மாநில உரிமைப் பாதுகாப்புக்கு முக்கியமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் தீர்மானம்! சட்டமன்றத்தில் கொண்டு வந்த அரசுக்கும், ஆதரித்த கட்சிகளுக்கும் நமது பாராட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இன்று (12.8.2026) அரசு சார்பில் கொண்டு வந்த அவசரத் தீர்மானம் வரவேற்றுப் பாராட்டத்தக்கது.
அவசிய அவசரமாகும்!
உரிய நேரத்தில், தமிழ்நாடு மட்டுமல்ல, அத்துணை தென் மாநிலங்களின் உரிமைகளுக்கும் சேர்த்து, மாநில உரிமைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானம் மிகவும் அவசிய அவசரமாகும்.
இது ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டிய தீர்மானம்.
தி.மு.க. இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ரத்தினச் சுருக்கமாக முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தினையும், முதல் உரிமைக் குரல் கொடுத்ததையும் நினைவூட்டினார். (அன்றைக்கு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி, அக்கூட்டத்தில், ஜோசப் விஜய் அவர்களது கட்சி – த.வெ.க.வும் அழைக்கப்பட்டு, பங்கேற்றது என்பதும் முக்கியம்.) தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, அன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் முயற்சியால், 2025 மார்ச் மாதத்திலேயே அய்ந்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி, ‘கூட்டுச் செயற்குழு’ ஒன்றை ஏற்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
என்ன காரணத்தினாலோ, அ.தி.மு.க., பா.ம.க. போன்ற எதிர்க்கட்சிகள் ஆதரிக்காமல் எதிர்த்தது சரியான நிலைப்பாடு அல்ல; தமிழ்நாட்டு உரிமைகளுக்கான உயிர்ப் பிரச்சினையில், ஏனோ இந்த நிலை?
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில்
ஒரு வரலாற்றுப் பிழை செய்துள்ளனர்!
யாரைத் திருப்திப்படுத்தவோ அல்லது வேறு எதையோ எதிர்பார்த்தோ இந்த நிலைப்பாட்டை எடுத்து, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வரலாற்றுப் பிழை செய்துள்ளனர்.
டில்லியில் இன்னமும் மசோதா உறுதி செய்யப்படாத நிலையில், ஏன் இந்த அவசரம் என்று பா.ம.க. உறுப்பினர் கேட்டது, மிக வேடிக்கையானது. உருவாகும் ஆபத்தை அக்கட்சி உணரவில்லை என்றே தெரிகிறது.
‘‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’’ (குறள் 435)
இதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களே தெளிவான பதிலும், விளக்கமும் அளித்துள்ளார்.
உள்ளொன்று வைத்து,
புறமொன்று செய்யும் செயலே!
தொகுதி மறுவரையறை தீர்மானத்தில், கடந்த 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, தொடர்ந்து வற்புறுத்தப்பட்ட நிலையில், நரேந்திர மோடி அரசு, 2023 ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. அதைத் தனித் தீர்மானமாக ஒன்றிய அரசு முன்மொழிந்தால், தீர்மானம் எதிர்ப்பின்றி உடனடியாகச் செயலுக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனால், அதன்பின்பு மீண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மிகவும் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு, இதனை சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறையோடு உள்நோக்கத்துடன் இணைத்தே கொண்டு வர முயற்சிப்பது, உள்ளொன்று வைத்து, புறமொன்று செய்யும் செயலே ஆகும்!
தீர்மானத்திற்கு
ஆதரவு தெரிவித்த கட்சிகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (12.8.2026) கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து, தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) உறுப்பினர்கள் உரையாற்றினர். தே.மு.தி.க. உறுப்பினர், இப்போது இத்தீர்மானம் அவசியமா என்று கேள்வி எழுப்பினாலும், தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.
பா.ஜ.க. உறுப்பினர் எதிர்க்கிறோம் என்று கூறினார்!
இந்த முக்கிய தீர்மானத்தை எதிர்த்ததன்மூலம், பா.ஜ.க. நிலைப்பாடும், அவர்கள் எந்தப் பக்கத்தில் சாய்ந்திருக்கிறார்கள் என்பதும் நன்கு வெளிச்சத்திற்கு வருகின்றது.
தி.மு.க.வைப்பற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியது, அப்பட்டமான ஆதாரமற்ற செய்தி – அதற்கு அவப்பெயர் உருவாக்கவோ அல்லது ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசமோ தெரியவில்லை.
பாராட்டி வரவேற்கிறது
திராவிடர் கழகம்!
என்றாலும், சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பாராட்டி வரவேற்கிறது திராவிடர் கழகம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.8.2026
