கதை கேட்டுக் கதை கேட்டு வளர்ந்ததுதான் நம் நாடு என்று சொல்லுவார்கள். ஆனால், எப்பேர்ப்பட்ட கதைகள் என்பதுதான் பிரச்சினை. சில கதைகள் காதில் பூ சுற்றும் ரகம். அவை தவறான வழிகாட்டி. வளர்ச்சிக்குப் பதில் பின்னுக்கு இழுத்துச் செல்வதும் உண்டு.
மஹாபாரதத்தில் உள்ள இந்தக் கதை அப்படிப்பட்ட ஒரு கதைதான். இக்கதை “ஆர்யமத உபாக்யானம் (இரண்டாம் பாகம்)” எனும் நூலில் உள்ளது. சூத்திரர்கள் கல்வி கற்றுவிடக்கூடாது என்ற வன்ம எண்ணத்துடன் விஷமத் தனமாகப் புனையப்பட்டுள்ளது இந்தக் கதை. இந்தக் கதை மஹாபாரதம், அனுசாஸன பர்வம் கூறும் கருத்தை முன் வைக்கிறது. அக்கருத்து இதுவே:
“மேல்ஜாதி விஷயங்களைக் கீழ் ஜாதியானுக்குக் கற்றுக் கொடுத்தால், கீழ் ஜாதியான் மேன்மை அடைவான். மேல் ஜாதியான், தாழ்மை அடைவான்.”
– மஹாபாரதம்,
அனுசாஸன பர்வம்.
உயர் ஜாதி என்று அடையாளப் படுத்தப்படுகிறவர்கள் இது போன்ற கதைகளைச் சொல்லியே வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். பின் எப்படி அவர்கள் மனதில் சமத்துவமும் மனித நேயமும் தோன்றும்? சம வளர்ச்சி இல்லாத நிலையில் எப்படி இந்த நாடு உருப்படும்? இந்தியாவின் ஆத்மாவே (ஆத்மாவில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக), இப்படிப்பட்ட கதைகளால் நாசமாகிச் சீரழிந்து போனதுதான் உண்மை. இனி கதை,
ஜாதிதர்மம்
ஹிமயமலைச் சாரலில் மஹாத்மாக் களில் சிலர் தபஸ் முதலியன செய்து கொண்டிருந்தனர். அங்கு ஸத் விருத் தியுள்ள சூத்ரன் ஒருவன் பெரி யோர்களுக்கு ஸதா பணி விடைசெய்து மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.
அங்கிருந்து கொஞ்ச நாளானதும் ப்ராஹ்மணர்கள் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்ற துர் எண்ணம் அவனுக்கு வந்தது. அங்குள்ளவர்களை நோக்கி தனக்குத் தர்மானுஷ்டான மார்க்கங்களை நன்றாக எடுத்துரைக்க வேண்டும் என்று அந்த சூத்ரன் கேட்டான். அவர்கள் அவ்வாறு செய்ய சாஸ்த்திரங்கள் தமக்கு இடங் கொடுக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டனர்.
உடனே அந்த சூத்ரன் வேறொரு காடு சென்று, தான் பார்த்த வரையில் தனக்குத் தெரிந்ததாயுள்ள ப்ராஹ்மண தர்ம அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினான்.
இவ்வாறு கொஞ்ச காலம் ஆனதும், இவன் இருப்பிடத்திற்கு ஒரு ரிஷி வந்தார். இவன் தன் ஜாதி இன்னதென்பதை அவருக்குக் கூறாது, தனக்கு ச்ரார்த்தம் (சிரார்த்தம்: ஓர் இறப்பு சடங்கு. அபர கர்மாக்களில் ஒன்று. பித்ருக்களுக்காக செய்யப்படுவது.) செய்துவைக்கும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் அறியாது செய்து வைத்துவிட்டார்.
மறுஜன்மத்தில் சூத்ரன், ஓர் அரசனாகவும், ரிஷி அவன் கீழுள்ள ஒரு புரோஹிதனாகவும் பிறந்தனர். அரசனுக்குப் பூர்வஜன்ம ஞாபகம் வந்தது. அப்பொழுது புரோஹிதரை நோக்கிச் சிரித்தான். இதன் ரஹஸ்யத்தை வெளியிட வேண்டுமென்று புரோஹிதர் அரசனைக் கேட்டார். அதற்கு அரசன் “நீர் பூர்வ ஜன்மத்தில் ஒரு ரிஷி, நான் ஒரு சூத்ரன். என் நிலை இன்னது என்று விசாரித்தறியாமல், நான் கேட்டவுடனே எனக்கு மேல்ஜாதியாரது கர்மானுஷ்டானத்தைக் கற்றுக்கொடுத்தீர். உமது அநுக்ரஹத்தால் எனக்கு மேலான ராஜ ஜன்மமும், எனக்கு அனுக்ரஹித்ததனால் உமக்குத் தாழ்ந்ததான புரோஹித ஜன்மமும் கிடைத்தது” என்று கூறினான்.
பின்னர், அரசன் புரோகிதருக்கு வேண்டிய அளவு தனம் கொடுக்க, அவர் தானதர்மாதி்கள் செய்து சுத்தராகி மிகுந்த கஷ்டப்பட்டு முத்தின நிலையையடைந்தார்.
சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது. அவர்கள் அறியாமை இருட்டிலேயே இருந்து அடிமைகளாகவே தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது என்பது தெளிவு.
சனாதன நூலான மஹாபாரதத் திலுள்ள இப்பேர்ப்பட்ட கதைகளால் தான் கீழ் ஜாதியாருக்கு கல்வி மறுப்பு இருந்தது.
ஆதார நூல்:
‘ஆர்யமத உபாக்யானம்’ – இரண்டாம் பாகம் – 54 – இனிய கதைகள் அடங்கியது – இஃது திருநெல்வேலி ஸ்ரீ ஏ கிருஷ்ணஸ்வாமி அய்யரவர்களால் இயற்றப்பட்டது. – 1912 பதிப்பு.
