வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்

3 Min Read

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு களுக்கு முன்பாக, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ (The Non- Brahmin Movement) என்ற அமைப்பினை உருவாக்கியதற்கு மூல முக்கிய தலைவர்கள் மூவர்.

  1. சர். பிட்டி. தியாகராயர்
  2. டாக்டர் டி.எம்.நாயர்
  3. டாக்டர் சி.நடேசனார்

சமூக மாற்றத்திற்கான
சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்

1916 இல் அதற்கு அரசியல் வடிவம் தந்து, ‘தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்’ என்று பெயர் தந்து, பதிவு செய்து, பணி தொடங்கி, வர்ண தர்ம ஜாதியால், அடிமைத்தளையினால் கட்டுண்டு கிடந்த பல கோடி உழைக்கும் ஒடுக்கப்பட்ட திராவிட மக்கள் உரிமை பெற்றிட, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார அரசியல் விடுதலை அடைந்திட, விடியல் எழுச்சிக்கு வித்திட்டு, 1920 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் (மாநில) ஆட்சியையே தேர்தல்மூலம் கைப்பற்றி, கல்விக் கண் திறந்து, வேலை வாய்ப்பு, சமூகநீதிக்குத் தொடக்க விழா செய்து, சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்து – பெண்ணுரிமைக் காக்கும் வகையில், 1921 ஆம் ஆண்டிலேயே மகளிருக்கு வாக்கு அளிக்கும் உரிமையைத் தந்து, அவர்களது அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்த ஒரு சமூக மாற்றத்திற்கான சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்.

சர். பிட்டி. தியாகராயர் ஒரு பெருவணிகர். தனது வருவாயில் பெரும் பகுதியை பொதுத் தொண்டிற்குச் செலவழித்து, ‘ஈதல் இசைபட’ வாழ்ந்த பெருந்தகையாளர்.

இன்றைய இளைய சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்!

முதலாவது தேர்தலில் (1920 ஆம் ஆண்டு) அவர் கண்ட அந்த திராவிடர் இயக்கமாம் ‘ஜஸ்டிஸ் கட்சி’யென வெகுமக்களால் பெரிதும் அழைக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், (1920 இல்) அவரை ஆட்சிப் பொறுப்பேற்க வெள்ளைக்கார கவர்னர்கள் விரும்பி அழைத்தபோது, அப்பதவியை தான் ஏற்க மறுத்து, அப்பதவியை, கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை ஏற்கச் செய்த தியாகச் சீலர் நமது தியாகராயர்! பதவி வெறிப் படமெடுத்தாடும் இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் இதனை அறிந்து, புரிந்துகொள்ளவேண்டும்!

வெள்ளுடை வேந்தர், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் (மேயர்) ஆனபோது, அதனையொட்டி, அதிகார அரசியல் நிமித்தமாக வெள்ளைக்கார கவர்னர் மாளிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க அழைக்கப்பட்டார். சந்திப்பின்போது உடை மாற்றி வருவது மரபு; எனவே, வேட்டி, சட்டை உடையை மாற்றி, ‘சூட்’டில் வரும்படி அழைத்தவுடன், அதனை மறுத்து, ‘‘இதே உடையில் சந்திக்க விருப்பமாயின் வருவேன்; இன்றேல், வேறு யாரையாவது அனுப்புவேன்’’ என்று கூறி, வென்றவர் அந்தப் பண்பாளர்!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான்!

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto)யை வெளியிட்டு, தக்கப் புள்ளி விவரத்தினை, பார்ப்பன மேலாண்மைப் பகற்கொள்ளை யைப் பாரறியப் பறைசாற்றி, தமது மக்களுக்குச் சமூகநீதி இன்றியமையாமைபற்றிய, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான் அவர்!

ஆரிய – திராவிட உரிமைப் போரில், முதல் முழக்கத்தைப் படைத்தவர். அவருடைய தலைமையில் டாக்டர் டி.எம்.நாயர் என்ற ‘திராவிட லெனின்’ (தந்தை பெரியார் தந்த பெயர்) அதேபோல், 1912 முதலே பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்விக் கண் கிடைக்க திருவல்லிக்கேணியில் தனி விடுதி (Hostel) நடத்தி, புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கிய கல்வி வள்ளல் டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் கட்டிய அடிக்கட்டுமானம்தான் – அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படைத்த, படைக்கும், படைக்கப் போகும் சாதனைச் சரித்திரத்தின் தொடக்கமும் அதுதான்!

வலிவோடும், பொலிவோடும் காத்து,
கடமையாற்ற சூளுரைப்போம்!

நன்றி மறக்காது, நமது மூத்தோர், முன்னோடிகள் அமைத்த உரிமை மாளிகையைப் பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் மட்டுமல்ல, அதனை மேலும் வலி வோடும், பொலிவோடும் காத்து, கடமையாற்றச் சூளுரைப்போம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன், நீதிக்கட்சியை – சுயமரியாதை இயக்கத்தினை இணைத்து, திராவிடர் கழகமாக 1944 இல் உருவாக்கினார்.

அதன் அரசியல் அணி – அங்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க. – தி.க. என்ற இரட்டைக்குழல். இன எதிரிகள் உயர்த்திப் பிடிக்கும் மதவெறி, ஜாதி வெறி அரசியல் ஆதிக்க வெறியை விரட்டி அடிக்க உறுதியேற்போம்!

வென்று காட்ட வீறுகொண்டு உழைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

27.4.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *