன்று, பேராவூரணி பொதுக் கூட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஆசிரியர் வெளியிட்டார். அந்நூலுக்கு ஆசிரியரே மதிப்புரையும் எழுதியிருந்தார்.
ஆசிரியருக்கு அந்தக் கூட்டத்தில் எடைக்கு எடை நாணயமும் கொடுத்தார்கள்.
இதுதவிர “சம உரிமை, புரட்சிப் பாதை, மலராத அம்புகள், யாருக்குச் சொந்தம்” ஆகிய நாடகங்களும் எழுதியுள்ளேன். அனைத்துமே பகுத்தறிவுக் கருத்துகள் சார்ந்தவை. இதில் இரண்டு நாடகங்களை, திரைக் கதையாகவும் மாற்றி எழுதினேன். இதில் சிறப்பான ஒரு செய்தியும் உண்டு. எங்கள் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடக்கும். அப்போது கோயில் நிர்வாகிகளிடம் சென்று, நாடகம் நடத்த அனுமதி கேட்போம். அவர்களும் ஒப்புதல் தருவார்கள். மூடநம்பிக்கைக்கு எதிரான “மனநோய்” நாடகத்தை நாங்கள் நடத்துவோம். இதுபோன்று அனைத்துக் கிராமங்களிலும் நடத்திவிட்டோம். பள்ளத்தூர் கிராமத்தில் பெரியார் சிலையைத் திறந்து வைக்க 2009ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்கள் வந்தார். அப்போது ‘புரட்சிப் பாதை’ நூல் வெளியிடப்பட்டது. எனது அனைத்து நாடக நூல்களையுமே ஆசிரியர் தான் வெளியிட்டார்.
இயக்க நடவடிக்கைகளுக்கு கிராமத்தில் கட்டுப்பாடுகள் இருந்தனவா?
கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். ஆனால் நாம் பழகும் விதம், நமது அணுகுமுறைகள், நாம் செய்யும் சேவைகள் பலரிமும் நல்ல பெயரை வாங்கித் தரும். குளத்தில் குடிநீர் எடுக்கக் கூடாது என்பார்கள், நாங்கள் போராடுவோம். சிவன் கோயில் குளத்தில் இறப்பிற்குப் போய் வந்து குளிக்கக் கூடாது என்பார்கள், ஆனால் பார்ப்பனர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்பார்கள், அதை எதிர்த்துக் கேட்டோம், பட்டியலின மக்களுக்கு இறந்தவுடன் பிண ஊர்தி வாகனம் கொடுக்க மாட்டார்கள், அதற்குத் தீர்வு கண்டோம், அனைத்து ஜாதி மக்களும் பயன்படுத்தும் வகையில் புதிய வாகனத்தையும் உருவாக்கிக் கொடுத்தோம், கோயில் நிர்வாகிகள் கமிட்டியில் அனைத்து ஜாதியினரும் உறுப்பினராக இருக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தோம்… இப்படி சமத்துவ சமுதாயம் படைத்திட பெரியார் கொள்கை வழியில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இன்னும் இருக்கும் எங்களின் இறுதிக் காலம் வரையில் ஆசிரியர் தலைமையில் செயல்படுவோம்”, எனத் தெளிவான, உறுதியான கருத்துகளை அரு.நல்லதம்பி அவர்கள் கூறினார்.
