காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வங்கிகள் மோடி ஆட்சியில் விற்கப்படுகின்றன : ராகுல் கருத்து

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 31- அய்டிபிஅய் வங்கியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துகள் அல்ல என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் தொழில் துறையைக் கட்டமைப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அய்டிபிஅய்வங்கி உருவாக்கப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்திலோ முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே விலை நிர்ணயிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப் படுகின்றன. அய்டிபிஅய் வங்கி தனியார் மயமாக்கப்படுவதை எதிர்க்கும் அதன் ஊழியர்களுக்கு நான் துணை நிற்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக அய்டிபிஅய் வங்கி ஊழியர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். 29.10.2026 அன்று எழுதிய அந்த கடிதத்தில், ‘அய்டிபிஅய் வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சி குறித்து அதன் ஊழியர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்தார்கள். அப்போது இந்த விற்பனை குறித்த தங்கள் கவலைகளை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். லாபத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கியை ஏன் விற்க வேண்டும் என்றும், அதன் ஊழியர்கள் மற்றும் வைப்புத்தொகைதாரர்களின் நலன்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்றும் நான் கேட்டேன். ஆனால், அரசு இதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இப்போது அய்டிபிஅய் வங்கியை கனடா நாட்டைச் சேர்ந்த ஃபேர்பேக்ஸ் (Fairfax) என்ற நிறுவனத்துக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அய்டிபிஅய் வங்கி இழப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அது ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த மாற்றத்தக்கு ஊழியர்களாகிய உங்கள் உழைப்பே காரணம்.
பொதுமக்களின் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் மக்களுக்கே சொந்தமானது. தற்போது அய்டிபிஅய் வங்கியில் அரசு மற்றும் எல்அய்சி ஆகியவை இணைந்து 95% பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த விற்பனைக்குப் பிறகு இது வெறும் 34% ஆக குறைந்துவிடும்.
அய்டிபிஅய் வங்கியில் எப்போதும் குறைந்தது 50% பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று அரசு கடந்த 2003-ல் நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி சட்டமாக எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அளிக் கப்பட்ட வாக்குறுதி என்பது இந்திய மக் களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும்.
அய்டிபிஅய் வங்கி தனியார்மயமாக்கப் பட்டால் அதனுடன் சேர்ந்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளும் போய்விடும். தனியார் துறைக்கு இணையாக வலுவான பொதுத்துறையும் வேண்டும் என்பதையே காங்கிரஸ் எப்போதும் நம்பி வருகிறது. பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் அல்ல. அவை தேசத்தை கட்டமைப் பதற்கான கருவிகள். இந்த தருணத்தில், வங்கி ஊழியர்களின் நியாயமான அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாக நான் ஆதரிக்கிறேன்.’ என தெரிவித்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *