சூத்திரப் பட்டமும், சிறுநீர்க் குடுவையும்! (2) -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

5 Min Read
- Advertisement -

சிறு வயதிலேயே ஜாதி மறுப்பு
தந்தை பெரியார் மனதில் ஆழமாகப் பதிவு!

“அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார்களின் பிள்ளைகளும் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. எழுந்து நின்று பெருவிரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் “போய்விட்டுச் சீக்கிரம் வா” என்பார். பையன் ஓடோடிப் போய் அவன் வீட்டிலேயே, அவன் வீடு சற்றுத் தூரமாய் இருந்ததால் அருகில் உள்ள செட்டியார் வீட்டிலேயே குடித்துவிட்டு வருவான். நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாம் என்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரலை நீட்டும்போது, நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலையாட்டினார்.

இருவரும் ஓடினோம். வாத்தியார், “ராமா, நீ எங்கே ஓடறே?” என்றார். “தண்ணிக்கு அய்யா” என்றேன். “தண்ணிக்கு அவன் கூடப் போறாயே?” என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்குப் போய் தண்ணீர் குடித்து, தண்ணீரை மேலெல்லாம் சிந்திக்கொண்டு வேஷ்டியையும் நனைத்துக் கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர்த் தாகமெடுத்தபோது, ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு, அந்தப் பையனுடன் பேசி வைத்து அவன் தண்ணீர் குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பு, நான் ஒண்ணுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார்.

நான் வாத்தியார் வீட்டிற்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக் கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாகப் போகக் கூடியதுதான். அவனும், நானுமாக அந்த செட்டியார் வீட்டுக்குப் பின்புறமாய்ப் போனோம். அந்தப் பையன் வீட்டிற்குள் ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பது போல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்துக் குடித்தேன்.

அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும், நீ நாயக்கர் வீட்டுத் தம்பியா?” என்றார். “ஆமாம்” என்றேன். “இங்கே தண்ணீர் குடிக்கிறாயே, உங்கள் வீட்டில் ஒண்ணும் சொல்ல மாட்டார்களா?” என்றார். “சொல்ல மாட்டாங்கோ” என்று சொல்லி விட்டு ஓடினேன். அந்தப் பையனும் என் கூட ஓடி வந்தான். அதற்குள் அந்தப் பையனைக் கூப்பிட்டு, “டே பழனியப்பா! அந்த சொம்பைப் கழுவி உள்ளே வைத்து விட்டுப் போடா” என்றார்.

அதே மாதிரியாக அந்தப் பையன் லோட்டாவைக் கழுவி வைத்து விட்டு வீதி வழியாக முன்புறம் பள்ளிக் கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின்புறமாய் பள்ளிக் கூடம் வந்தேன். பின்பு இப்படியே மற்றொரு சமயம் வேதக்காரர் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டில் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறி சாமான்களும் கூட சாப்பிடும்படியாகச் செய்துவிட்டது. இந்த விஷயம் என் ஆச்சாரம் அனஷ்டானம் என்று பார்ப்பனர்கள் போல் நடக்கும் என் வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. என் தாயார் மிகவும் துயரப்பட்டார். சாயுபுமார் பையன்கள் கொடுத்த பண்டங்களைச் சாப்பிட்டு விட்டேன் என்பதும் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது.

என் பள்ளிப் படிப்பு, என் பத்தாவது வயதிற் குள்ளாகவே முடிவுக்கு வந்தது. ஏனென்றால்,என் சிநேகம் தின்னாத புழங்கக் கூடாத ஜாதியினரிடம்தான் அதிகம். அதனாலேயே நான் முரடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கிடப்பட்டேன். அந்த விலங்குகளோடே அந்தப் பிள்ளைகளுடன் கூடித் திரிவேன். ஒரு தடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டை போடப்பட்டேன். அப்போதும் இரண்டுத் தோள்களிலும் கட்டைகளைச் சுமந்து கொண்டு அந்தப் பிள்ளைகளோடேயே விளையாடப் போய் விடுவேன்.  சிறு வயதிலேயே ஜாதி மறுப்பு தந்தை பெரியார் மனதில் ஆழமாகப் பதிய நேர்ந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

“சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால் காரண, காரிய தத்துவ உணர்ச்சியையும், காரண, காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. ‘விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு’ என்று கருதுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்த காரியமானாலும் காரண காரியமறிந்து செய், சரியா, தப்பா என்பதை அந்த காரண, காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டு விடு. எந்த நிர்பந்த சந்தர்ப்பத்திலும் அதன் முடிவுக்கு மரியாதைக் கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை” என்று சுயமரியாதைக்கு ஓர் அழகான விளக்கத்தைத் தந்தை பெரியார் கொடுக்கிறார்.

“இன்றைய சுதந்திரவாதிகள் சுதந்திரத்திற்காக சுயமரியாதையை அலட்சியம் செய்கி றார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலேயே மூட வாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லாதவர்க்கு சுதந்திரமே என்பதுதான் சரியான வார்த்தையாகும். சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் – சுதந்திரம் தேவைப்படும். சுதந்திரத்திற்கு சுயமரியாதைத் தேவைப்படாது. சுயமரியாதைக்காரர்களின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத்தக்கதாய் இருக்குமென்றும் சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொருத்ததாக மாத்திரம் இருக்கும்” என்று தந்தை பெரியார் சுயமரியாதை அற்ற சுதந்திரத்தால் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறார்.

“உதாரணமாக இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகிறது. ஒன்று தோழர் காந்தியின் பெயர். மற்றொன்று தோழர் ஜவஹர்லாலின் பெயர். முந்தையவர் இந்தியாவில் உலக அனுபவமுள்ள சோம்பல் கூட்டத்தார், மத உணர்ச்சியாளர் (மூடநம்பிக்கைக்காரர்கள்), பழமை விரும்பிகள் ஆகியவர்களது உலகில் மதிக்கப் படுகிறவர். அவரது சுதந்திரம் என்பதெல்லாம் பழமையை அனுபவிக்க சுதந்திரம் வேண்டுமென்பதே. பிந்தையவர் உலக அனுபவமற்ற உற்சாகக்கார புதுமை விரும்பிகள் உலகத்தில் மதிக்கப் படுகிறவர் என்பதோடு குறிப்பற்று ஏதோவொரு மாறுதல் வேண்டுமென்பவர். இந்த இரண்டு பேருக்கும் தெளிவான ஞானம் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் சுதந்திரத்தின் யோக்கியதையே சுதந்திரம் விரும்புகிறவர்களின் தன்மையே அவ்வளவுதான். எப்படியெனில் இவர் கோரும் சுதந்திரம் இன்று உலகில் எந்த பாகத்தில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அங்கெல்லாம் ஏறக்குறைய முழு மக்களும் சுய மரியாதை இல்லாமல் இருப்பதைக் காணலாம்” என்று சுதந்திரம் பேசும் தலைவர்கள் சுய மரியாதையைச் சுதந்திரத்திலிருந்து வேறுபட்டு நிற்பதை விளக்குகிறார்.

“காந்தியார் இந்து மதம் புணருத்தானம் ஆவதும், பழைய முறைகளை உயிரப்பிக்கப்படுவதும் சுதந்திரம்” என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எவை வந்ததானாலும் அல்லது இரண்டும் வந்து விட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டு விடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம் “சுய மரியாதை” கொண்டுதான் இருக்கும்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். சுதந்திரமும், சுயமரியாதையும் ஒன்றுதான் என்று கூறிய தந்தை பெரியார் சுயமரியாதை அற்ற சுதந்திரத்தால் என்ன பயன்? என்று வினவுகிறார்.

(வரலாறு தொடரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *