புதுடில்லி, அக். 31– இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகள் மற்றும் பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதிகளைத் தவிர்த்து, மற்ற இடங்களில் 2027 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் நேற்று (30.10.2026) அறிவித்தார். இதன்படி, 2027 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை வீடுவீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2027 மார்ச் 1-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி கணக்கெடுப்புக்கான அடிப்படை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும், இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதிகளிலும் இந்த அட்டவணையின்படி கணக்கெடுப்பு நடைபெறாது. மணிப்பூரில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தாங்களாகவே தங்களது விவரங்களைப் பதிவு செய்வதற்கான சுயக் கணக்கெடுப்பு வசதி 2027 ஜனவரி 10 முதல் 24 வரை வழங்கப்படும். இதையடுத்து, மார்ச் 1 முதல் 5 வரை விடுபட்ட விவரங்களைச் சரிபார்த்து திருத்தும் பணிகள் நடைபெறும் என்று இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
