கண்டச்சிபுரம், நவ.3 அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பட ஊர்வலம் மற்றும் தெருமுனைக் கூட்டம் கண்டாச்சிபுரம் நகரம் விழுப்புரம் மாவட்டக் கழக சார்பில் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் 01.11.2026 அன்று எழுச்சியோடு நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தந்தை பெரியார் பட ஊர்வலத்தினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாலை 5 மணி அளவில் பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு “தந்தை பெரியார் வாழ்க”, “அன்னை மணியம்மையார் வாழ்க”, “தமிழர் தலைவர் வீரமணி வாழ்க”, “ஜாதியை ஒழிப்போம்”, “சமூக நீதி காப்போம்”, “வீழட்டும் ஸநாதனம்”, “மடியட்டும் மதவெறி”, “கடவுள் இல்லை”, “திராவிடம் வெல்லட்டும்”, “தமிழர் தலைவர் தலைமையிலே தந்தை பெரியார் பணி முடிப்போம்” என்ற இலட்சிய முழக்கங்களை எழுப்பியவாறு கையில் கழகக் கொடி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் படங்களை கையில் ஏந்தி தோழர்கள் உற்சாகத்தோடு முழக்கமிட்டு நடந்தனர். கண்டாசிபுரம் கடை வீதியே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு எழுச்சியோடு பேரணி நடைபெற்றது.
பேரணி நிறைவடைந்து மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஏ. ரமேஷ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் தொடங்கியது. மாவட்டத் துணைச் செயலாளர் ச. தண்டபாணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கூட்டத்திற்கு முன்னிலை ஏற்று இருந்த மாவட்டத் தலைவர் அரங்கபரணிதரன், மாவட்ட இணைச் செயலாளர் வளவனூர் சு.மாறன், மாவட்ட காப்பாளர்கள் சே.வ.கோபண்ணா, கொ.பூங்கான், திருவண்ணாமலையில் மாவட்டக் காப்பாளர் பி.பட்டாபிராமன், விழுப்புரம் நகரத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

பின்பு கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டச் செயலாளர் ஏ.ரமேஷ் தலைமை உரையாற்றினார். பட ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்பாக பேரணி பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த கண்டாசிபுரம் நகரம் விழுப்புரம் மாவட்டத் தோழர்களை பாராட்டி உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா என்பது அவரின் கொள்கைகளுக்கான விழா, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக நீதி, சுயமரியாதை என்னும் இலட்சியங்களை மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவே திராவிடர் கழகம் இத்தகையப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துகிறது என்பதை விளக்கியும், 94 வயது வரை தந்தை பெரியார் எப்படி இந்த மக்களுக்காக உழைத்தாரோ அதேபோல தந்தை பெரியாரை உலகமயமாக்கி, வரும் டிசம்பர் 2 இல் 94 ஆம் அகவை காண இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பையும் சுட்டிக்காட்டி தொடக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் சுயமரியாதைச் சுடரொளிகளான கெடார் நடராஜன், அனந்தபுரம் குருசாமி, கண்டாசிபுரம் ஏழுமலை, பாலு, கொசபாளையம் பெரியசாமி, சின்ன குணம் ராமலிங்கம், இராமானுஜன் ஆகியோரை நினைவுப்படுத்தி வீரவணக்கம் செலுத்தி உரையினை தொடங்க ஒரு பக்கம் மழை தொடங்கியது “கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும் கருஞ்சட்டை படையின் பிரச்சாரத்துக்கு தடை இல்லை” என்று கூறி உரையை தொடர்ந்த அவர் தந்தை பெரியாரால் தமிழ்நாடு கண்ட சமூகப் புரட்சிகளையும், மாற்றங்களையும் அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.
மாதம் ஒரு பண்டிகை, கோடிக்கணக்கான கடவுள்கள், ஆயிரம் கணக்கான ஜாதிகள் என்று தமிழர் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவைகளை பற்றி விளக்கினார்.
தீபாவளி என்னும் பார்ப்பனியப் புரட்டை, அறிவுக்கு பொருந்தாத ஆபாசக் கதையை எடுத்துக் கூறி தந்தை பெரியார் கேட்ட கேள்விகளை எழுப்பி இந்த ஆரிய தீபாவளியை திராவிடர்கள் நாம் கொண்டாடலாமா? என்று கேட்டது மக்களை வெகுவாகச் சந்திக்க வைத்தது. மழை ஓய்ந்தாலும் கொள்கை அடைமழை ஓயாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, திருமலை அவர்கள் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் கண்டாச்சிபுரம் நகர தலைவர் இரா.நாகராசன், கண்டாச்சிபுரம் தோழர்கள் க.சிவராமன், க.முருகன், கு.கணேசன், க. ஞானஒளி, கிருஷ்ணன், இரா. ராதாகிருஷ்ணன், பூ. அனிதா மற்றும் பகுத்தறிவாளர் கழக பகவான்தாஸ், சங்கர், சீதாராமன், குப்பன், நெல்லுபட்டு இராமலிங்கம், இளைஞர் அணி தோழர் மணிராஜ், திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கா.அச்சுதன், கொ.கவியரசன், ப.சுசிவ்தானு, ஜோ.ராஜு, கு.நித்திஷ் குமார், ம.திருமுருகன், சீ.சிவன்ராஜன், பெரியார் பிஞ்சு தஞ்சை கு.மகிழன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பட ஊர்வலம் மற்றும் தெருமுனைக் கூட்டமானது கண்டாச்சிபுரம் பகுதியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதாக அமைந்தது.
