சென்னை, நவ. 3- எல்அய்சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்நிறுவனத்திடம் பொய்யான சொத்து மதிப்பு சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ரூ.980 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, எஸ்ஸெல் (Essel) குழுமத் தலைவரும், பா.ஜ.க.வின் மேனாள் மாநிலங்களவைத் தலைவருமான சுபாஷ் சந்திரா மீது அமலாக்கத் துறை (ED) பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ‘எல்அய்சிஎச் எஃப்எல்’ நிறுவனத்திடம் இருந்து வசந்த் சாகர் பிராபர்ட்டீஸ் மற்றும் பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள் ரூ.500 கோடியும், டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஸ்பிரிட் இன்ஃப்ரா பவர் அன்ட் மல்டி வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ரூ.480 கோடியும் கடனாகப் பெற்றன. சுபாஷ் சந்திரா அளித்த உத்தரவாதக் கடிதங்கள் மற்றும் சொத்து மதிப்புச் சான்றிதழ்களின் அடிப்படையிலேயே இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன.
சுபாஷ் சந்திராவுக்கு எதிரான திவால் நடவடிக்கையின்போது, தாம் அளித்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்குத் தன்னிடம் சொத்துகள் இல்லை என்று அவரே ஒப்புக்கொண்டார். இதன் மூலம், கடனைப் பெறுவதற்காகத் தனது சொத்து மதிப்பை அவர் பொய்யாக உயர்த்திக் காட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக எல்அய்சிஹெச்எஃப்எல் பொது மேலாளர் நீதா மெங்கானி அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் பேரில், சிபிஅய் (CBI) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. இந்த மோசடியால் வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து தங்களுக்கு ரூ.1,322 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எல்அய்சிஹெச்எஃப்எல் குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஅய் எஃப்அய்ஆரில் சுபாஷ் சந்திரா தவிர, வசந்த் சாகர் பிராபர்ட்டீஸ் இயக்குநர் பங்கஜ் சுரோலியா, டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் இயக்குநர் அமீஷ் பாண்டியா, ஸ்பிரிட் இன்ஃப்ரா பவர் இயக்குநர் ராஜீவ் தோலாக்கியா, பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மற்றும் சில அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிபிஅய் பதிந்த இந்த வழக்கின் அடிப்படை யில், தற்போது அமலாக்கத் துறையும் சுபாஷ் சந்திரா மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
