‘நன்றி’ குறித்த தந்தை பெரியாரின் இலக்கணத்திற்கான இலக்கியமே கோவை நன்றி பாராட்டு விழா!

4 Min Read
- Advertisement -

புதியதோர் எழுச்சியை ஏற்படுத்திய திராவிட நாயகரின் வருகை!
இணைந்து களங்காணும் இரட்டைக் குழல் கண்டு, விழியில் குளங்கண்ட மக்கள்!
‘உழைப்புத் தேனீக்களாகி’ மாநாடுபோல் நடத்திய
இரட்டைக் குழல் தோழர்களின் ஒத்துழைப்புக்குத்
தாயின் பூரிப்போடு பாராட்டும், நன்றியும்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 

‘உழைப்புத் தேனீக்களாகி’ மாநாடுபோல் நடத்திய இரட்டைக் குழல் தோழர்களின் ஒத்துழைப்புக்குத் தாயின் பூரிப்போடு பாராட்டும், நன்றியும்! நன்றி குறித்த தந்தை பெரியாரின் இலக்கணத்திற்கான இலக்கியமே கோவை நன்றி பாராட்டு விழா! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோவை மாநகர் ஒரு புது வரலாறு படைத்தது!

‘பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ’ என்று வியக்கும் வண்ணம்; திராவிடப் பெரும்படையால் ஊர் சுவைத்தது! ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் பாசமிகு சகோதர வாஞ்சையின் உருவகமான நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வருகை புதியதோர் எழுச்சியை ஏற்படுத்திட – தாயின் பூரிப்புடன், கரங்கோத்து பெரியார் உலகத்தை நோக்கிப் பயணம் செய்வோம் இனி, இது உறுதி!

காணக் கண்கோடி வேண்டும்!

உலுத்தர்களின் உப்புச் சப்பற்ற அவதூறுகளையும், புரட்டுகளையும், பொய்யுரைகளையும் அந்த மக்களின் மகிழ்ச்சி வெள்ளம்  அடித்துச் செல்ல, ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள மக்கள் ஒன்றாதல் கண்டே’ என்ற காட்சியை, தாய்க்கழகம் கூட்டிய ‘மாநாடு’ என்று சொல்லத்தக்கப் பெருந்திரள், புத்தெழுச்சியை ஊட்டியது. செயலின் மறுவடிவமான, உழைப்பின் நாயகனை உச்சி மெச்சி, நன்றி பாராட்டி, அதுவும் தாயின் மடியில் கிடத்திய தகைசால் பாசத்துடன் நடந்தேறிய விழாவைக் காணக் கண்கோடி வேண்டும்.

தாய்க் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழலாகக் களங்காணுவதில், விழியில் குளங்காணும் மக்கள் நிறைந்திருந்தனர். ஜாதி, மத, பேத மூட வழக்கங்களால் உலகைப் பாழாக்கி வரும் தீராத நோய்க்கு, தீர்வான மருந்து பெரியார் காட்டிய அறிவுலகம் நோக்கிய பாதையில் பயணமும், அதன் பயனைப் பெறுதலும்தான் என்பதைப் பாருக்கு உரைத்திடும் வகையில், காலத்தை வென்ற அறிவுக்கருவூலமாகக் கட்டி முடித்து, இருள் நீக்கிடும் காலைக் கதிரவனாக்கியவருக்கு மகிழ்ச்சிக் கண்ணீர் – கண்களில் அல்ல, இயல்புக்கு மாறாக, இதயத்தின் அடியிலிருந்து பீறிட்டது இந்தத் தாய்க்கு!

காலத்தை வென்ற திராவிடச் செயல்வீரர்!

‘தாய் தடுமாறிவிடக் கூடாது’ என்று, அவரின் கரங்களை இறுகப் பிடித்து, கடமையாற்றினார், காலத்தை வென்ற அந்தக் கருவூலம் தந்த திராவிடச் செயல்வீரர்!

‘அறிவுக்கு அறிவு தேவையில்லை,

செயலுக்கே அறிவு தேவை!’

என்ற அறிவு ஆசானின் அறிவுரைக்கு, அவர் பிறந்த கொங்கு மண்ணில் என்றும் நிலைத்திடும், அறிவு ஊற்றினை அள்ளித்தரும் நூலகம் இணைந்த அறிவியல் உலகம் தந்த உத்தமர்!

பார்ததுப் பரவசம் கொண்டோம். நாம் மட்டுமல்ல, இளைய தலைமுறையினரின் ‘புதுச் சொல்லாடலான’ ‘ஜென்சி’க்களின் குதூகலத்தை நாங்கள் கண்டபோது, அந்தச் சிற்பிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும், அந்தச் சிற்பிக்கு என்றும் துணை நிற்கும் தாய்க்கழகத்தின் உவகையும் அளவிடற்கரியதன்றோ!

பெரியாரின் தனி இராணுவம் போன்ற கருங்கடலின் மகிழ்ச்சிப் பேரலைகள் உயர்ந்து நின்ற காட்சி!

மாலை, கோவை வ.உ.சி. திடலில் மக்கள் கடல்! அதில் முக்கியப் பகுதியில் என்றும் களம் காண ஆயத்தத்தோடு உள்ள பெரியாரின் தனி இராணுவம் போன்ற கருங்கடலின் மகிழ்ச்சிப் பேரலைகள் உயர்ந்து நின்ற காட்சி – கண்கள் முன் எப்போதும் எழுச்சி காட்டும்!

‘நன்றி’யென்பது பலன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு’ என்ற தந்தை பெரியார் கூறிய இலக்கணத்திற்கான இலக்கியமே கடந்த 4.11.2026 அன்று கோவையின் பொங்குமாக்கடல்!

திராவிடர் கழகத்தின் ஏற்பாடு என்றால், கட்டுப்பாடு தானே! வந்து அமர்ந்து, அதோடு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பண்புகளின் தள நாயகர்களாயினர் கோவை மாவட்ட தி.க., தி.மு.க. பொறுப்பாளர்கள்.

போற்றுவதற்குப் போதிய வார்த்தைகளைத் தேடுகிறோம்!

‘உழைப்புத் தேனீக்களாகி’ பெரியார் அறிவுலகம் அமைத்த திராவிட நாயகருக்கு நன்றி, பாராட்டு, தென்றலாகி, ‘தேன் மழை’யாகியது இரவு 10 மணிக்கு கோவையில் பெருமழை பெய்தது. அதற்கு முன்பே இயற்கையின் ஒத்துழைப்போடு இணைந்து நடந்த நிகழ்ச்சியின் மாட்சியை பெருமிதமாக்கியவரின் வருகையைப் போற்றுவதற்குப் போதிய வார்த்தைகளைத் தேடுகிறோம்!

தாயின் பாராட்டும், நன்றியும்!

கோவை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், அதுபோல, தி.மு.கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களும் அளித்த ஒத்துைழப்பும், கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செயல்மிகு செந்தில்பாலாஜி, அவர்களோடு இணைந்த முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  மாவட்டச் செயலாளர்கள், வணக்கத்திற்குரிய மேயர் மற்றும் இரு கழகம் என்ற இரட்டைக் குழல்களின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்குத் தாயின் பூரிப்போடு பாராட்டும், நன்றியும்!

பாசறை வீரர்களுக்கு வழங்கப்படும் பணிப் பாராட்டு போல, தொண்டாற்றிய அனைவருக்கும் சீரிய பாராட்டுகள்! நன்றி! நன்றி!!

.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

6.11.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *